எண்ணங்களின் தொடர்சியும், வாழ்கையின் நகர்வும்

என்னுடன் பணிபுரியும் நண்பர் அவர் இல்லத்திற்கு விருந்திற்காக அழைத்திருந்தார்.  அது அவரின் தந்தையும் அவர்களோடு வந்து தங்கியிருந்த சமயம். அவரின் பேச்சு மிகுந்த நிதானமும், அமைதியும் நிறைந்ததாக இருந்தது. அவர் ஒன்றும் ஆன்மீகவாதி இல்லை எனினும் அவருடனான உரையாடல் ஒரு பெரும் அமைதியை அளித்தது. ஒரு ஆன்மீக குருவின் அருகாமையை போல உணர்ந்தேன். அன்று அவர் எனக்கு லூசி கார்னெல்சென் அவர்களின்  Hunting the I  என்ற புத்தகத்தை பரிசளித்தார். (Ref: சச்சிதானந்தம்)

அப்புத்தகத்தை அவ்வாரமே படித்து முடித்தேன்.  பொதுவாக ஆன்மீக புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்து எனக்கு பழக்கமில்லை. ஆயினும் ஒரு வேகத்தில் புத்தகத்தை படித்து முடித்தேன். சில வாரங்களில் வேதா கோவிலில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் இருந்து வந்திருந்த ரமண ஸ்வரூபானந்தரின் உரை நிகழ்ச்சி நடந்தது. நானும், என் மாமனாரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டோம். ‘சும்மா இரு’, ‘வந்த வேலையை கவனி’ என்ற பதங்கள் என் மனதில் பதிந்தது. அதன் தொடர்ச்சியாக சியாட்டில் ரமண மகரிஷி சத்சங்க நிகழ்வுகளில் சிலவாரங்கள் கலந்து கொண்டேன்.

அச்சமயம் இன்னொரு நண்பரின் வீட்டிற்கு இரவு உணவிற்கு சென்றபோது அவர் வீட்டின் வரவேற்பறையில் மிகப்பெரிய ரமண மகரிஷி படம் இருந்தது. அவர் என்னைப் பார்த்து புன்னகைப்பது போல இருந்தது. அவர் ரமணரின் தீவிர பக்தர், அவர் மூலம் ரமணரின் பெருமைகளை அறிந்தேன்.

சில மாதங்களில் வேதா கோவில் மகான்களும் வாழ்வும் வாக்கும் என்ற நிகழ்வு ஏற்பாடு ஆனது. அதில் ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றி பேச எனக்கு விருப்பம் இருந்தது. ஏனோ குழு என்னை ரமணர் பக்கம் நகர்த்தியது.  அதன் பின் பல நாட்கள் தினமும் ரமணரைப்பற்றி பல்வேறு காணொளிகளை கேட்டேன். கிரேசி மோகன், நொச்சூர் வெங்கட்ராமன், சுகி சிவம், இளையராஜா ரமணகீதம், ஆங்கில டாக்குமென்ட்ரி வகை என பல உரைகளை கேட்டேன். சமீப காலமாக The Ranveer Show  கானொளிகளை அதிகமாக கேட்கிறேன். அதுல் ஒரு முறை ஸ்ரீ. எம் என்பவரின் பேட்டி இருந்தது. அதிலும் அவர் ரமணரைப் பற்றி பேசினார்.

ஆர்தர் ஆஸ்பர்ன் எழுதி, தமிழின் பிரபல எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீரமணரும் ஆன்மீகப் பாதையும்’ என்ற 380 பக்க புத்தகத்தை முழுவதும் ஊன்றிப் படித்தேன். ராமணரின் வாழ்க்கை முழுவதும் சொன்ன புத்தகம். Who am I? என்ற புத்தகத்தை சில முறை படித்தேன். பல வாரங்களாக நான் ரமணரோடே வாழ்வதாக உணர்ந்தேன். ரமணரின் பக்தை ஒருவருடன் சில மணிநேரம் அவர்களின் அனுபவம் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்து.  ஆனால் என் தர்க மனம் ரமணரை முழுமையாய் ஏற்க்கவில்லை.  உணர்வுகளாலும் கேள்விகளாலும் மாறிமாறி அலைக்கழித்தது.

books

வேதா கோவில் உரைக்கான நேரம் வந்தது. என் அகந்தையை நொருக்கும் விதமாய் அந்நிகழ்ச்சிக்கு எண்ணி மூன்றே பேர் வந்திருந்தனர்.  ஆனாலும் முழு ஈடுபாடுடன் அந்த உரை நிகழ்ச்சி நடந்தது.  மகா பெரியவரின் வாழ்வின் நிகழ்வுகளை பரத் ராம் சொல்ல சொல்ல மகானின் வாழ்வின் உன்னதங்கள் உணர்ந்தேன். அதனுடே என் மனத்துக்குள் நான் படித்த ரமணரின் பல்வேறு நிகழ்வுகள் கண்முன் வந்து சென்றது.

என்னுடைய அலை பாயும் மனமோ என்னவோ என் உரை எனக்கு முழு நிறைவை அளிக்கவில்லை. திருச்சுழியை திருச்சூர் என்றும், ஸ்கந்தாசிரமத்தை கந்தாஸ்ரமம் என்றும், மொழி பரிச்சயத்தை மொழி அறிவு என்றும் நிறைய தவறுகளோடு அமைந்தது என் உரை. ராமணருடன் இத்தனை வாரங்கள் பயணித்து உள்ளத்தில் நினைத்தும் அந்த உரை நிறைவாக அமையாதது வருத்தம் தந்தது.

இன்னொரு நண்பர் Wisdom Of The Rishis என்ற ஸ்ரீ.எம் அவர்களின் புத்தகத்தை வழங்கினார்.  அப்புத்தகம் உடனே படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. ஈஷா உபநிடதத்தை விளக்கும் அப்புத்தகம் ஸ்ரீ ரமணனின் வாழ்வை, உபதேசங்களை கோடிட்டு விளக்கியது. இப்படியாக ரமணர் மீன்றும் தொடருகிறார்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் ரமணாஸ்ரமம் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.  இப்படியாக ஒன்றன் தொடர்ச்சியாக ஒன்று அமைந்து ரமணரின் சிந்தனை என்னை ஆக்கிரமித்துள்ளது. வாழ்கை என்னும் ஓடம், என்னை எங்கே இட்டுச் செல்கிறது என தெரியவில்லை.  வாழ்வே தவம்!

Ref: விசார சங்கிரகம், வாக்மௌனம், மனோமௌனம், காஷ்டமௌனம்

One thought on “எண்ணங்களின் தொடர்சியும், வாழ்கையின் நகர்வும்”

  1. அற்புதமாக எண்ணங்களை எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். பாதயோர வழிகாட்டி பலகைகள் போல குருவே குருவை( u) அழைக்கிறார் போல் தோன்றுகிறது.

    எங்கும் ரமணமயம் உணரமுடிகிறது.

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started