Kshetropasana, Sriperumbudur

Sriperumbudur, a bustling city with narrow, dusty streets, is primarily inhabited by bachelors and industry workers. Despite its industrial vibe, it holds significance as the birthplace of Sri Ramanujar, with the Adhikeshava Perumal Koil being a notable Vaishnavite site known for its grand temple festivals.

During my recent visit to my brother, I was pleasantly surprised to discover Kshetropasana, an ashram nestled amidst temples, a cow shelter, and an old age home. Managed by the Kshetropasana Trust, founded by the late Pujyasri Dr. Prema Pandurang, a respected spiritual leader and devotee of Krishna, the ashram exudes peace and tranquility.

Dr. Pandurang, also a distinguished English professor at Presidency College, dedicated her life to promoting Hindu scriptures and philanthropic endeavors. Her spiritual teachings and bhajans transcended cultural boundaries, resonating globally and leaving a lasting legacy of humanitarianism and Hindu philosophy dissemination.

The serene ambiance of the ashram, surrounded by lush trees and gentle breezes, offers a perfect retreat for relaxation and introspection.

Guruvayur

Mookambika

Like Delhi lotus temple, Pondicherry Arovil the Mookambika temple is constructed in a globe shape. When mantra chanted in the premises, it echos and creates divine feel.

Saibaba mandir

At the entrance, there is a small baba mandir

The campus also have Cow Shelter, Old age home, Ayurvedic hospital. In the noon every day, annadhanam is done.

Prema Panduranga channel https://www.youtube.com/@premapandurang1307

Location: google map

அழகிய கிராமம் – பாப்பாரப்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அக்ரஹாரம், அ.பாப்பாரப்பட்டி, பழைய பாப்பாரப்பட்டி என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் சிறிய கிராமத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய கட்டிடங்கள் நவீனமயமாகிவிட்டபோதிலும் இன்னும் பழமை மாறாத பல வீடுகள் பழைய அழகைத்தாங்கி இருந்தது.

சாலைகள் இருபுறமும் மாமரங்களால் நிரம்பி தோரணம்வேய்ந்தது போல இருந்தது கிராமத்தை நெருங்கும் சாலைகள். கிராமத்தின் இயற்கை அழகு உங்களை காலத்தில் பின்னோக்கி அழைத்துச் செல்லும்.

ஓட்டு வீடும், குடை கம்பி மின்இணைப்பும்., அழகிய திண்ணை, மரத்தூண்கள். கோலம் வரைந்த படிகள், விளக்கு மாடம்.

மாலை நேர உரையாடல்கள், திண்ணைப்பேச்சும்…

டைனமோவும் முகப்பு விளக்கும், முழு ஜெயின் கவர், பிரேக்கிற்கான பிளாஸ்டிக் கவர், பின் மட்காட்டில் வாடகை சைக்கிள் நிறுவனப் பெயர், கேரியர், முன் மட்காட்டிலும் பாரிலும் விளம்பரம், சைக்கிள் பெல் என எத்தனை எத்தனை பழைய நினைவுகளை தாங்கி நிற்கிறது இம்மிதிவண்டி.

அழகான கோலம், மாந்தோரணம், தண்ணீர் குடம் தொங்கும் சைக்கிள், கோலம் வரைந்த திண்னை, எளிய வாசலும் அக்கால கதவும்!

பார் இல்லாத பெண்களுக்கான வண்டி, பாவாடை தாவனி மாட்டாமல் இருக்க கவர், முன்னால் கூடை, பூட்டு, ஒயர் கூடை என எத்தனை எத்தனை பழைய நினைவுகள்.

சீமை ஓடு, வாசல் முதல் தோட்டம் வரை தெரியும் நடை, செம்மண் நிறத்தூண்கள்!

அக்கிரஹாரம், தெரு முனையில் கோயில்!

வெள்ளை, சிவப்பு வர்ணம் தீட்டிய மதில், கலசங்களுடனான கோவில் கோபுரம், கொடிமரம், மரங்கள் நிரைந்த நந்தவனம்.

ஹொய்சாள வம்ச மன்னர்களால் கட்டப்பட்ட பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ ஸ்வாமி திருக்கோவில், மிகுந்த சொந்துக்கள் நிறைந்த கோவில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்.

அஞ்சல் நிலையம்

தட்சிண மந்திராலயம்

வரதராஜ சுவாமி கோவிலுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளது, ஆனால் இங்குள்ள ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவன ஆலயம் 1900களில் உருவானது, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மந்த்ராலயாவின் மிருத்திகை (மண்) கொண்டுவந்து இங்கு பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. மிட்டாதாரரின் கனவில் வந்து இப்படி கோவில் அமைக்க சங்கல்பம் வாய்த்ததாகவும், 7 உடன்பிறப்புகளின் குடும்பங்கள் இந்த பிருந்தாவனம் இங்கு அமையக்காரணமாக இருந்தனர். அவர்களின் தலைமுறையினர் இன்றும் இக்கோவில் விழாக்களில் கலந்துகொள்வது இதன் சிறப்பு. மிருத்திகையில் சாலிக்கிராமம் இருந்தது இன்னும் சிறப்பு சேர்க்கிறது. 1996 ஆம் ஆண்டு, இந்த இடத்திற்குச் சென்றபோது, சுஷ்மீந்திர தீர்த்தர், 40 ஆண்டுகளுக்கு முன்பு மந்திராலயம் பாப்பாரப்பட்டியைப் போலவே இருந்ததாகவும், அதனால்தான் “தக்ஷிண மந்திராலயம்” அல்லது தென்னக மந்திராலயம் என்று அழைத்தார்.

பக்தி பூர்வகமாக இங்கே முக்கியப்பிராணர் (அநுமன்), மத்வர், கோபால கிருஷ்ணர் வழிபடப்படுகிறது. வியாழன் தோறும் தேர், ஆராதனைகள், வருடாந்திர வைகாசி தேர் என மிக விமரிசையாக மாத்வ சித்தாந்த விழாக்கள் நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கிறது.

அழகான மேற்கூரை ஓவியங்கள்.

Read also: https://dvaitavedanta.com/2008/09/29/about-dakshina-sri-guru-raghavendra-at-pauparapatti/

தரிசனம்

இராகவேந்திரர் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் துவைத்த தத்துவ குரு பரம்பரையில் வந்த மிக முக்கியமான துறவி. மத்வாச்சாரியர் தோற்றுவித்த மாத்வ சித்தாந்தத்தின் வழிவந்தவர். இவர் வீணை வித்வான். பக்த பிரகலாதனின் மறு அவதாரம் என்று கருதப்பட்டவர். மத்வர், ஜெயதீர்த்தர், வீயாசதீர்த்தரின் நூல்களுக்கு விளக்கங்கள் வழங்கியதுடன் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, மற்றும் பல வேதங்களின் விளக்க உரை நூல்கள் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் புவனகிரியில் பிறந்தவர், தஞ்சாவூரில் இருந்த மடத்தின் சன்யாசியாகப் பட்டம் பெற்றவர். 1671ல் ஜீவசமாதியடைந்த இவரின் பிருந்தாவனம் ஆந்திரா மாநில மந்திராலயத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர் ஜீவசமாதியடைந்த நாளை ராகவேந்திர ஆராதனையாகக் கொண்டிவருகின்றனர். இன்றும் அவர் உலகில் சூக்ஷம ரூபத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. பிரிட்டிஷாரின் காலத்தில் மந்திராலயத்தை கையப்படுத்த முயற்சி நடந்தபோது சர் தாமஸ் மோன்ரேயுடன் அவர் சூக்ஷம ரூபத்தில் உரையாடியதாகவும் அதனால் கையப்படுத்தும் முயற்சியை அவர் கைவிட்டதாகவும் கேசட்டில் பதிவு இருக்கிறது என்பர். இப்படி பல பல நிகழ்வுகள் அவர் இன்றும் ஆத்ம ரூபமாக நம்முடன் வசித்துவருவதற்கு உதாரணம் உண்டு.
சரி அவரின் முழு கதையையும் சொல்லுவது என் நோக்கம் இல்லை. இன்று வாஷிங்டன் மாநிலத்தில் ரெட்மண்ட் நகரில் கிருஷ்ணவிருந்தாவன் கோயிலில் இராகவேந்திர 352ஆம் வருட ஆராதனை வெரு விமரிசையாக நடந்தது. சுமார் இருநூற்று ஐம்பதுபேர் கலந்துகொண்ட இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் பிரகலாத விக்ரகம் பல்லக்கில் தூக்கி வலம் வந்தனர். பிருந்தாவனம், ராகவேந்திர விக்ரகம், மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு, மத்வாச்சாரியர் (13ஆம் நூற்றாண்டு) எழுதிய துவாதஷா ஸ்தோத்திரம் “ப்ரிணயாமோ வாசுதேவம்” பாடல் பாடி, இராகவேந்திரரின் ஆத்ம சிஷ்யர் அப்பண்ணாச்சாரியர் (இவரின் கதை உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்) எழுதிய மகிமைவாந்த ராகவேந்திர ஸ்தோத்திரம் (கடைசி வார்த்தைபின் உள்ள ஸ்வாரஸ்ய கதையைப் பிறகு பார்க்கலாம்) 12 முறை சொல்லி மகிழ்ந்தனர் பக்தர்கள். இருநூறுபேருக்கும் தரையில் வாழையிலையிட்டு முறைப்படி உணவுபரிமாரி, ஹரி ஸர்வோத்தம! வாயு ஜீவோத்தம! என ஹரி ஸ்மரணையும், போஜன திருப்தியும் அடைந்தனர்.
இந்த நிகழ்வில் எனக்கு மனதில் பதிந்த ஒரு சிறு நிகழ்வும். இராகவேந்திரருக்கு அழகான அலங்காரம் செய்யப்பட்டது. நெருங்க கட்டி தொடுத்த தடி தடியான ரோஜா மலர் மாலைகள், திராட்சை மாலை, ஆப்பிள் மாலை, சாத்துக்கொடி மாலை, கருப்பு பெரியும் பெர்ரி, அக்ரூட் மாலையென விதவிதமான பழங்களில் மாலைகள் அமைத்து அத்தனையும் அழகான ஓவியம்போல், ஒவ்வொரு மாலையும் ஒன்றையென்று நெருங்கி அமைந்து பார்க்க அத்தனை அழகு. அபிஷேகம் முடிந்து திரை விலகியதும், இத்தனை அழகான அலங்காரத்தைக்கண்டு மனம் மகிழ்வில் பொங்கியது, வண்ணங்களாலும், வகை வகையான பொருட்கலாம் அலங்கரிக்கப்பட்ட ராயரின் விக்ரகத்தில் இத்தனை அலங்காரத்தையும் விடவும் ஒளி பொருந்தியதாய், காந்தியோடு புண்ணகைக்கும் விதத்தில் இராகவேந்திரம் நம்மையே பார்ப்பதைப் போல இருந்தது. பக்தி இல்லாதவருக்கும் அந்த அழகிய அலங்காரம் ஓர் ஈர்ப்பை உண்ணடாக்கும், இராகவேந்திரரின் பார்வை அவர்களின் மனங்களைத் தொடும் என்பது உண்மை.
இத்தனை அழகான அலங்காரம் முடித்து வணங்ககிய ஸ்ரீபதி ஆச்சாரியர், தன்னுடைய அலங்காரப் பணியில் முழு நிறுவு பெற்று வணங்கி நின்றார். அந்த நிமிடம் இராகவேந்திரரின் தலையில் மேலிருந்து பூசெண்டு மெல்ல சரிந்தது. அவர் ஒரு நிமிடம் அதிர்ந்தார், உடனடியாக அந்த மலரைப்பிடித்து மீண்டும் அதை வைக்க அவரின் கரம் உடுக்கை இழந்தான் கைபோல் நீளும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரின் செய்கை என்னை வசீகரித்தது. அவரின் உடனடி வெளிப்பாடு பக்தியாக இருந்தது, அந்த மலர் கீழேவிழுந்ததை எண்ணி கண்களை மூடிச் சிலநிமிடம் இராகவேந்திரரிடம் வேண்டினார், அவரின் பாதங்களைத் தொட்டு கும்பிட்டார் அதன் பின்பே அந்த மலரை மீண்டும் சரி செய்தார்.
ஒரு விக்ரகம் பூஜிக்கப்படுவதாலேயோ, அலங்கரிக்கப்படுவதாலேயே, மந்திர உச்சாடனங்கலேயே மட்டும் முழுமை பெருவதில்லை, அதனைத் தொட்ட பூஜிக்கும் பூசாரி அதை விக்ரகமாகப் பார்க்கமாமல் தெய்வமாக ஒவ்வொரு நொடியும் முழுமையாக நம்பும் நம்பிக்கையில் இருக்கிறது. அவர் மலர் விழந்தது என்று மட்டும் எண்ணவில்லை, அது தெய்வத்தின் செயல் ஒவ்வொரு காரியத்தையும் சிரத்தையோடு பெரும் பக்தியோடு, தெய்வம் பிரத்யக்ஷமாக இருப்பதை உணர்ந்து செய்யப்படுகிறது. அவர் பிரத்யக்ஷமாகத் தெய்வத்தைக் காணவில்லை என்றால் அந்தச் சூழலில் எந்தப் பக்தனும் கடவுளைப் பார்க்கமுடியாது, விக்ரகத்தையும் சிலையை மட்டுமே காண முடியும் என்று எண்ணுகிறேன்.
ஸ்ரீபதி அவர்களின் இந்த ஒரு நிமிடப்பிரார்த்தனையில் நான் கடவுளின் பிரம்மாண்ட தரிசனம் கண்டேன்.

எண்ணங்களின் தொடர்சியும், வாழ்கையின் நகர்வும்

என்னுடன் பணிபுரியும் நண்பர் அவர் இல்லத்திற்கு விருந்திற்காக அழைத்திருந்தார்.  அது அவரின் தந்தையும் அவர்களோடு வந்து தங்கியிருந்த சமயம். அவரின் பேச்சு மிகுந்த நிதானமும், அமைதியும் நிறைந்ததாக இருந்தது. அவர் ஒன்றும் ஆன்மீகவாதி இல்லை எனினும் அவருடனான உரையாடல் ஒரு பெரும் அமைதியை அளித்தது. ஒரு ஆன்மீக குருவின் அருகாமையை போல உணர்ந்தேன். அன்று அவர் எனக்கு லூசி கார்னெல்சென் அவர்களின்  Hunting the I  என்ற புத்தகத்தை பரிசளித்தார். (Ref: சச்சிதானந்தம்)

அப்புத்தகத்தை அவ்வாரமே படித்து முடித்தேன்.  பொதுவாக ஆன்மீக புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்து எனக்கு பழக்கமில்லை. ஆயினும் ஒரு வேகத்தில் புத்தகத்தை படித்து முடித்தேன். சில வாரங்களில் வேதா கோவிலில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் இருந்து வந்திருந்த ரமண ஸ்வரூபானந்தரின் உரை நிகழ்ச்சி நடந்தது. நானும், என் மாமனாரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டோம். ‘சும்மா இரு’, ‘வந்த வேலையை கவனி’ என்ற பதங்கள் என் மனதில் பதிந்தது. அதன் தொடர்ச்சியாக சியாட்டில் ரமண மகரிஷி சத்சங்க நிகழ்வுகளில் சிலவாரங்கள் கலந்து கொண்டேன்.

அச்சமயம் இன்னொரு நண்பரின் வீட்டிற்கு இரவு உணவிற்கு சென்றபோது அவர் வீட்டின் வரவேற்பறையில் மிகப்பெரிய ரமண மகரிஷி படம் இருந்தது. அவர் என்னைப் பார்த்து புன்னகைப்பது போல இருந்தது. அவர் ரமணரின் தீவிர பக்தர், அவர் மூலம் ரமணரின் பெருமைகளை அறிந்தேன்.

சில மாதங்களில் வேதா கோவில் மகான்களும் வாழ்வும் வாக்கும் என்ற நிகழ்வு ஏற்பாடு ஆனது. அதில் ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றி பேச எனக்கு விருப்பம் இருந்தது. ஏனோ குழு என்னை ரமணர் பக்கம் நகர்த்தியது.  அதன் பின் பல நாட்கள் தினமும் ரமணரைப்பற்றி பல்வேறு காணொளிகளை கேட்டேன். கிரேசி மோகன், நொச்சூர் வெங்கட்ராமன், சுகி சிவம், இளையராஜா ரமணகீதம், ஆங்கில டாக்குமென்ட்ரி வகை என பல உரைகளை கேட்டேன். சமீப காலமாக The Ranveer Show  கானொளிகளை அதிகமாக கேட்கிறேன். அதுல் ஒரு முறை ஸ்ரீ. எம் என்பவரின் பேட்டி இருந்தது. அதிலும் அவர் ரமணரைப் பற்றி பேசினார்.

ஆர்தர் ஆஸ்பர்ன் எழுதி, தமிழின் பிரபல எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீரமணரும் ஆன்மீகப் பாதையும்’ என்ற 380 பக்க புத்தகத்தை முழுவதும் ஊன்றிப் படித்தேன். ராமணரின் வாழ்க்கை முழுவதும் சொன்ன புத்தகம். Who am I? என்ற புத்தகத்தை சில முறை படித்தேன். பல வாரங்களாக நான் ரமணரோடே வாழ்வதாக உணர்ந்தேன். ரமணரின் பக்தை ஒருவருடன் சில மணிநேரம் அவர்களின் அனுபவம் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்து.  ஆனால் என் தர்க மனம் ரமணரை முழுமையாய் ஏற்க்கவில்லை.  உணர்வுகளாலும் கேள்விகளாலும் மாறிமாறி அலைக்கழித்தது.

books

வேதா கோவில் உரைக்கான நேரம் வந்தது. என் அகந்தையை நொருக்கும் விதமாய் அந்நிகழ்ச்சிக்கு எண்ணி மூன்றே பேர் வந்திருந்தனர்.  ஆனாலும் முழு ஈடுபாடுடன் அந்த உரை நிகழ்ச்சி நடந்தது.  மகா பெரியவரின் வாழ்வின் நிகழ்வுகளை பரத் ராம் சொல்ல சொல்ல மகானின் வாழ்வின் உன்னதங்கள் உணர்ந்தேன். அதனுடே என் மனத்துக்குள் நான் படித்த ரமணரின் பல்வேறு நிகழ்வுகள் கண்முன் வந்து சென்றது.

என்னுடைய அலை பாயும் மனமோ என்னவோ என் உரை எனக்கு முழு நிறைவை அளிக்கவில்லை. திருச்சுழியை திருச்சூர் என்றும், ஸ்கந்தாசிரமத்தை கந்தாஸ்ரமம் என்றும், மொழி பரிச்சயத்தை மொழி அறிவு என்றும் நிறைய தவறுகளோடு அமைந்தது என் உரை. ராமணருடன் இத்தனை வாரங்கள் பயணித்து உள்ளத்தில் நினைத்தும் அந்த உரை நிறைவாக அமையாதது வருத்தம் தந்தது.

இன்னொரு நண்பர் Wisdom Of The Rishis என்ற ஸ்ரீ.எம் அவர்களின் புத்தகத்தை வழங்கினார்.  அப்புத்தகம் உடனே படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. ஈஷா உபநிடதத்தை விளக்கும் அப்புத்தகம் ஸ்ரீ ரமணனின் வாழ்வை, உபதேசங்களை கோடிட்டு விளக்கியது. இப்படியாக ரமணர் மீன்றும் தொடருகிறார்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் ரமணாஸ்ரமம் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.  இப்படியாக ஒன்றன் தொடர்ச்சியாக ஒன்று அமைந்து ரமணரின் சிந்தனை என்னை ஆக்கிரமித்துள்ளது. வாழ்கை என்னும் ஓடம், என்னை எங்கே இட்டுச் செல்கிறது என தெரியவில்லை.  வாழ்வே தவம்!

Ref: விசார சங்கிரகம், வாக்மௌனம், மனோமௌனம், காஷ்டமௌனம்

ரமணர்

வாழ்வின் நோக்கம் முக்தி என்பது அறிவோம், தத்துவமசி என்பதே நம் அறிதல். அவ்வகையில் அந்தராத்மாவை, ஆன்ம ஞானத்தை அடைந்தவர் ரமணர்.

மதுரை அருகில் திருச்சூழி என்ற ஊரில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சுமாராக படிக்கக்கூடிய மாணவர் வேங்கடராமன். அடித்து உதைத்தாலும் தெரியாத அளவிற்கு ஆழ்ந்து தூங்கக்கூடியவர். 12 வயதில் தந்தை இழந்து மதுரையில் உள்ள தன் சித்தப்பாவீட்டில் தன்னுடைய மேல்நிலைப்பள்ளியை தொடர்கிறார். அவர் வீட்டுற்கு வந்த விருந்தினர் ஒருவர் அருணாசலம் பற்றி பேசியது அவருக்கு ஓர் ஈர்ப்பை தந்தது, அதைத் தொடர்ந்து பெரியபுராணம் படிக்கிறார், விளையாட்டில் ஆர்வம் இழந்து, இயல்பான பள்ளிவாழ்கையிலும் ஈடுபாடு அற்றவறாக, உணவு ருசி அறியாதவராக, தவத்தில் அடிக்கடி மூழ்குபவறாக மாறுகிறார். தனது 16 வயதில் ஒரு நாள் மரண அனுபவம் பெருகிறார், தான் உடல் அல்ல என்ற புரிதலை அடைகிறார். தான் என்றும் அழியாக பரம்பொருள் என உணர்கிறார். ஒரு நாள் “வீட்டோடு ஒட்டாமல் சாது மாதிரி கண்ணை மூடிக் காலங் கழிக்கிறவனுக்கு வீட்டுக்காப்பும் சௌகரியமும் என்னதுக்கு?” என்று ரமணரின் அண்ணன் கூறிய வார்த்தை அவரை ஒரு முடிவு எடுக்க வைக்கிறது. ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் திருவண்ணாமலை நோக்கி புறப்படுகிறார்.

நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். இது ஒரு நல்ல காரியத்தில் தான் பிரவேசித்து இருக்கிறது. ஆகையால், இந்த காரியத்திற்கு ஒருவரும் விசனப்பட வேண்டாம். இதை பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம்.

மூன்று நாள் பயணமாக (சுருக்கம் கருதி விவரிக்கவில்லை) திருவண்ணமாலை கோவிலை அடைந்து அப்பா வந்துவிட்டேன் என்று திருவண்ணமலை லிங்கத்தை கட்டித்தழுவிகிறார், அப்போதுதான் அவர் தன் உடலில் உணர்ந்த சூடு தணிந்ததாக உணர்கிறார். கோவிலைவிட்டு வெளியோறி, மொட்டை அடித்துக்கொண்டு தன் உடைகளை துறந்து கோமணம் தரித்து தன்னிடம் இருந்த சில்லரைகளையும் தூக்கி எறிகிறார் (அதன் பின் எப்போதும் பணத்தை தொடவில்லை). மழை பொழிகிறது, அதில் நனைகிறார்.

கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார். அங்கு சிறுவர்கள் கல்லெரிந்து தொந்தரவு செய்ய, அருகில் இருந்த பாதாள லிங்கத்தில் தியாணிக்கிறார், இப்படி சில (சில குறிப்புகள் ஆறு வாரம் என்கிறது) வாரங்கள் அங்கேயே தியானிக்கிறார். சேஷாத்திரி ஸ்வாமிகள் அவருக்கு அவ்வப்போது உணவு கொடுக்கிறார், உதவுகிறார். அங்கே பூச்சியும், எலியும் இருக்கும் பகுதியில் தன்மெய்யுணர்வற்று இருந்த அவரை காப்பாற்றி குருமூர்த்த பகுதியில் அமர்த்துகிறார்கள். பிராமண ஸ்வாமி என்றும் மௌன சாமியாராக எல்லேராருக்கும் அறிமுகம் ஆகிறார், கோவில் அபிஷேகப்பால் மட்டும் அருந்தி வாழ்கிறார். எப்போதும் தவம், மௌனம் என்றே வாழ்கிறார்.

மூன்று வருடங்கள் கழித்து அவரின் அம்மா தேடிவந்து அழுது புலம்பபுகிறார், தன்னுடனே வரச்சொல்லி கெஞ்சுகிறார், மௌனமாகவே இருந்தவர் தன் பதிலை ஒரு காகிதத்தில் எழுதி கொடுக்கிறார்.

அவரவர் பிராப்த பிரகாரம் அதற்கு ஆனன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது, என் முயற்சிக்கிணும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது, இதுவே தின்னம், ஆகலின் மௌனமாய் இருக்கை நன்று.

ரமணர்

17 வருடங்கள் திருவண்ணாமலையில் உள்ள விருபாக்ஷி குகையில் தவ வாழ்வு வாழ்கிறார். பழனி சுவாமி என்பரும் இவருடன் இருக்கிறார். மதுரையில் இருந்து வந்து மூன்று ஆண்டுகள் பிறகே மெல்ல பேசவும், பக்தர்களின் கேள்விகளுக்கு எழுத்துமூலமும் பதில் அளிக்கிறார். தன்னுடைய 21ஆவது வயதில் சிவ பிரகாச பிள்ளை என்பவர் கேட்ட கேள்விகளுக்கு ரமணர் அளித்த பதில்களே பின்னாளில் “நான் யார்?” என்ற புத்தகமாக வெளிவந்தது. விருபாஷி குகைக்காலங்களில் நிறைய புத்தகங்களையும் படிக்கிறார், ஒரு வேளை பிக்க்ஷைக்கு சென்று வருகிறார்.

நான் யார்?

  • உடல் நான் அல்ல. எண்ணங்களே மனம். எண்ணங்களை யாருக்கு உண்ணாயின என்றுபார்க்க வேண்டும். ‘நான் எழும் இடம் ஏது?’ என்ற ஆத்ம விசாரமே அந்தராத்மாவை அடிய வழி செய்யும்.
  • கயிறை பாம்பு என்று எண்ணி பயப்படுபவன், அது கயறு என்று அறிந்த பின் பாம்பு என்ற பயம் போவது போல நாம் உடல், மனம் அல்ல என்ற தெளிவு வந்தால் தான் என்பதை அறியலாம் என்றார்.
  • பிராணாயாமம், நியம்ம, பூஜை எல்லாம் எண்ணம் ஒருமைப்பட உதவும் உபாயம், ஆத்ம விசாரம் தான் அந்த அந்தராத்மாவை அடைய ஒரே வழி.
  • முடியுமா, முடியாதா என்பது அல்ல கேள்வி, விடாப்பிடியாக ஆத்ம விசாரம் செய்தால் நன்மை உண்டாகும். உலகியல் விழயங்களுக்கு கவலைகொள்வது இரயிலி பாரத்தை தலையில் வைத்துக்கொண்டு செல்வது போல.
  • விசாரி. முழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளிலும் சாக்ஷியாய் இருப்பது எது?
  • வெய்யில், நிழல் போல நாம் தூக்கம், முழிப்பு என இருக்கிறோம். தன் யதார்த்த சொரூபத்தை தெரிந்துகொள்வதே முக்தி. சச்சிதானந்தம்.
  • ஞான திருஷ்டி என்பது மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே.
  • சும்மா இரு, வந்த வேலையை கவனி!
  • நான் எழும் இடம் ஏது என்ற ஆத்ம விசாரம்
    நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
    நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
    ஞான விசாரம் இது உந்தீ பற.
நான் யார்? ரமணர்

பல பண்டிதர்களும் அவரிடம் வருகிறார்கள், மௌனமே அவர் உபதேசம், நயன தீக்ஷையில் நிறைய கேள்விகளோடு வருபவரும் மௌனமாய் அமர்ந்து செல்கின்றனர். சம்ஸ்கிருத பண்டிதர் காவ்ய கண்டர் கனபதி முனி, வேதங்களை கற்று அறிந்துவிட்டேன் ஆனாலும் எனக்கு தெளிவு இல்லை என்று சரணடைகிறார், இரமணரில் உபதேசத்தால் இன்புற்று வேங்கடராமன் என்ற பெயரை ரமண மகரிஷி என உலகுக்கு அறிவிக்கிறார். உலகெங்கிலும் இருந்து இவருக்கு பல பக்தர்கள் வருகிறார்கள். ரமணரைப்பற்றி தமிழில் இருப்பதைவிட ஆங்கிலத்தில் பல தகவல்கள் இருப்பதைக்கண்டேன். இன்றும் இந்தியரல்லாத பெரும் பக்தர் கூட்டம் இவருக்கு இருக்கிறது.

Deham Naham; Koham, Soham!

மக்கள் அதிகம் வர விரூபாஷ குகையிலிருந்து ஸ்கந்தாஸ்ரம் வருகிறார். (37 வயதில்) அவருடைய தாயரும் அவருடன் வந்து இருக்கிறார், சன்யாசம் மேற்கொள்கிறார், 5 வருடங்கள் அவருடன் வாழ்ந்து மஹா சன்னதி அடைகிறார், எறியூட்டப்படும் வழக்கத்துக்கு மாறாக சமாதியமைகிறது, பெண்ணுக்கு சமாதியும் கோவிலும் அமைக்கிறார். ஆண், பெண், சாதி, மத, தேச பேதம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை.

ஆசிரமித்திற்கு கொடுக்கப்பட்ட பசு கன்று திருவண்ணமாலையில் ஒருவர் வீட்டில் வளர்க்கப்படுகிறது, ஒரு நாள் பசுவையும் கன்றையும் ரமணரிடம் அழைத்துவருகிறார்கள், மறுநாள் முதல் அந்த கன்றுக்குட்டி ரமணரைக்காண தினமும் ஓடிவருகிறது, அந்த கன்றுக்குட்டி பின் ஆசரமத்திலேயே வளர்க்கப்பட்டு லக்ஷ்மி என்று அழைக்கப்படுகிறது, பின் அதன் சமாதியில் கோவிலும் அமைக்கப்படுகிறது, இப்படியாக அவர் மனிதர்கள் என்று மட்டும் இல்லாமல் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருக்கிறார்.

சமையலில் உதவி செய்கிறார். மிகுந்த நகைச்சுவையுணர்வு கொண்டவராக இருக்கிறார், திருடவரும் குரங்கை ஆசிரம மக்கள் விறட்ட ‘எடுத்துட்டு ஓடிடு!’ என குரங்குடன் பேசுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், சம்கிரத மொழிகளை அறிந்தவராக இருந்திருக்கிறார். ஒரு முறை படித்தால் அதை அப்படியே நினைவில் கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருந்திருக்கிறார்.

ஒரு முறை ஆஸ்ரமத்தில் திருடர்கள் புகுகிறார்கள். அவரை அடித்து உதைத்து போகிறார்கள். ஆனால் அதைப்பற்றி பெரியதாய் அலட்டிகொள்ளாமல், ஜென்மாவின் சரீர அவஸ்தைகளை சலனமில்லாமல் அனுபவிக்கிறார். தன்னுடைய 50 வயதில் நிறைய புத்தகங்கள் எழுதுகிறார், சில புத்தகங்களை மொழிபெயற்கிறார், இவரின் வாய்மொழிகளின் தொகுப்புகள் பல புத்தகங்களாக வந்துள்ளன. 60 வயதில் தன்னுடைய தாயின் மாத்ருபூதேஷ்வர் கோவில் முழுமையடைகிறது. தன்னுடைய 71 வயதில் புற்று நோய்காய் பக்தர்களின் அடத்தால் மயக்க மருந்து இல்லாமல் உடலில் மூன்று முறை அறுவைசிகிக்சை செய்துகொள்கிறார், புற்று நோய், மூட்டுவலி என உடல் வலிகள் இருந்தபோதிலும், பக்தர்களின் தரிசனத்தையும் செய்து, எந்த புலம்பலும் இன்றி சாரீர இம்சைகளை அனுபவித்திருகிறார். தன்னுடைய உடலைப்பற்றியே கவலை கொள்ளாமல் வாழ்கிறார்.

அவர் சொன்னவையைவிட, எழுதியதைவிட அவருடன் இருந்தவர்களின் அனுபவம் அவரை இன்னும் அதிகம் உயர்த்துகிறது. சூரி நாகம்மா அவர்கள்ன் Letters from Ramanashramam என்ற அவரின் கடிதங்கள். Day by Day என்ற புத்தகமாக வந்த தேவராஜ முதலியார் அவர்களின் நாட்குறிப்பு தகவல்கள் என அவரோடு இருந்தவர்களின் அனுபவங்கள் மூலம் நாம் ரமணரைப்பற்றி மேலும் அறியமுடிகிறது. யோகிராம் சூரத்குமார், இளையராஜா என அவரின் பலப்பல சிஷ்யர்கள் அவர் புகழை ஓங்குவிக்கிறார்கள்.

உலகெங்கும் ரமணாஸ்ரம சத்சங்கங்கள் நடக்கிறது, நியூயார்க் நகரில் பெரிய தியானக்கூடம் இருக்கிறது, இங்கு சியாட்டில் பகுதிகளிலும் வராந்திர சத்சங்கள் நடக்கின்றன.

என் உரை: வேதா கோவில் – மகான்களும் வாக்கும் – ரமணர்

Ref Book: ஶ்ரீ ரமணரும் ஆன்மீகப் பாதையும்.pdf

Video References : Speeches on Ramanar – Youtube Playlist

Books

  • அருணாசல தீபதர்சன தந்துவம்
  • அருணாசல மகாத்மியம்
  • அருணாசல அக்ஷரமனமாலை
  • அருணாசல நவமணிமாலை
  • அருணாசல பதிகம்
  • அருணாசல அஷ்டகம்
  • அருணாசல பஞ்சரத்னம்
  • உபதேச சாரம்
  • ஆத்ம வித்யா
  • உபதேசவுந்தியார்
  • உள்ளது நாற்பது
  • உள்ளது அநுபந்தம்
  • அப்பளப்பாட்டு
  • ஆன்மவித்தை (கீர்த்தனம்)
  • பகவத்கீதாசாரம்
  • தக்ஷிணாமூத்தி தோத்திரம்
  • விவேக சுடாமணி
  • ஆத்மபோதா
  • நானார்
  • விசாரசங்கிரகம்
  • உபதேசமஞ்சரி
  • ரமணகீதா – கனபதி முனி
  • Mountain Path – Arthur Osborne, Paul Brenden

சியாட்டில் பாகவதம்

இறைவனுபவங்களாகவே என்னைச் சூழுகிறது. எது என்னை ஈர்க்கிறது என்று தெரியவில்லை, கடவுள் உண்டா என்றெல்லாம் பல நேரங்களில் கேள்விகேட்பதுண்டு.  சமயச்சடங்குகளின் மீது பல நேரங்களில் ஒரு சலிப்பு ஏற்படுவதும் உண்டு, ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை இப்படியான சத்சங்கங்களிலேயே உந்தித் தள்ளுகிறது. திருமந்திரம் கற்கும் வாய்ப்பு, மாணிக்கவாசகரை உணரும் பாக்கியம், தேவாரத்தில் திளைக்க, பிரபந்த சுவை அறிய, வேதம் கற்க என என்னுடைய முன்முனைப்பு இல்லாமலே ஏதோ ஓர் சக்தி என்னை இங்கெல்லாம் அழைத்து செல்கிறது.

இப்படியாகச் சமீபத்தில் பாகவத சப்தாகம நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  புராணம் என்றாலே பல்லுபோன பிறகு கேட்பதென்றும் கோவிலில் உபன்யாசம் செய்வது என்றும், இந்தச் செயற்கைநுண்ணறிவு உலகில் இந்த அரத்த பழயசமாசாரங்களில் நேரம் செலவிடுவதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம் என்று எண்ணுவதும் உண்டு. 

ஆனால் மெல்ல மெல்ல அமைதியான, நிதானமான, கூட்டு வழிபாடுகளில் ஈர்க்கப்பட்டு மனம் அடையும் மோன நிலையை, உலகை மறந்து, ஓர் உவகையுணர்வில் திளைத்து, தன்னை மறந்த நிலையை அடையும் அனுபவங்களைச் சமீபகாலமாக நிறைய பெறுகின்றேன். எனக்கு வயதானது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம், மேலும் அருள் நிறைந்த மனிதர்களின் அனுக்கமும் காரணமாக இருக்கலாம். எதுவென்று யாமறியேன்.

சியாட்டில் நகரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பாகவதக்கதை கேட்பது முதலில் எனக்குக் கொஞ்சம் ஒட்டவில்லை ஆனாலும் கதைகளும், பாடல்களும் நிறைந்த அழகிய ஓர் அனுபவம் என இதனை நண்பர் அறிமுகம் செய்தார். அதில் ஈர்க்கப்பட்டு நானும் கலந்துகொண்டேன்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய… என ஒற்றை ஸ்வரத்தில் அனைவரும் சொல்ல அந்த இடமே இறையருள் நிறைந்த இடமாக மெல்ல மாறுவதை உணர முடிந்தது.  முழுமையான நிசப்தம், ஒற்றை குரலில் ஆ…ஊ…ம்… என பீஜாக்ஷரம் ஒலிக்க, மெல்ல அதிர்ந்து பொருட்கள் அசைந்து சமநிலை பெறுவதுபோல் உள்ளம் அமைதியில் அடங்கி நின்றது. 

மொட்டு மெல்ல அவிழ்ந்து பூவாவதைப் போல மெல்ல, இனிய குரலில், சிரித்த முகத்துடன் பாகவத கதையை சொல்லச்சொல்ல அனைவரும் கேட்க, அங்கே எல்லோரின் எண்ண ஓட்டமும் ஒன்றாகி, அந்தராத்மாக்களின் சங்கமமாக, யுகாந்திரமாகக் கேட்ட விஷயங்களின் நினைவலையாக, மெல்ல மெல்ல அந்தக்கதைகளுக்குள்ளும் அந்தக் காலகாட்டத்துக்கும் அம்மனிதர்களின் எண்ண ஓட்டத்துக்குள்ளும் நுழைந்துவிட்டேன். 

சாத்வித, ரஜோ, தாமச என முக்குணங்கள், காம, குரோத, லோப, மோஹ, மத, மாச்சர்யம் என்ற மன அவஸ்தைகள் என ஒவ்வொரு செய்தியும் கதைகளின் ஊடே வெளிப்பட, தெரிந்த தகவல்கள் நாருசித்த பாலச்சுளையை மீண்டும் சுவைப்பதுபோல உணர்வு, நான் உடல் அல்ல! பரமாத்ம அனுபவம், அகந்தையில்லா நிலையென உணர்ந்து, எனக்குள் எண்ணங்கள் விலகி, நிர்சலமாக, ஸ்தித பிரக்ஞனனாய், அன்னை சொல்லும் கதையைக் கேட்டு ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி என நகர்ந்து சொல்லும் குழந்தைப்போல.  அந்த உணர்வில் ‘நான்’ இருக்கையில் மெல்ல ஒரு பாடல் இசைக்கப்பட அதனோடு இனிமையாய் தாளம் சேர அங்கே ‘நான்’ துரியத்தை அடைந்துவிடுவதைப்போலத்தான் உணர்ந்தேன்.

எல்லோரும் சேர்ந்து சிலமுறை ஓம் நமோ பகவதே வாசுதேவாய என மந்திரம் ஓத நா இனித்தது கண்கள் தேஜசில் ஒளிர்ந்தது, மேனியில் இறையின் ஸ்பரிசம் சேர்ந்தது, சுகந்தத்தை நுகர்ந்தேன், ஓங்காரம் காதுகளில் தேவகானமாகியது, தன்மாத்திரைகளை, ஞானேந்திரிய, பஞ்சபூதங்களும் முழுமையில்.

பாகவதம் வெறும் கதைகேட்பதல்ல அதனைவிடவும், அது தரும் சத்சங்கம், இறை உணர்வு, அனுபவம் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.  வெண்கலமோ, வெள்ளியோ, தங்கமோ துலங்கத் துலங்க மின்னுவதைப்போலப் பாகவதம் மனதை துலங்கவைக்கும் உபாயம் என நிதர்சனமாய் அறிந்தேன். இவ்வனுபவம் இச்சியாட்டிலில் வாய்த்ததில் ஆனந்தம், என் பாக்கியம் .

பல பாகவத சப்தாகமங்களில் கலந்துகொண்ட என் அன்னை பலமுறை என்னையும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள பரிந்துரை செய்துள்ளார், அப்போதெல்லாம் அன்னையளவுக்கு நான் ஒன்றும் அத்தனை பக்திமானல்லவே என்று எண்ணுவேன். இதெல்லாம் 19 நூற்றாண்டு மனிதர்களுக்கு என்றிருந்தேன், ஆனால் என் அன்னையின் ஆசிதான் என்னை இவ்வனுவம் பெறவைத்தது என உள்ளூர உணர்ந்தேன். என் அன்னையின் புன்னகை மின்னலாய் வந்து சென்றதை உணர்ந்தேன்.

அப்பேரருளாளன் எனக்காக என்ன வைத்திருக்கிறான் என்பதை நானறியேன்.  ஆனால் நான் இகலோக சுகங்களில் அடையாத ஓர் உணர்வை இந்தப் பரலோக தத்துவங்களில் திளைத்ததில் அடைந்தேன் என்பது மெய்.

ஈஸ்வரோ ரக்ஷது. ஓம் நமோ பகவதே வாசுதேவாய…

இந்து மதமும் திருக்குறளும்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

குறள் 1

இறை நம்பிக்கையில் தொடங்குகிறது திருக்குறள்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

குறள் 10

சம்சாரசாகரம் என்கிறது இந்து மதம். ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு

குறள் 18

இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா?

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை

குறள் 55

எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இவை இந்துமதப் பண்பாடு.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

குறள் 398

ஒருவன் கற்ற கல்வி `ஏழு பிறவிக்கும்’ பயன் கொடுக்கும் என திருவள்ளுவர் கூறுகிறார். ஏழு பிறவி என்பது இந்து மதத்தில் கூறப்பட்ட கருத்தாக உள்ளது. மற்ற எந்த மதமும் ஏழு பிறவியை ஏற்பது இல்லை. இந்து மதம் மட்டுமே ஏழு பிறவி மனிதனுக்கு உள்ளதாகக் கூறுகிறது.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

குறள் 62

ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்க வில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

குறள் 167

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள் – மு. வ. இந்த குறளின் மூலம், பொறாமை பிடித்த ஒருவனிடமிருந்து ஸ்ரீதேவி விலகுவது மட்டுமல்ல, அவளது சகோதரியான மூதேவியை விட்டு செல்வாள் என்று நமக்கு கூற வருகிறார் வள்ளுவர். ஸ்ரீதேவியும் மூதேவியும் இந்து மத நம்பிக்கை.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

குறள் 260

ஒருவன் புலால் உண்பதை தவிர்த்தால், அனைத்து உயிரினங்களும் அவனை வணங்கும் என்பதே இந்த குறளின் பொருள். புலால் உணவை வேண்டாம் என்று வலியுறுத்த புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார் வள்ளுவர். இந்து மதம் புலால் மறுத்தலை வலியுருத்துகிறது.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கோள் வது.

குறள் 262

தவம் செய்வது கூட முற்பிறவியில் நல்வினை கொண்ட மக்களாலேயே செய்யவல்லது என்பதே என் வள்ளுவனின் கருத்து. தவத்தில் சிறந்த பல முனிவர்களையும் ரிஷிகளையும் கொண்ட மதம் இந்து மதம். அப்படியிருக்க இந்த குறளில் வரும் தவம் என்ற சொல் வேறெந்த மதத்தினை குறிக்க முடியும்? அதுமட்டுமின்றி இந்த குறளின் மூலமாக இந்து மக்களின் நம்பிக்கையான முற்பிறவியின் பலனை பற்றியும் கூறுகிறார் அல்லவா?

ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

குறள் 380

நீ விதியை வெல்ல எது செய்தாலும் விதியே வந்து உன் முன் நிற்கும் என்று கூறும் வள்ளுவரின் குறள். விதி வலியது என்று நம்பும் மக்கள் இந்து மத வழி வந்தவர்கள். இங்கு ஊழி என்பது விதியையே குறிக்கும்.

மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளாள் தாமரையி னாள்.

குறள் 617

இந்த குறளின் மூலமாக சோம்பேறியாக சுற்றி திரிபவனிடம் மூதேவியும், உடல் உழைப்பு கொண்டவனிடம் ஸ்ரீதேவியும் குடியிருப்பாள் என்பதை எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.

இந்த குரலில் தாமரையிலாள் என்று போற்றப்படுவது யார் என்று தெரிகிறதா? தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவியையே இந்த குறள் குறிக்கிறது. ஸ்ரீதேவி எந்த மத கடவுள் என்று அறிவோம் அல்லவா?

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

குறள் 610

அடியால்‌ உலகத்தை அளந்த கடவுள்‌ தாவிய பரப்பு எல்லாவற்றையும்‌ சோம்பல்‌ இல்லாத அரசன்‌ ஒருசேர அடைவான்‌. -மு.வ உரை. வாமன அவதாரத்தில் திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்பதையே அடியளந்தான் என்கிறார் திருவள்ளுவர். சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு போக 8 மணி நேரம் எனக்கொண்டு உலகம் சூழல 3 x 8 = 24 என்ற வியாக்கியானம் வழங்கி இதை மழுப்புவது ஏற்கும்படி இல்லை.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

குறள் 269

தவம்‌ செய்வதால்‌ பெறத்தக்க ஆற்றலைப்‌ பெற்றவர்க்கு (ஓர்‌ இடையூறும்‌ இல்லையாகையால்‌) யமனை வெல்லுதலும்‌ கைகூடும்‌. -மு.வ உரை. இது மார்கேண்டேன் எமனை வென்றதை கூறுவது.

மிருகண்ட மகரிஷி சிவபெருமானிடம் குழந்தை வேண்டி தவம் இருந்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான், “மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழப்போகும், ஆனால் முட்டாள்களாக இருக்க போகும், 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது பதினாறு வருடங்களே ஆழப்போகும் புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?” என கேட்டார்.

அதற்கு மகரிஷி “கடவுளே, அந்த புத்திசாலி மகனை மட்டும் கொடுங்கள்” என்றார், 16 வயதில் கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான். பஜனைகளை பாடி, நடனம் ஆடியும் கூட அவன் வழிபாட்டை தொடர்ந்தான். சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார். அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது அந்த சிவலிங்கம் வெடித்து, அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறினார். எமனை நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான், “எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! அவன் என் மனம் கவர்ந்த பக்தன். இவன் சிரஞ்சீவியாக வாழ்வான்” என கூறினார்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

குறள் 580

யாவராலும்‌ விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர்‌, பழகியவர்‌ தமக்கு நஞ்சு இடக்கண்டும்‌ அதை உண்டு அமைவர்‌. இது சிவன் நஞ்சுண்ட கதை. நீலகண்டன், நஞ்சுண்டேஸ்வரர் என போற்றப்படும் சிவனின் கதை.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி .

குறள் 25

ஐந்து புலன்களாலாகும்‌ ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின்‌ தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்‌.

ஐந்து புலன்களை அடக்கி, மெய்யறிவு பெற்றவர் கௌதம முனிவர்; அவருடைய மனைவி அகல்யை. இந்திரன் காமவசமாகி முனிவரின் மனைவியை கள்ளத்தனமாக கூடிச் சுகித்தான். அதை அறிந்த முனிவர் இந்திரனை சபித்தார். அப்படி இந்திரனுக்கு முனிவர் கொடுத்த சாபம் தான் உடல் முழுதும் ஆயிரம் பெண்குறிகள் கொள்வதாகும். உடலெங்கும் ஆயிரம் பெண்குறிகள் கொண்டு வெளியே கூட செல்ல முடியாத வெட்கி கூனும் நிலைக்கு ஆளானார் இந்திரன். சாபம் பெற்ற இந்திரன் அவமானம் அடைந்தான். ஐந்து புலன்களையும் அவன் கட்டுப்படுத்த முடியாததனால் உண்டான துன்பம்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

குறள் 899

உயர்ந்த கொள்கையுடைய பெரியார்‌ சீறினால்‌, நாட்டை ஆளும்‌ அரசனும்‌ இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்‌- மு.வ உரை. 

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். அவன் ஒரு நாள் ரம்பை, ஊர்வசி, மேனகா, திலோத்தமை ஆகிய தேவ மாதர்களின் நடனத்தில் லயித்துத் தன்னை மறந்திருந்தான். அப்போது அவனைக் காண தேவ குரு பிரகஸ்பதி வந்தார். நடனத்தில் மூழ்கியிருந்த தேவேந்திரன் வியாழ பகவான் வந்ததைக் கவனிக்கவில்லை. இந்திரனின் அலட்சியத்தால் வெறுப்புற்ற குரு பகவான் தேவலோகத்தை விட்டு வெளியேறினார். நடனம் முடிந்த பிறகு பிற தேவர்கள் மூலம், குரு வந்ததையும், தனது அலட்சியச் செயலால் அவர் தேவலோகத்தை விட்டு நீங்கிச் சென்றதையும் அறிந்தான் இந்திரன். இச்செயலார் இந்திரனின் பதவி பரிபோனது.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

குறள் 935

சூதாடு கருவியும்‌, ஆடும்‌ இடமும்‌, கைத்திறமையும்‌ மதித்துக்‌ கைவிடாதவர்‌, (எல்லாப்‌ பொருள்‌ உடையவராக இருந்தும்‌) இல்லாதவர்‌ ஆய்விடுவார்‌. மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதாடி தன் தேசத்தை இழந்து காட்டில் வாழ நேர்ந்திட்ட கதை.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

குறள் 72

அன்பு இல்லாதவர்‌ எல்லாப்‌ பொருளையும்‌ தமக்கே உரிமையாகக்‌ கொண்டு வாழ்வர்‌; அன்பு உடையவர்‌ தம்‌ உடம்பையும்‌ பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்‌. சிபிச்சக்கரவர்த்தி கதை. புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

குறள் 1062

உலகத்தைப்‌ படைத்தவன்‌ உலகில்‌ சிலர்‌ இரந்தும்‌ உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால்‌, அவன்‌ இரப்பவரைப்‌ போல்‌ எங்கும்‌ அலைந்து கெடுவானாக! கடவுள் உலகைப் படைத்தார் என்கிறது இக்குறள்.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

குறள் 1103

தாமரைக் கண்ணன் என்பது இந்து சமயம் சொல்லும் உவமை.

யாழ்பாணம்
ஓவியர் மணியம், 1955

Reference: https://newindian.activeboard.com/forum.spark?aBID=134804&p=83&topicID=64962861&commentID=65629899

வேதா கோவில் சியாட்டில் மார்கழி உற்சவம் 2023

“மாதங்களில் நான் மார்கழி” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.  மார்கழி பக்திக்கான மாதம், கலைக்கான மாதமும் கூட. வாசலில் விரியும் கோலங்கள் தொடங்கி, பாட்டுக்கச்சேரிகளும், நடன நிகழ்வுகளும், பஜனைகளும் என்று களைகட்டும்.  சியாட்டில் நகரத்திலும் மார்கழி உற்சவமே. எல்லா கோவில்களிலும் சிறப்பு நிகழ்வுகள் நடக்கின்றன. அதிகாலை பூஜைகள் நடக்கின்றன.  அந்த வகையில் பல ஆண்டுகளாக வேதா கோவில் மார்கழி உற்சவம் நடத்திவருகிறது.  மார்கழியில் 29 (சிலவருடங்கள் 30) நாட்களும் மாலையில் இசை, நடன நிகழ்வுகள் நடைபெருகிறது.  இளம் கலைஞர்கள், விர்பன்னர்கள் எனப் பலரும் பங்கேற்கும் ஸ்ரேஷ்டமான மேடை.

இந்தப் புதன் கிழமை ஜனனி ராமச்சந்திரன் அவர்களின் நடன நிகழ்வைக் கானும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. வார நாட்கள் என்பதாலும், விடுமுறைக்காலம் என்பதாலும் சிலரே அரங்கில் இருந்தனர். ஆனால் அதைப் பற்றிய எந்தக்கவலையுமின்றி இறைவனுக்கு அற்பனமாக, ஆத்மார்த்தமாக ஜனனி அவர்களின் நடனம் அமைந்தது.

இந்திய நடனங்களில் பரதநாட்டியம் கூடுதல் சிறப்பு பெருவது, அது முகபாவங்களுக்கு வழங்கும் முக்கியத்துவமும், இசைக்கு ஆடுவது என்று இல்லாமல், பாடல் வரிகளின் பொருளுணர்ந்து, பாடலின் பொருளை அதன் உணர்வையும் கடத்துவதால். ஜனனி அவர்களின் ஒன்னரை மணிநேர நடன நிகழ்வு, ஒரு யோக உணர்வைத் தந்தது என்றால் மிகையில்லை. அவரின் முழுமையான முகபாவங்கள், தேர்ந்த நடன அசைவுகள், பாடலின் பொருள், இறைவன் சன்னதியென எல்லாம் சேர்ந்து மிகுந்த நிறைவை வழங்கியது. ஓரங்க நாடகமா? மௌனமாக நடக்கும் கதாகாலட்சேபமா? சுழன்று! பறந்து! ஆடித்திரியும் திளைப்பா எனக் கேட்கத்தோன்றும்.

கலைஞர்கள் கலையை நேசிக்கிறார்கள். கலையில் ஈடுபடுவது மட்டுமே அவர்களுக்கு மகிழ்வையும் நிறைவையும் தருகிறது. பெயர், புகழ், செல்வம் என்பவை அந்த மகிழ்வின் மேலாகக் கிடைக்கும் பேருகள். கலையை இரசித்து, ஈடுபாடுடன் கொண்டாடி மகிழும் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நம்மையும் அந்த ஆனந்தத்தில் முழுமையாக ஈடுபடவைத்துவிடுகிறது.  ஏதோ நினைவுகளில், எண்ண மோதல்களில் அலைந்துகொண்டிருக்கும் மனதை கலை நம்மையரியாமல் மெல்ல ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று, அமைதியை, நிதானத்தை, மனதுக்கான சந்தோஷத்தை வழங்கிவிடுகிறது.  பீமன், வாசுகி, ஆர்க்கயாவிடம் ரசகுண்டத்து அமுதம் உண்டு பலம் பெருவது போலக் கலை நம்மைத் தெளிவுகொடுத்து, புத்தெழுச்சியை தரவல்ல இரசவாதம் செய்யக்கூடியது.

பெரும் அரங்கில், மிகுந்த அலங்காரங்களுடன், ஒளி வெள்ளத்தில் பரதநாட்டிய நிகழ்வைக் காண்பதற்கும், இறைவன் சன்னதியில் அருகாமையில் காண்பதற்கும்தான் எத்தனை வித்யாசம்.  வேதா கோவில் நிற்வாகத்திற்கு கோடான கோடி நன்றிகள்.  இது போன்ற நிகழ்வுகள் ஒரு நல்ல வாய்ப்பு. சுழன்றுகொண்டிருக்கும் அன்றாடங்களிலிருந்து நம்மை விடுவிக்க நம் சமூகம், கோவில்கள் தரும் அறிய அமுதம் இந்நிகழ்வுகள். இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

“அடைக்கலம்!” என்ற ஒற்றை வார்த்தைக்கு ஜனனியின் ஐந்துவகை அபினயம், “தாமதம் செய்யலாமோ!” என அவர் வெவ்வேரு வகையில் கேட்கக் கேட்க நாமும் அந்த நிகழ்வுக்குள் ஒரு கதாபாத்திரமாய் மாறி மனம் அந்தக் கேள்விகளுக்கு பதில்சொல்லத் தொடங்கிவிடுகிறது. மயிலும், குயிலும் தென்றலும் நொடிப்பொழிதில் மாறி மாறி வருவதும், அவையே வெவ்வேரு உணர்வுகளோடு நம்மைத் தொட்டுச்செல்லுவதையும் போன்ற ஒரு பிரமை. அந்த மேடை சிலவேளைகளில் சின்னதாய் மாறிவிடுகிறது அடுத்த நொடியே அது மிகப்பிரம்மாண்டமாய் மாறிவிடுகிறது. அதே சரீரம் சில வேலைகளில் வாமனனாகவும், பிரம்மாண்ட நரசிம்மனாகவும் நொடிபொழுதில் எப்படித்தான் மாற முடிகிறதோ? இத்தனை நேர்த்தியாக நடனம் செய்யவும், முகபாவங்களை, செம்மையை கொண்டுவரவும் எத்தனை உழைப்பும், பயிற்சியும் செய்திருக்க வேண்டும் என்று எண்ணி வியந்தேன். வாழ்த்துக்கள் ஜனனி ராமச்சந்திரன். வேதா கோவில் நிர்வாகத்திற்கும், விழாக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

https://www.facebook.com/photo?fbid=786256566874031&set=a.335078121991880

சுவாமியே சரணம் ஐயப்பா

https://www.facebook.com/events/1531526624353743

கார்த்திகை மாதம் ஹரி-ஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்பனுக்கான மாதம். ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் எங்கும் முழங்கும். பக்தர்களுக்கு குத்துக்காலிட்டு, யோக சின்முத்திரையுடனும், கையில் அம்பு-வில்லுடன் புலியின் மீது அமர்ந்தவாறு வீர அழகுத் தோற்றமும் பொருந்திய ஸ்ரீ ஐயப்பனின் உருவ தரிசனம் கிடைக்கும். குத்துவிளக்கு ஒளியாய் அரூப தரிசனமும் தரும் ஐயப்பனை வேண்டி 41 நாள்கள் விரதமிருந்து, இரண்டு வேளை ஸ்நானம், தவிர தீவிர பிரும்மசரியம், நித்திய பூஜை என நியமங்கள் கடைபிடித்து இருமுடி சுமந்து சபரிமலை சென்று 18 படிகளில் ஏறி ஆத்மானுபவம் பெரும் பாக்கியம் வெகு சிலருக்கே வாய்க்கிறது. 41 நாள் விரதத்தில் பல கூட்டு பிரார்த்தனைகள் நடைபெரும். 18 வருடங்கள் தொடர்ந்து சென்றால் தான் ஒருவர் குரு சாமியாகிறார், குருசாமிதான் இருமுடி கட்டுவிப்பார், அவர் தலைமையில்தான் பயணம். பாரதத்திற்கே உரித்தான இந்த ஆன்மீக அனுபவம் அயல் நாட்டில் வாழும் நமக்கும் வேதா கோவிலின் சாஸ்தா ப்ரீதி விழாவின் முலம் அனுக்கிரஹமானது.

டிசம்பர் 9ஆம் நாள் வாஷிங்டன் மாநில ரெட்மண் நகரில் உள்ள வேதா கோவிலில் சாஸ்தா ப்ரீதி வெகு விமரிசையாக நடந்தது.  மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சாஸ்தா ஆவாஹனம், ருத்ராபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, சதுர்வேத பாராயணம், அவதார ஸ்லோகம், வரவு பாட்டு, பதினெட்டுப்படி பாட்டு என பக்தர்களுக்கு பரவச அனுபவத்தை, ஐயனின் அருள் பெரும் பெரும்ப்பேற்றை நல்கியது.

108 அகல்விளக்குகள் ஆரமாய் சுடர்விட தர்மசாஸ்தா தாமரையில் வீற்றிருக்க, 18 படிகள் அழகு மலர்களால் அலங்கரிக்க, தெய்வஜோதியாய் கேரள குத்துவிளக்குகளும், விநாயகர், முருகர் படங்கள் படிகளுக்கு இருபுரமும் இருக்க, கணீரென மந்திர கோஷங்கள் முழங்க அரங்கத்தில் தெய்வீக ஆற்றல் முழுமையாய் பரவியிருந்தது. புருஷசூக்தம், விஷ்னுசூக்தம், ருத்திர வேத மந்திரங்கள் ஸ்வரங்களுடன் பண்டிதர்கள் முழங்க, அனைவரின் கவனங்களும் இறைவன் மீது குவிய, ஒரு மோன நிலையில் நிறுத்தியது. வெண்கலக்குரலில் பிரகாஷ் பஜனைப்பாடல்களை ஓங்கி ஒலிக்க பண்டிதர் கிரிஷ், பண்டிதர் சுந்தர் அவர்களின் தெய்வீக நியமத்தாலும் அனைவரும் தலையில் இருமுடி தாங்கி இருப்பதைப்போன்ற ஓர் உணர்வு. கலியுகவரதன், வீரமணிகண்டன் சபரிமலை வாசனின் அனுகிரஹத்தை, தெய்வீக பரவசத்தை உணர முடிந்தது.

குருவும் பிரகாஷூம் சாஸ்தா ப்ரீதியின் பின்னுள்ள கல்லிடைக்குறிச்சி சம்பவத்தையும், கம்மங்குடி வம்சத்தைப்பற்றியும், சபரிமலை தந்திரி கூடிய தகவல்களையும் கூறினர். நிகழ்வில் பல சிறுவர், சிறுமியரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பஜனைப்பாடல்களை முன்னின்று பாடியது மகிழ்வளித்தது. அழகான மலர் மாலைகள், அலங்காரமாய் புஷ்பங்கள் கலை நயத்துடன், அழகு சிரத்தையாய் சௌந்தர்யம் சேர்த்தது, மிகச்சிறப்பான தோரணங்கள், மேடை ஏற்பாடுகள் என வேதா கோவில் ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களையும் ஆத்மார்த்தமாக, பக்திபாவத்தோடு ஒருங்கிணைத்ததும், சியாட்டில் மக்களின் அதீத இறை நம்பிக்கையும் பக்தியும் இணைய சபரிமலை அனுபவம் அனுகூலமானது.

மின்விளக்குகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு நெய்விளக்குகளின் ஒளிகள் மட்டும் கோவிலில் நிறைந்திருக்க, அலங்கார தோரணங்கள், விளக்கு ஒளி பிரபை மிளிர, படிகளில் ஒவ்வொன்றாக “ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா” என ஒவ்வொரு படியாக விளக்கு ஏற்ற ஏற்ற மனங்களில் உருவான உணர்வை, மகிழ்வை, நிறைவை வார்த்தைகளாள் கூற முடியாது, கோவில் நிறைந்த பக்தர்கள் ஒற்றை குரலில் சுவாமியே சரணம் ஐய்யப்பா, சுவாமியே! ஐயப்பா! ஐயப்பா! சுவாமியே! என கூட்டுப்பிரார்த்தனை செய்ததில், தெய்வம் பிரத்யட்சமாய் அங்கே இருந்ததை உணரமுடிந்தது.  தீபாராதனையுடன் ஹரிவராசனம் பாட ஐயய்னின் அருள் நிறைந்தது.

நுனி வாழை இலையைச் சுற்றி சந்தனம், குங்குமம் இட்டு பகவான் முன் வைக்கப்பட்டது. பின்னர், ஐயப்ப பக்தரால் இலைகட்டும், பிரசாதமும் வழங்க அன்னதானம் விநியோகம் தொடங்கியது. 

பந்தியிட்டு அனைவரும் தரையில் அமர்ந்து இலை வைத்து, கேரளத்து முழு உணவும் பரிமார, மிகுந்த உபசாரங்களுடன் வயிரார ருசியான அண்ணதானம் நடந்தது. சுமதி அஙர்கள், சுதாகர் அவர்கள் தலைமையில் பெரும் குழு உணவு தயாரித்தது, பலரும் உணவு பரமாறி உதவினர், 300க்கும் மேற்பட்டோர் உண்டு மகிழ்ந்தனர். மாபுளிசேரி, சக்க வரட்டி, உண்ணியப்பம், அரவனப்பிரசாதம், அவியல், சாம்பார், இரசம், மோர், நேந்திர சிப்ஸ், அப்பளம், வடை, ஆப்பிள் ஊரறுகாய், அடப்பிரதமன் என இலை நிறைந்த சுவை உணவு அனைவரையும் ஆஹா ஓஹா என மனமாரப் பாராட்டவைத்தது.

சாஸ்தா ப்ரீதி தெய்வ தரிசனம், நளபாகமும் தான்!

படங்கள்: ஸ்ரீனிவாசன்

Watch live video https://fb.watch/oQnCi554g-/?mibextid=j8LeHn

சாந்நித்தியம்

வாழ்க்கையில் சில நேரங்கள் மிகவும் மகத்துவமானதாக மாறிவிடுகிறது. அந்த நேரங்களில் நம் மனது இலேசாகி, முழு அமைதியில் நிலைத்துவிடும். நாம் இறையனுபவம் பெற்று, வின்வெளி கூடத்தில் மிதக்கும் மனிதர்களைப்போல நம்மை மறந்த அனுபவம் பெருகிறோம். திருப்பதி கோவிலில் சில வேளைகளில் அந்த அனுபவத்தை பெற்றிருக்கிறேன். சில வேளைகளில் தியானத்தின் முடிவில் அந்த அனுபவத்தை பெற்றிருக்கிறேன். இப்படி ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு இடத்தில் அந்த மாதிரியான ஒரு அனுபவங்கள் அத்திப்பூத்தார் போல் எப்போதாவதுதான் அமையும். அப்படித்தான் என் வாழ்வில் மறக்க முடியாத அந்த 30 நிமிடங்கள் அமைந்துவிட்டது.

சொ சொ மீனாக்ஷிசுந்தரம் அவர்கள் சியாட்டில் வந்திருந்தார். பெல்வியூ நகரில் ஜெய் அனுமான் கோவிலில் அவரின் சொற்பொழிவு மிக அருமையாக அமைந்தது. அந்த சொற்பொழிவு முடிந்ததும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல நாராயணன் காத்திருந்தார். அந்த நேரத்தில் எனக்கு ஏனோ தோன்றியது, அவரை ரெட்மண் நகரில் உள்ள தாய்வான் புத்த கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று. அந்த லிங்-சான்-சிங் கோயில் சிறிய கோவில்தான், ஆனால் ஐந்து பிரம்மாண்டமான புத்தர் சிலைகள் இருக்கும். நிறைய சாமி சிலைகள் அடுக்கப்பட்டிருக்கும். அங்கே நடராஜர் இருப்பார், விநாயகர் இருப்பார், பிரம்மா இருப்பார். இப்படி பல ஹிந்து விக்ரகங்கள் வெண்கலத்தில் மிக அழகாக இருக்கும், ஆனால் அவை தாய்வானிய சாயலுடன் அமைந்திருக்கும். இந்த கோயிலுக்கு சொ சொ மீ அவர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென்று திடீரெனத் தான் எனக்குத் தோன்றியது.

நான் நாராயணனிடம் கேட்டேன், “அந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று விட்டு, அவரை வீட்டில் விடவா?” என்று, உடன் சம்மதம் சொன்னார். ஆனால் அந்த கோவில் திறந்திருக்குமா என்று உள்ளூர ஒரு பயம் இருந்தது. இருந்தாலும் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று தோன்றியது, குளிர் கொஞ்சம் தொடங்கி விட்ட அந்த நாளில், இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் ரெட்மண்ட் நோக்கி பயணித்தோம்.

கோவில் வந்தோம். அந்த தெரு முழுவதும் அத்தனை கூட்டம். ஏதோ மிகப் பெரிய விசேஷம் போல இருந்தது. அத்தனை தாய்வான் மக்கள், அங்கே கைகூப்பி நின்று கொண்டிருந்தார்கள். கோவில் மனிதர்களால் நிரம்பி வழிந்தது. உள்ளே அதிக இடமில்லாததால் வெளியே ஒரு மிகப் பெரிய திரை அமைத்து, நிறைய மனிதர்கள் வெளியிலும் அந்த திரைக்கு முன்னால் அமர்ந்திருந்தார்கள்.

நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தோம். அத்தனை பேரும் வழிவிட்டு எங்களை வரவேற்றார்கள். சிரித்த முகத்தோடு அவர்கள் எங்களை பார்த்தார்கள். அவர்கள் இருகரம் கூப்பி, தலை குனிந்து ஏதோ தாய்வானிய மொழியில் சொன்னார்கள். அவர்கள் மொழி எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் மட்டுமே இந்தியராக அங்கே இருந்தோம். இந்தனை கூட்டத்தில் நாங்கள் மட்டும் முன்னேறி செல்ல வழிகிடைத்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நாங்கள் உள்ளே சென்றதும் மெதுவான குரலில் ஒருவர் கேட்டார், “இங்கே எங்களில் வாழும் புத்தா வரவிருக்கிறார், நாங்களெல்லாம் அவருடைய வருகைக்காக காத்திருக்கிறோம். நீங்கள் அமர்ந்து அவருடைய பேச்சைக் கேட்க போகிறார்களா?” என்றார். அப்போது தான் அத்தனை கூட்டம் அங்கு இருந்ததற்கான காரணம் எனக்கு புரிந்தது.

நான் சொன்னேன், “இல்லை. நாங்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுவோம்” என்று. ஐயா, தமிழகத்தில் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர் என அவருக்கு அறிமுகம் செய்தேன். இன்முகத்துடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்ய வழி கொடுத்தார்கள்.

நாங்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தோம். கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் அந்த கோவில் முழுவதும் நிறைந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நிறமாக, காவி அங்கி அணிந்து இருந்தனர், அனைவரின் ஒன்றுபோல மொட்டை தலையாய் இருந்தனர், அங்கிருந்த அமைதியையும், ஒரு ஆன்மீக சூழலும் எங்களுக்குள் பரவுவதை உணர முடிந்தது.

நாங்கள் கோவிலை விட்டு வெளியே வருவதற்கும், வாழும் புத்தா லியன் ஷங் அந்த கோவிலை நோக்கி வருவதற்கும் சரியாக இருந்தது. அவர் தன் பரிவாரங்களுடன் நடந்து வந்தார். வாழும் புத்தா லியன் ஷங் அவர்களை வரவேற்க இருகரம்கூப்பி இருபுறமும் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவர் உள்ளே நுழையவும், நாங்கள் வெளியே நடக்கவும் சரியாக இருந்தது. நாங்களும் அவருக்கு வழிவிட்டு நின்றோம். எங்களுக்கும் வணக்கம் சொல்லி இன்முகத்தோடு சிரித்தார், அவருடன் வந்தவர் தாய்வானிய மொழியில் ஏதோ சொல்ல, தன்னுடைய கரத்தை உயர்த்தி அவர் ஆசீர்வாதம் செய்வதைப்போல கைக்காட்டி புண்ணகை செய்தார். ஐயாவின் அருகாமையிலேயே நான் பக்தியில் இருந்தேன் அதனோடு இவரின் புண்ணகை வாழ்த்து என் மனம் அமைதியில் நிறைந்தது.

சரியான நேரத்தில் திடீரென எனக்கு ஏன் இங்கே வர வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் வந்த நேரமும், இந்த வாழும் புத்தா வந்த நேரமும் எப்படி சரியாக அமைந்தது? இத்தனை பெரும் கூட்டத்தில் ஏன் எங்கள் இருவரையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தார்கள்? அந்தப் பெரும் கூட்டத்தில் எப்படி எங்களுடைய புன்னகை மட்டும் மொழியாக மாறியது.

அந்த தரிசனம் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது. நான் அமைதியாக காரில் வந்து அமர்ந்தேன், ஐயா அவர்களும் காரில் வந்து அமைதியாக இருந்தார். நாங்கள் இருவரும் பேசவே இல்லை. எங்களுக்குள் அந்த புத்த அனுபவம், அந்த ஆலயத்தின் ஆன்மிகம் சக்தி என்னுள் பூர்வமாக நிறைந்ததாக உணர்த்தேன். அந்த மடாதிபதி புன்னகை கண்களிளேயே இருந்தது. அந்தப் பெரும் கூட்டத்தின் வணங்கிய கைகளும், அவர்களின் புன்னகையும், மெல்ல முன் குனியும் உடல் மொழியும் மீண்டும் மீண்டும் காட்சியாய் வந்தது. எங்கள் மீது இறையருள் பொழிந்து கொண்டிருந்ததாக உணர்ந்தேன். நான் அந்த உணர்விலிருந்த மீள சில நேரங்கள் ஆனது.

எல்லாம் சொ.சொ.மீ ஐய்யாவின் ஆராவில் கிடைத்த அருள் என்றே நினைக்கிறேன். அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்!

https://shicheng.org/home/about-living-buddha-lian-sheng-2/

Design a site like this with WordPress.com
Get started