தண்ணீர்

குடிதண்ணீர் குழாய் மூடாமல் சிலநிமிடங்கள் நீர் வீணாவதைப்பார்க்கும் போதெல்லாம் பதைக்கிறது மனம், அதனை உடனடியாக நிறுத்தி அந்தத்தண்ணீரைச் சேமிக்க நினைப்பது அனிச்சையாக நிகழ்வதுபோலவே உணருகிறேன். அதற்கான காரணம் சிறுவயதில் விதவிதமான தண்ணீர் போராட்டங்கள்.


களக் குளக் என்று ஒரு குட்டி கைப்பிடி அடிகுழாயில் காலையில் ஆறுமணி முதல் ஏழுமணிவரை மட்டுமே வரும் குடிநீரை மூன்று குடித்தனக் காரர்களும் அடித்துப் பிடித்தாக வேண்டும். அதிலும் முதல் முக்கா மணிநேரம் வீட்டுக்காரங்களுடையது. அடித்து அடித்து கை ஓய்ந்துவிடும், சில நாட்களில் அந்த குழாய்க்குத் தண்ணீர் ஊற்றினால் தான் அது அடிக்கவே வாகாக வரும். சில நாட்களில் ஏழுமணிக்கு நிற்கவேண்டிய தண்ணீர் பத்து நிமிடம் முன்னதாக நின்றுவிடும் அந்த நாட்களில் அந்த குழாயை அடித்து அடித்து கை ஓய்ந்து ஏமாற்றம் தான் மிஞ்சும்.
இப்படி அரும்பாடுபட்டு தண்ணீர் கொண்டுவந்து சேர்ந்து அதனை அடுத்தநாள் காலை வரை சிறுகச் சிறுக செலவழித்து நாளைக்கடத்துவது என்பதெல்லாம் அனுபவித்து அறிந்தால் மட்டுமே விளங்கும்.
சிலநாட்கள் நகராட்சி நிர்வாகம் தண்ணீரைச் சுத்தம் செய்வதாய் அதிக குளோரின் கலந்துவிடுவார்கள். அதையும் சகித்துக்கொண்டுதான் குடிக்கவேண்டும். அடிபம்பு சிலநாட்கள் கெட்டுவிடும், அந்த வாஷரை மாற்ற, உடைந்த கம்பியை மாற்ற என்று, பதின்ம வயதிலேயே பயிற்சிப் பெற்றோம். கொஞ்சம் பெரிய ரிப்பைராகிப்போனால் ஆளைப்பிடித்துச் சரிசெய்வதற்குள் அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு குடமாய் கடன்கேட்டு அலைக்கழிக்கப்படும் போது அவரவர்கள் சொல்லும் விளக்கமும், காட்டும் தயையும் நம் சுற்றத்தைப்பற்றி நமக்கு உணர்த்தும்.


சில நாட்களில் சைக்கிளின் பின்னால் இரண்டு குடங்களின் கழுத்தைக்கட்டி இரண்டு பக்கம் தொங்கவிட்டு தண்ணீர் சிந்தாமல் இருக்க அதன் மேல் ஒரு துண்டுபோட்டு முடி என நாங்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்த ஞாபகங்கள். மழைக்காலங்களில் வாளிகளில் தண்ணீர் பிடித்து வடிகட்டி பாத்ரூமுக்கு உபயோகப்படுத்திக்கொள்வோம்.


நாங்கள் ஒரு நல்ல வீட்டிற்குக் குடிபோனபோது அங்கே தொட்டியில் தண்ணீர் நிறைந்து பின் மாடி டேங்கிற்கு செல்லும் வகையில் இருந்தது. எங்களுக்கு அந்த அடிபம்பில் இருந்து விடுதலை கிடைத்தது. ஒரு பக்கெட் தண்ணீரில் சோப்பிற்கு முன் இரண்டு-மக்கு-தண்ணீர் பின் நான்கு-மக்கு-தண்ணீர் என திண்டாடி குளித்ததுபோக குழாயைத் திறந்து நிம்மதியாகக் குளிக்க முடிந்தது. அப்போதும் அம்மா பாத்திரங்களைத் தேய்த்து ஒரே பக்கெட் தண்ணீரில் முக்கி கழுவி அதற்குப்பின் நல்ல தண்ணீரில் கழுவி எனத் தண்ணீரை அத்தனை சிக்கனமாய் பயன்படுத்துவார். கழவிய தண்ணீர், துணி அலசிய தண்ணீர் எல்லாம் செடிக்கு போட்டுவிடுவார்.


அடுத்து நாங்கள் சென்ற வீட்டில் இந்த பம்ப் வசதிகள் இல்லை அங்கு இராட்டின கிணறுதான். பிந்திப் போகும் இராண்டிணக்கயரு, இராட்டினம் கழன்று கிணற்றில் விழ நங்கூர கொக்கி போட்டு அதைத்தேடி எடுத்து மீண்டும் மாட்டும் வேலை, குடம் அடிபடாமல் தண்ணீர் எடுப்பது என அதில் தான் எத்தனை எத்தனை சாகம், மழைக்காலத்தில் தண்ணீர் மேலே வருவதும், கோடையில் அது அதலபாதாளத்திற்குச் செல்ல புதுக்கயிறு வாங்க வேண்டிய நிலை, அந்த புதுக்கயிறு பழகும் வரை குத்தும். குடுத்தணங்களுக்குள் சண்டை ஆளுக்கு ஒரு கயிறு, ஆளுக்கு ஒரு இராட்டினம். அது ஒரு தனி உலகம்.


சென்னை, ஹைதராபாத் என்று வந்தபோதும் துரத்தியது இந்த தண்ணீர் பிரச்சனை, பம்ப் ரிப்பையர், போர் ஆழம் பத்தலை என்று ஏதோதோ காரணங்கள். லாரியில் தண்ணீர் வரும் வரை குளியல் இல்லை. இரண்டு நாட்கள் குளிக்காமல் காலம் கழித்த நாட்களும் உண்டு. லாரியில் தண்ணீர் கொண்டு வந்து நிறப்பியதும், இந்த அதிபுத்திசாலி அப்பார்ட்மண்ட் மக்கள் தங்கள் வீட்டில் ஒரு பெரிய டிரம் வாங்கி அதில் குழாய் போட்டுச் சேமித்துவிடுவார்கள், லாரி தண்ணீர் ஒரு மணிநேரத்திற்குள் பதுக்கப்பட்டுவிடும். இன்னும் இந்தப்போராட்டங்கள் இந்திய பெரு நகரங்களில் தொடர்கிறதா என்று தெரியவில்லை ஆனால் இன்றும் தண்ணீர் வீணாவதைக்கண்டால் மனம் பதைக்கிறது.


வாழ்க்கைதான் எத்தனை வசதியாக மாறிவிட்டது, வேண்டுமான நேரம் வரை குளிக்கலாம், வேண்டிய தண்ணீரைக்குடிக்கலாம் என்பதே எத்தனைப்போரிய பேரு.

கந்தர்வன் அவர்கள் எழுதிய தண்ணீர் சிறுகதை படித்ததின் தாக்கம்.

எங்கோ கேட்ட கவிதை

எதுபற்றியது உமது கவிதை என நீர் வினவினால்
நீரே பதில் ஏனெனில் நான் நீர்

புனல் என கூறினால் புரிகிறதா?
வெம்மையால் வெண்ணீர்!
தன்மையால் தண்ணீர்!
இன்னும் விளங்கவில்லை?
What என்கிறீரா? வாட்டர் தான் நான்.
இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

புதிதெனில் நான் புதிதுமல்ல! புதிருமல்ல! யாரும் அறிந்தவளே!
உலகை உறுதியாய் பற்றியவள் நான்!
அதே உலகை, உறுதியாய் எனைப்பற்ற வைத்தவள் நான்!
உன் உதிரத்தின் உரமாய் இருப்பவள் நான்!
உன் உமிழ் நீராகவும் இருப்பவள் நான்!
நீர் இளைப்பாரும் போது தேநீரும், இளநீரும் கூட நான்!
வெளியேற்றும் சிறுநீரும், கண்ணீரும் நான்!
எங்கும் எதிலும் நான்! ஏனெனில் நானின்றி அமையாது உலகு!

திட, திரவ, வாயு என யாவுமாய் நான்!
திரும்பும் திசையெங்கும் திரவியமும் நான்!
ஆக்கம் தரும் அமுதும் நான்!
அங்கே அழிவு தரும் ஆழியும் நான்!
ஆக்கமானவள், ஆழமானவள், ஆபத்தானவளும் கூட!

நிறமற்ற நீருக்கு நிதமும் இல்லை உருக்கள்
நிறம் மாறி, உருமாறும் உதவா மனிதர் மத்தியில்
நீரமற்றும் உருவற்று இருப்பதே மேல் எனக்கு!

வீழ்ந்தாலும் வழக்குன்டெனில் அது அருவிக்கே!
தாழ்வில் தேங்கினாலும் பயனுண்டெனில் அது நீருக்கே!
வெள்ளைப்பாகாய் திடம் கொண்டு,
மேலிருந்து விழும் போது கனம் கொண்டு,
தன் அடியில் குளிப்பவர் தலையில் கொட்டு வைத்து,
தன் வழியை மறிப்பவர்தனை தள்ளிவிட்டு,
மனம் போன போக்கில்… இல்லை
மணல் போன போக்கில்… இல்லை
மடைதிறந்த வெள்ளத்திற்கு போக்கு தான் உண்டோ!
இடமென இருந்தாலே இறங்கிவிடுவேனே நான்!

ஆனால்
அறுக்கும் அறிவுரையை நானும் கூறுகிறேன்!
அனுபவபட்ட என்னிடமிருந்து அறுதியிட்டுக்கொள்ளுங்கள்!
மடைதிறக்கப்பட்டதே என மடத்தனமாய் இறங்கிவிட்டேன் இடம்பாராமல்,
ஒருபுறம் ஆதரவாய், ஆறாகி ஒரு வழியாய் ஒருவனுக்கு சோறானான்
மறுபுறம் மயக்கத்தில் திளைத்து, வேறாகி, சேறாகி சாக்கடையும் ஆனேன்!
ஏனெனில் வழிநடத்த எனக்கும் ஒரு வாத்தியார் தான் இல்லையே!
அணைகட்டி எனை வைத்து சண்டையிடத் தானே ஆட்கள் இருக்கிறீர்கள்!

பொதுவாய் சமமாய் மழையாய் பொழிந்தால்
கலர் நிலத்துக்கு பயன்பட மாட்டேன் என கலாய்த்துவிட்டார்.
வளம் பெருக்க வந்த நீரை நீர் குடிக்கும் கலருக்காக மாற்றி விட்டீர்கள்.
கட்டுக்கடங்காத காட்டு ஆற்றைக் குட்டி குடுவையில்கட்டி கடையில் வியாபாரம் செய்கிறீர்கள்.
நீலம்தனில் நிலவி அனைவருக்கும் பசியை ஆற்றவே நசை எனக்கு,
என்னை வைத்து உங்களுக்குள் வசை எதற்கு?

காவிரியாகிய நான் கருநிலத்திற்கும், திருநிலத்திற்கும் பொதுவானவள்.
கருத்து வேறுபாடு என கருவிலேயே கை வைக்கலாமா?
சாக்கடையில் இருந்தபோது கூட நான் சாவதாய் உணர்ந்ததே இல்லை
என் கண்ணெதிரே என் பிள்ளை அங்கே பசியில் இருக்க
உன் கண்ணெதிரே நான் நீனாய் கடலில் கலக்கும் போது
கொடூரமாய் கொலை செய்யப்படுவதாக உணர்கிறேன்!
பகிர்ந்து பசியாறுங்கள்! பறித்து பசியாராதீர்கள்!

உணர்வற்ற நான் உணர்வுகொண்டு பேசிவிட்டேன்
உயிரற்ற நான் உயிர் காக்க, நான் உனக்காக பேசிட்டேன்
நீராகிய நான் பேசினால் போதாது, நீர் பேசினால் நனிநன்று.

Shilpashastra (iconography)

The Madurai Meenakshi temple boasts a wealth of intricate sculptures, each adorned with captivating details. While perusing the temple’s architecture book, one particular aspect captured my attention—the crowns, referred to as Krita/Mukuta in Sanskrit.

  1. Kirita Mukuta: This crown, worn by Chrakavarthis, should be two or three times the length of the wearer’s face. It emanates an air of majesty and is often linked to royalty.
  2. Karanda Mukuta: The Karanda Mukuta is a crown shaped like a basket or bowl, distinguished by its modest height and compact size. The term “Karanda” translates to a bowl in Sanskrit.
  3. Śirastraka: This turban is crafted from cloth or woven strands of hair, secured at the front with a button. It is commonly worn by secondary characters of the divine society, celestial beings, and demons.
  4. Jatamukuta: The Jatamukuta is a crown intricately braided from strands of hair.

Similarly, in contemporary times, Indian police officers indicate their rank through stars on their shoulders, and their caps also vary based on rank. It is intriguing to observe how ancient life incorporated similar iconography. The next time you visit a temple or watch a historical movie, pay attention to the various types of crowns on display.

வேதா கோவில் உபன்யாசம்

உபன்யாசம்: சமயசொற்பொழிவு, சியாட்டில் நகரில் நடப்பது அதுவும் சியாட்டில் நகரவாசி பெண் ஸ்ரீமதி வித்யா ராகவன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது மிகுந்த மகிழ்வை தருகிறது.  இந்து சமயம் எவரோ ஒருவர் கூறியவற்றை மட்டும் வேதமாகக்கொண்டு பிடிவாதமாக இருக்கும் சமயம் அல்ல. அது காலம்தோறும் பல்வேறு மகான்களால் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு விளக்கங்களாலும் புரிதல்களாலும் மேலும் மேலும் தன்னை மெறுகேற்றிக்கொண்டே இருக்கும் மதம்.

அத்வைதம் குறித்த விவாதம் 32 நாட்கள் மண்டன மிஸ்ரா என்பவருக்கும் ஆதிசங்கரருக்கும் இடையே நடந்த வரலாற்றைக்கொண்டது இந்த பூமி.  அத்வைதம் இருந்த சமையத்தில், விஷிஷ்டாத்வைத்தத்தை முன்னிறுத்தி விவாதங்களை, சொற்பொழிவுகளை ஆற்றி, ஏற்றத்தாழ்வுகளை களைந்த ராமானுஜர் வாழ்ந்த பூமி இது.  மத்வர், இராகவேந்திரர் பலர் என தர்கங்கள் செய்து துவைதத்தை நிறுவிய பூமி இது. இந்த புண்ணிய பூமி நவபக்தி மார்கத்தை வழங்குகிறது, தாச மார்கம், ஞான மார்கம் என அனைவருக்கும் அவர் அவர் ஏற்ற வகையில் வழியை கொடுக்கிறது இந்துமதம்.

வெறும் பஜனைகளாக, வழிபாடுகளாக மட்டும் இன்றி, நம் இதிகாசங்களை, புராணங்களை, தத்துவங்களை, வழிபாட்டுமுறைகளை விரித்துக்கூறும் உபன்யாசங்கள், பாடல்கள் மற்றும் விளக்கமுமாக சொல்லி தர்கபூர்வமாக நம் கலாச்சாரத்தின் ஆழங்களை நமக்கு காட்டுகிறது. அந்த வகையில் வித்யா ராகவன் அவர்களின் முயற்சியும் ரெட்மண்ட் வேதா கோவிலின் ஏற்பாடும் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்

உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

என ஆழ்வார்கள் வழி நின்று, எல்லாம் பகவத் கைங்கர்யமாக எந்த பலனையும் எதிர்பாராது, பெருமாளுக்கு அர்பணமாக, தான் என்பது துளியும் இன்றி, ஸ்வரூப நிரூபக தர்மத்தை எடுத்துக்கூறிய வித்யாவிற்கு வாழ்த்துக்கள்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களை கூறி, அதில் வராஹ அவதாரத்தின் மகிமை கூறி, அந்த வராஹ அவதாரத்திற்கும் ஆண்டாளின் சொல்லுக்கும் உள்ள தொடர்பை மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்.  திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘அவன் பெயர் (திருநாமம்) பாடு’ என வலியுறுத்துகிறது. 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்கிறது. 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்கிறது. வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் வெளியிட்டாள் ஆண்டாள் என்று தொடங்கிய உபன்யாசம்.

பெருமாளின் அவதாரம், ஒவ்வொரு அவதாரத்திலும் பிராட்டியின் அவதார மகிமை. கோவில்களில் உள்ள துவாரபாலகர்கள் அவர்களின் அவதார கதைகள், பிரலயம், ஏழுவகை கடல்கள், “சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு” என்பது போன்ற வரிகளின் மூலம், இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை விளக்கியது எல்லாம் அருமை.  உபன்யாசத்தின் சிறப்பே அதுதானே, பல்வேறு தகவல்களை நம்முடைய சிந்தனைத் தளத்திற்கு கொண்டுவந்து, இலக்கியத்தை இரசிக்கவும், நம் பெருமைகளை சிலாகிக்கவும், நாம் பக்குவமடையவும் உதவுகிறது.

பூவராஹவர், வராஹா வழிபாடு, சிம்மகதி, பரமாத்மா, ஜீவாத்மா என போகிற போக்கில் எத்தனை எத்தனை தகவல்கள். ஐதீகம், அனுகிரஹம், சரணாகதி, யோக்யதை, அஹங்காரம், கைங்கர்யம், விக்னம் என்ற பொருட்பொதிந்த வார்த்தைகளை கேட்பதே நம் சிந்தையை, நம் பாரதம் நமக்கு வழங்கிய ஞான விருட்சங்கள் நம் கண் முன்விரியச் செய்தது.

மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி என பக்தி பாவத்தை, கிருஷ்ணனின் கோபிகையரையும் கோதையையும் நேர் நிறுத்தி, ராச லீலை, நந்தகோகுலம் என ஆண்டாளின் உள்ளத்தை சொல்லி. அவள் ஒவ்வொரு வீடாக எல்லோரையும் அழைத்து சென்றது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலரை அழைத்தாள் என கூறி அவள் அழைத்த ஒவ்வொருவரின் குணத்தையும், அதன் காரணத்தையும் விளக்கி

  • பிள்ளாய் எழுந்திராய்
  • மாமான் மகளே
  • அருங்கலமே
  • கோவலர்த்தம் பொற்கொடியே
  • நற்செல்வன் தங்காய்
  • நாணாதாய், நாவுடையாய்
  • மருமகளே, நப்பின்னாய்
  • மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

திருப்பாவை வரிகளை சொல்லிச்சொல்லி “ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு” என முத்தாய்ப்பாய் முடிந்தது உபன்யாசம். மந்திரங்கள், பஜனைகள், பூஜை, புணஸ்காரம் என்பது மட்டுமல்லாது, இப்படி நம் பக்தி பாவத்தில் உள்ள தேன் சுவைகளை பலாப்பழத்தின் ஒவ்வொரு சுளையாக உண்டு அனுபவப்பது போல ஒவ்வொரு பாசுரமாய், ஒவ்வொரு நாமாவளியாய் உபன்யாச வடிவில் கேட்பது ஆனந்தம், இறையனுபவம். இது போன்ற வாய்ப்புகளை வேதா கோவில் நிறைய உண்டாக்க வேண்டும், ஸ்ரீமதி வித்யா ராகவனைப்போன்ற பல உபன்யாசகர்கள் இங்கே நிறைய வரவேண்டும் என்று பேரருளாளனை வேண்டுகிறேன்.

நன்று, குரு

யாக்கை திரி நாடகம்

யாக்கை திரின்னு நாடகம். சும்மா கிழி கிழின்னு கிழிக்கறோம்னு ஆரம்பிச்­சாங்க போல. மேடையை இரண்டா கிழிச்சி. அதுல ஒரு பக்கம் ஒருத்தர் கதை எழுத, இன்னொரு பக்கம் அதுவே நடிக்கப்­படன்னு ஆரம்பமே அடி தூள். அய்யோ, அவரு ஒத்தையில எப்படி கதை எழுதுவாருனு தோணி இருக்கும்போல? அவரோட மனசாட்சியையும் கிழிச்சி ஒரு பாத்திரமா நடிக்க விட்டுட்டாங்க. ஜனங்க குழம்பிவிட மாட்டாங்களான்னா, சியாட்­டில் மக்கள் 10 வருஷத்துக்கு முன்னால எழுதன codeஅ ஓடவிட்டு. AI கொடுக்கிற codeயும் ஊடால விடுற மாதிரி இதெல்லாம் அவங்களுக்கு ஜூஜ்­ஜூப்பின்னு களத்தில இறங்கிட்டாங்க.

டப்பாக்கு வெளியே யோசிக்கனும்னு யாரோ திரி ஏத்த. மேடையில மட்டும் இல்ல. சும்மா auditorium உள்ள பூந்து நடிக்கிறோம். கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறோம். அது மட்டுமில்ல, stage leftல வந்து ஆடறோம். முதல் வரிசையில் குந்தி சவுண்டு விடறோம். திரைய மூடிட்டு ரெண்டு பொண்ணுங்கள புரளிபேச விடறோம்னு எல்லாம் out-of-stage புதுமையோ புதுமை.

ஒரு Opening dance, ஒரு Dream dance, இரண்டு மனங்களின் metaphor சிவப்பு, நீல ஆட்டம்னு சும்மா ஆடவிட்டாங்க. காமெடிக்கு ஸ்ரீனிய நம்பினார் கை­விடப்­படார், அவரு என்ன செஞ்சாலும் சிரிக்குது சியாட்டில். அரசியல்வாதிக்கு மெட்ராஸ் தமிழ், சர்வருக்கு வடசென்னை தமிழ். வனஜா, சரோஜாவுக்கு தங்கிலிஷ். கருத்து சொல்ல ஒரு பெருசு, கடுப்பு கிளப்ப தேங்க மண்டயன் என ஜாலியோ ஜிம்கானா.

எழுத்தாளர் இணை நாயகர்களா? அந்த டாக்டர் இளசுங்க நாயகர்களா? கல கல ஸ்ரீனி-மது நாயகர்களா? ஒரு வாசகமானாலும் திருவாசகன்னு வந்து போன துண்டு துக்கடா கேரக்டர்கள்தான் நாயகர்களா? வம்பு பேசி கலக்கிய அந்த அம்மணிங்கதான் நாயகர்களா ஒரே confusion. ஆனா ஒன்னு, காட்சிக்கு காட்சி திரைய போட்டுவிட்ட கேப்ல, முன் சீட்டு அக்கா, பின் சீட் தங்கச்சி, பக்கத்து சீட்டு தோஸ்துன்னு செம கடல போட்ட நானும் நாயகன் தான்.

நாடகம் செம கல கல.. சூப்பர் refresher, நாடக குழுவோட கடமை உணர்ச்சிக்கும், கற்பனை வளத்துக்கும் அளவே இல்லை! குடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம், குடி நா‌ட்டு‌க்கு‌ம், ‌வீ‌ட்டு‌க்கு‌ம் கேடு! அதுலையும், cameo, CG. Props, Lights, soundன் செம்ம வேலைக்காரனுங்க அதகளம். சியாட்டில் மக்கள் நாடகத்துக்கு உள்ள பூந்து  counter குடுத்து கூட்டம் கூட்டமா sound விட்டது செம ரகள. யாக்கை திரி, தெரி பர்ஃபாமன்ஸ். 

சுவாமியே சரணம் ஐயப்பா

https://www.facebook.com/events/1531526624353743

கார்த்திகை மாதம் ஹரி-ஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்பனுக்கான மாதம். ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் எங்கும் முழங்கும். பக்தர்களுக்கு குத்துக்காலிட்டு, யோக சின்முத்திரையுடனும், கையில் அம்பு-வில்லுடன் புலியின் மீது அமர்ந்தவாறு வீர அழகுத் தோற்றமும் பொருந்திய ஸ்ரீ ஐயப்பனின் உருவ தரிசனம் கிடைக்கும். குத்துவிளக்கு ஒளியாய் அரூப தரிசனமும் தரும் ஐயப்பனை வேண்டி 41 நாள்கள் விரதமிருந்து, இரண்டு வேளை ஸ்நானம், தவிர தீவிர பிரும்மசரியம், நித்திய பூஜை என நியமங்கள் கடைபிடித்து இருமுடி சுமந்து சபரிமலை சென்று 18 படிகளில் ஏறி ஆத்மானுபவம் பெரும் பாக்கியம் வெகு சிலருக்கே வாய்க்கிறது. 41 நாள் விரதத்தில் பல கூட்டு பிரார்த்தனைகள் நடைபெரும். 18 வருடங்கள் தொடர்ந்து சென்றால் தான் ஒருவர் குரு சாமியாகிறார், குருசாமிதான் இருமுடி கட்டுவிப்பார், அவர் தலைமையில்தான் பயணம். பாரதத்திற்கே உரித்தான இந்த ஆன்மீக அனுபவம் அயல் நாட்டில் வாழும் நமக்கும் வேதா கோவிலின் சாஸ்தா ப்ரீதி விழாவின் முலம் அனுக்கிரஹமானது.

டிசம்பர் 9ஆம் நாள் வாஷிங்டன் மாநில ரெட்மண் நகரில் உள்ள வேதா கோவிலில் சாஸ்தா ப்ரீதி வெகு விமரிசையாக நடந்தது.  மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சாஸ்தா ஆவாஹனம், ருத்ராபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, சதுர்வேத பாராயணம், அவதார ஸ்லோகம், வரவு பாட்டு, பதினெட்டுப்படி பாட்டு என பக்தர்களுக்கு பரவச அனுபவத்தை, ஐயனின் அருள் பெரும் பெரும்ப்பேற்றை நல்கியது.

108 அகல்விளக்குகள் ஆரமாய் சுடர்விட தர்மசாஸ்தா தாமரையில் வீற்றிருக்க, 18 படிகள் அழகு மலர்களால் அலங்கரிக்க, தெய்வஜோதியாய் கேரள குத்துவிளக்குகளும், விநாயகர், முருகர் படங்கள் படிகளுக்கு இருபுரமும் இருக்க, கணீரென மந்திர கோஷங்கள் முழங்க அரங்கத்தில் தெய்வீக ஆற்றல் முழுமையாய் பரவியிருந்தது. புருஷசூக்தம், விஷ்னுசூக்தம், ருத்திர வேத மந்திரங்கள் ஸ்வரங்களுடன் பண்டிதர்கள் முழங்க, அனைவரின் கவனங்களும் இறைவன் மீது குவிய, ஒரு மோன நிலையில் நிறுத்தியது. வெண்கலக்குரலில் பிரகாஷ் பஜனைப்பாடல்களை ஓங்கி ஒலிக்க பண்டிதர் கிரிஷ், பண்டிதர் சுந்தர் அவர்களின் தெய்வீக நியமத்தாலும் அனைவரும் தலையில் இருமுடி தாங்கி இருப்பதைப்போன்ற ஓர் உணர்வு. கலியுகவரதன், வீரமணிகண்டன் சபரிமலை வாசனின் அனுகிரஹத்தை, தெய்வீக பரவசத்தை உணர முடிந்தது.

குருவும் பிரகாஷூம் சாஸ்தா ப்ரீதியின் பின்னுள்ள கல்லிடைக்குறிச்சி சம்பவத்தையும், கம்மங்குடி வம்சத்தைப்பற்றியும், சபரிமலை தந்திரி கூடிய தகவல்களையும் கூறினர். நிகழ்வில் பல சிறுவர், சிறுமியரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பஜனைப்பாடல்களை முன்னின்று பாடியது மகிழ்வளித்தது. அழகான மலர் மாலைகள், அலங்காரமாய் புஷ்பங்கள் கலை நயத்துடன், அழகு சிரத்தையாய் சௌந்தர்யம் சேர்த்தது, மிகச்சிறப்பான தோரணங்கள், மேடை ஏற்பாடுகள் என வேதா கோவில் ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களையும் ஆத்மார்த்தமாக, பக்திபாவத்தோடு ஒருங்கிணைத்ததும், சியாட்டில் மக்களின் அதீத இறை நம்பிக்கையும் பக்தியும் இணைய சபரிமலை அனுபவம் அனுகூலமானது.

மின்விளக்குகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு நெய்விளக்குகளின் ஒளிகள் மட்டும் கோவிலில் நிறைந்திருக்க, அலங்கார தோரணங்கள், விளக்கு ஒளி பிரபை மிளிர, படிகளில் ஒவ்வொன்றாக “ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா” என ஒவ்வொரு படியாக விளக்கு ஏற்ற ஏற்ற மனங்களில் உருவான உணர்வை, மகிழ்வை, நிறைவை வார்த்தைகளாள் கூற முடியாது, கோவில் நிறைந்த பக்தர்கள் ஒற்றை குரலில் சுவாமியே சரணம் ஐய்யப்பா, சுவாமியே! ஐயப்பா! ஐயப்பா! சுவாமியே! என கூட்டுப்பிரார்த்தனை செய்ததில், தெய்வம் பிரத்யட்சமாய் அங்கே இருந்ததை உணரமுடிந்தது.  தீபாராதனையுடன் ஹரிவராசனம் பாட ஐயய்னின் அருள் நிறைந்தது.

நுனி வாழை இலையைச் சுற்றி சந்தனம், குங்குமம் இட்டு பகவான் முன் வைக்கப்பட்டது. பின்னர், ஐயப்ப பக்தரால் இலைகட்டும், பிரசாதமும் வழங்க அன்னதானம் விநியோகம் தொடங்கியது. 

பந்தியிட்டு அனைவரும் தரையில் அமர்ந்து இலை வைத்து, கேரளத்து முழு உணவும் பரிமார, மிகுந்த உபசாரங்களுடன் வயிரார ருசியான அண்ணதானம் நடந்தது. சுமதி அஙர்கள், சுதாகர் அவர்கள் தலைமையில் பெரும் குழு உணவு தயாரித்தது, பலரும் உணவு பரமாறி உதவினர், 300க்கும் மேற்பட்டோர் உண்டு மகிழ்ந்தனர். மாபுளிசேரி, சக்க வரட்டி, உண்ணியப்பம், அரவனப்பிரசாதம், அவியல், சாம்பார், இரசம், மோர், நேந்திர சிப்ஸ், அப்பளம், வடை, ஆப்பிள் ஊரறுகாய், அடப்பிரதமன் என இலை நிறைந்த சுவை உணவு அனைவரையும் ஆஹா ஓஹா என மனமாரப் பாராட்டவைத்தது.

சாஸ்தா ப்ரீதி தெய்வ தரிசனம், நளபாகமும் தான்!

படங்கள்: ஸ்ரீனிவாசன்

Watch live video https://fb.watch/oQnCi554g-/?mibextid=j8LeHn

இடம் பொருள் ஏவல்

தமிழ் மொழி பழமையால் மட்டும் பெருமையடைவதில்லை, அதில் உள்ள அறவிழுமியங்களாலும்தான். தமிழில் இருக்குமளவிற்கு ஆழந்து அகன்று கூறப்பட்டுள்ள அறக்கருத்துக்கள் மற்ற மொழிகளில் உள்ளதா என்பது ஐயமே!

‘இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுக’ . ‘ஒரு இடம் பொருள் ஏவல் இல்லையா?’, ‘இந்த இடத்தில இத பேசியிருக்கலாமா?’ என்று இயல்பாகப் பலர் சொல்லக் கேட்டிருக்போம்.

ஒரு கருத்தைக் கூறும்போது அதற்கான சரியான இடத்தை அறிய வேண்டும். சொல்லும் கருத்து சரியானதாக இருந்தாலும் அதைக் கேட்கும் நிலையில் அடுத்தவர் இருக்கிறார்களா என்று அறிய வேண்டும். அதனை சரியான பொருளில் சொல்கிறோமா? அது தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை அறியவேண்டும். அதை சரியானவரிடம் தான் சொல்கிறோமா என்பதை அறியவேண்டும். இப்படி சரியான தருணம், சரியான பொருள்படும் படி, சரியான ஆளிடம் சொல்லுவதுதான் சிறந்தது. (Traits of a good communication).

உயர்கல்விகளில் இருக்கும் பாடதிட்டங்களில் சொல்லப்படும் செய்திகளை தமிழ் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது என்பது தமிழின் சிறப்பு.

தமிழில் இடக்கரடக்கல் என்று சொல்லுவார்கள், மங்கலமான இடத்தில் அமங்கல சொற்களை சொல்லமாட்டார்கள். சுவாமி விளக்கை அணை என்று சொல்லாமல் விளக்கைக் குளிர வைக்கச் சொல்லுவார்கள். வயிற்றுப்போக்கு என்பதை வயிற்றாலே போகிறது என்பார்கள், மலம் கழிக்கப் போனான் என்பதை “கால் கழுவி வந்தான்” “காட்டுக்குப் போனான்”, “கொல்லைக்குப் போனான்”, “வெளியே போனான்” என்று சொல்லுவர். சிறுநீர் கழிக்கையை ஒன்றுக்குப் போகை என்பர். செத்துப் போனார்: இயற்கை எய்தினார், இறைவனடி சேர்ந்தார், உயிர் நீத்தார் என்பர். எப்படி வேண்டுமானாலும் வாழ்வது என்று இல்லை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு சின்னச்சின்ன செயலையும், சொல்லையும் நுட்பமாக அழகுபடித்தியிருப்பதில் இருக்கிறது நமது பாரம்பர்யம்.

எடுத்துக்காட்டாகக் குழந்தைக்குப் பெயர்வைக்கும் வைபவத்தில் குழந்தைக்கு அலங்கார தொட்டில் இருக்கும், அதைக்கொண்டுவர பணிக்கும்போது ‘அதை யார் கொண்டு வருவது அது பிணம் கனம் கனக்கும்!’ என்று ஒருவர் பதில் சொன்னால் ‘எப்படி இருக்கும்?’, அந்த மங்களகரமான இடத்தில் இப்படி அமங்கல சொல்லைச் சொல்லுவது முறையல்ல. இது ஒரு வெளிப்படையான உதாரணம்.

ஒரு செய்தியை எந்தப் பொருளில் சொல்லுவது என்று ஒன்று இருக்கிறது, perspective என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. ஒருவரை குறை கூறுவதுபோலவும், குத்திக்காட்டுவதுபோலவும் தவறை சுட்டிக்காட்டுவதற்கும், என்ன தவறு என்று சொல்லுவதற்கும் உள்ள இடைவெளி அது.

நாசூக்காகச் சொல்லுவது, சொல்லும் விதம், எந்தக் குரலில் எந்த முறையில் சொல்லுகிறோம், நம்மில் வலியாரிடமும், எளியாரிடமும் எவ்வாறு இதை அனுகுகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அவன் சொன்னது சரிதான் ஆனா அத அவன் சொன்ன விதந்தான் என்னைக் கோவம் கொள்ள வைத்தது என்று சொல்லக் கேட்டிருப்போம்.

நயம்பட உரை என்று சொல்லுவார்கள், சாப்பிடி வாங்க என்பதைக்கூட மிக நயமாக அன்பைக்குழைத்து சொல்லுவதில்தான் எத்தனை விதம். ‘எவ்வளவு நேரமா கூப்பிட்றேன் வரையா இல்லையா?’ என அதுட்டுவது, ‘சாப்பிட வா… கண்னு! நேரமாச்சி..’ என்பது என்று அதில்தான் எத்தனை விதம், நாம் நயம்பட பேசுகிறோமா என்று கவனிக்க வேண்டும்.

கோபப்படும் அப்பாக்களுள்ள வீட்டில் திட்டுவாங்கி அழும் குழந்தைகளிடம் பரிவோடு பேசும் தாத்தா, பாட்டிகள் அதையே நயம்பட உரைத்துக் குழந்தைகளின் அழுகையையும் போக்கி அவர்கள் செய்ய வேண்டிய காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்வதை பார்பதில்லையா. இப்படி செய்யப் பெரும் பொருமையும், முதிற்ச்சியும் அவசியமாகிறது.

வள்ளுவர் இடனறிதல் என்ற அதிகாரமே வைத்துள்ளார். ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர் கூட அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர் என்கிறார்.

ஒரு செயலை இடைவிடாமல் தொடர்ந்து முயற்சித்தல் Persistence என்பார்கள் அதனுடன் இடம் அறிந்து செயலாற்றுவது முக்கியம் என்பார் வள்ளுவர்.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

எப்படி பேச வேண்டும் என்றும் வள்ளுவர் சொல்வன்மையில் சொல்லுகிறார்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

The power of Nunchi என்று ஒரு புத்தகம் கார்பரேட் உலகில் மிகப்பிரபலமானது. இது கொரியன் கலாசாரத்தில் உள்ள ஒரு சொல் நுன்ச்சி. இது கூறும் கருத்து நம் தமிழ் கலாசாரத்தில் உள்ள இடம், பொருள், ஏவலே. சூழலை அறிந்து, அடுத்தவர்களின் மனத்தை அறிந்து நாம் செய்ய விழைவதை அதன் போக்கில் செய்ய எத்தனிப்பது, அதன் போக்கில் புதிய சிந்தனைகளையும் மாற்று கருத்துக்களையும் ஏற்று மாறத்தயாராகும் மனநிலை.

இடம், பொருள், ஏவல் என நம் மனங்களில் விதைந்துவிட்ட சொல்லாடலின் முழுமையான பொருளை உணரவும் அதன்படி நடக்கவும் தான் நமக்கு முதிற்சியும் அனுபவமும் தேவைப்படுகிறது.

Reference:

சியாட்டிலில் சின்ன ஜீயர்

ஒரு இந்து அய்யங்கார் சன்னியாசியின் நிகழ்ச்சி, அமெரிக்க தேசிய கீதமும், இந்திய தேசிய கீதமும் குழந்தைகள் பாட ஆரம்பமானது. சின்ன ஜீயர் ஸ்வாமிகள் மற்றும் அமெரிக்காவின் இந்தியத் தூதர் T.V. நாகேந்திர பிரசாத் உரையுடன் தொடங்கியது நிகழ்வு. சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து வந்திருந்த அவர் சியாட்டிலில் இந்த ஆண்டுக்குள் தூதரக அலுவலகம் வரும் என்ற நற்செய்தியை நினைவுபடுத்தினார். மூன்று மில்லியன் இந்திய மக்கள் அமெரிக்காவில் வாழ்வதை சுட்டிக்காட்டி, இந்தியா ஆன்மீக பூமியாக விளங்குவதையும், உலகிற்கு ஆன்மீக வளங்களை இந்தியா கொடையாக வழங்குகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். அவர் காந்தின் வரிகளை நினைவுபடுத்தினார்.

என் வீடு எல்லாப் பக்க சுவர்களும் அடைக்கப்படுவதையும், என் ஜன்னல்கள் அடைக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை. எல்லா நிலங்களின் கலாச்சாரங்களும் முடிந்தவரை சுதந்திரமாக என் வீட்டில் வீசப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நான் யாராலும் என் ஊன்றிய கால் தள்ளப்படுவதை மறுக்கிறேன்.

காத்தியடிகள்


பூரணத்தில் இருந்தது பூரணத்தை நீக்கிய பின்பும் எஞ்சி இருப்பது பூரணமே பாடலுக்கு குழந்தைகள் குச்சிப்புடி நடனமாட நிகழ்வு தொடங்கியது. இந்தியா பூஜ்ஜியத்தை மட்டுமல்ல முடிவிலியையும் (infinite) வழங்கியிருக்கிறது என்று எண்ணத்தோன்றும் இந்தப்பாடல். நாம் அனைவரும் இறைவனின் முழுமையான துளி என்பதையும் சொல்லும் அற்புதமான உபநிடதப் பாடல்.

ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते

पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥

ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ண மாதாய

பூர்ண மேவா வசிஷ்யதே

ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:

ஈசா வாஸ்ய உபநிடதப் பாடல்

இப்பாடலின் காட்சியைப்போல் ஒரு ஆர்த்தி தீபத்தைக்கொண்டு குத்துவிளக்கு ஒளி ஏற்றப்பட்டது. ஒரு முழுமையான ஜோதியிலிருந்து இப்போது மேலும் ஐந்து முழுமையான ஜோதிகள்.

அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என பல தத்வார்த்த பிரிவுகள் இருந்தாலும், ஒரு விசிஷ்டாத்வைத்த ஜீயரை வரவேற்க அத்வைத்த ஆச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம் பாடல் பாடப்பட்டது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நினைபடுத்தியது.  இந்திய சீன யுத்த சமயத்தில் எழுதப்பட்ட பாடல் இன்றைய இரஷ்ய, யுக்ரைன் போரை நினைவுபடுத்தியது.

மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம்

ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத

யுத்தம் த்யஜத ஸ்பர்த்தாம் த்யஜத

த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமணம்

ஜனனீ ப்ருத்வீ காமதுகாஸ்தே

ஜனகோ தேவ: சகல தயாளு

தாம்யத தத்த தயத்வம் ஜனதா

ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!

அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!

போரினை விடுக! போட்டியை விடுக!

பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!

அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!

அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!

அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!

உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!

ஜீயர் கல்வி அறக்கட்டளை (Jeeyar Education Trust), விடி சேவா (Vikasa Tarangini பெறுகும் புனல்), வேத வகுப்புகள் (Prajna), பர்வையற்றவர்களுக்கான பள்ளி (Nethra Vidyalaya) என நிகழ்வு தொடங்கும் முன்னே ஜீயரின் பணிகளை பட்டியலிட்டபோதிலும், மேலும் ஒரு முறை பட்டியலிட்டனர், அதில் ஜீயர் நேபாள பூகம்ப பகுதிகளை நேரில் பார்வையிட்டதையும் குறிப்பிட்டனர். அதன் பிரதிபலிப்பாக சியாட்டில் நகர நேபாள சங்கத்தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தார். அமெரிக்க புயல் நிவாரண உதவி, அமெரிக்காவில் வீதிகளை தத்தெடுத்து சுத்தம் செய்யும் பணி (Adopt-a-road) என சேவையையே இறைப்பணியாகக் செய்வதைப்பட்டியலிட்டது மலைப்பையும் மகிழ்வையும் தந்தது.

ஜீயர் அவர்களும் தன்னுடைய உரையில் சேவையே இறைவனை அடையும் மார்கம் என்றார். கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ராஜ யோகம் என்ற வரிசையில் இதுவும் ஒரு வழியா என என்னை நானே கேட்டுக்கொண்டேன். மக்கள் வேவை மகேசன் சேவை என்றும், மானவ சேவா மாதவ சேவா என்றும் ஜன சேவா ஜனார்தன சேவா என்று வெவ்வேறு மொழிகளில் சொல்லப்படுவதை சுட்டிக்காட்டி மக்கள் சேவை என்று இல்லை, எல்லா உயிர்களிடத்தும் அன்பு வேண்டும், மேலும் இயற்கை வளங்களை காக்க வேண்டும். இறைவன் ஒவ்வொரு பொருளிலும் துகளிலும் உள்ளான். சித், அசித் என எல்லாவற்றையும் ஒரு சேவை மனப்பாங்குடன் அனுகவேண்டும் என்றார். ஜவராசிகளில் மனிதன்தான் சுற்றுச்சூழலை மாசு செய்கிறான், இதை மனதில் வைத்து மாற்றம் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தொடங்கவேண்டும் என்றார்.

பத்ம பூஷன் பட்டம் தன்னார்வளர்களுக்கானது, அவர்கள் சார்பாக இந்த “சின்ன” ஜீயரை சென்று பெற்றுக்கொள்ள சொன்னார்கள். சும்மா கிடைப்பதை வேண்டாம் என்று சொல்லாமல் பெற்றேன் என்று பெருமையிலிருந்து ஒதுங்கி நின்றார். வண்டி வேகமாக ஓடுவதாக வண்டியை பாராட்டுவார்கள் ஆனால் ஓயாமல் உழல்வது சக்கரம்தான், ஆனால் ஒரு பழுது என்ற உடன் டயர் பஞ்சர் என்பார்களே ஒழிய வண்டியை குறை சொல்லமாட்டார்கள் என்றார். இந்த ஒப்பீடு எனக்கு அத்தனை சுவாரஸ்யமாக படவில்லை. ஜீயர் என்றதும் மிகப்புனிதப்பட்டம் கட்டி, அவரை அனைத்திலும் உயர்ந்தவராக, பெரும் அறிவு ஜீவியாக நினைத்துக்கொள்வதில் உள்ள சங்கடங்களாகவே இது எனக்கு தோன்றியது.

இந்த பிரபஞ்ச இயக்கத்தையும் நம்முடைய உடல் இயக்கத்தையும் ஒப்பீடு செய்து பேசினார், எப்படி நம் உடலின் வெவ்வேறு பாகங்கள் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக செயல்படுகிறதோ அதுபோல் நாமும் சகோதரத்துவத்துடன் அனைவருடனும், அனைத்து இயற்கை சக்திகளுடன் இணக்கமாக இருக்கவேண்டும் என்றார். இதனையே அவர் ஒருவருடன் ஒருவர் சண்யிடுவதற்கு உதாரணாக நீட்டித்தபோது உடல் உறுப்புகள் எப்போது ஒன்றை ஒன்று தாக்கின, எப்போதாவது தெரியாமல் நாக்கை கடித்துகொள்வதுண்டு அவ்வளவே என்று அந்த உதாரணமும் கொஞ்சம் பொருந்தாமல் பல்லிளித்தது.

ஆனால், நிகழ்வில் கலந்துகொண்ட செனெட்டர் மங்கா திங்கரா தங்கள் சீக்கிய வழக்கத்தில் உள்ள லங்கர் (அண்ணதானம்) பற்றி பேசியதை ஜீயர் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார், கராஜ் (garage) என் உள்ளூர் வழக்கு சொல்லை உபயோகித்தார். டெஸ்லாவைப்பற்றி, ஐம்பதாயிரம் டாலர் வாகனம் என சின்னத்சின்ன தகவல்களை உள்ளூர் வழக்குகளை, அனைவரின் பேச்சையும் கவனிப்பதையும் அதை அவர் கிரகிப்பதையும் காண முடிந்தது.

கேள்விபதில் நிகழ்வு என்று பெயர் ஆனால் அது தொடங்கவே இரண்டுமணி நேரம் ஆகிவிட்டது. தெகுத்து வழங்குகிறேன் பேர்வழி என்று ஒருவர் செய்த கெக்கபிக்க சகிக்கவில்லை. முகூர்த்த நேரம், ராகுகாலம், எமகண்டம் என எல்லாவற்றுக்கும் நேரம் பார்கும் இந்துமதம் ஒரு நிகழ்வை நேரம் சொன்னது சொன்னபடி செய்ய இந்த மத குருக்கள் கட்டளையிட்டால் நன்றாக இருக்கும். காலத்தாமதத்தை தவறாக நினைக்காமல் கெக்கபிக்க என வழிவதை இந்தியர்கள் விட்டொழிக்கவேண்டும் என்பது என் எண்ணம்.

“என்ன நடந்தாலும்… அது என் நன்மைக்காகவே” என ஏன் எண்ண வேண்டும்? நமக்கு ஏதேனும் அநீதி நடந்தால், அதை எதிர்த்துப் போராடுவதா அல்லது கடவுளிடம் விட்டுவிட்டு காத்திருப்பதா? என்ற கேள்விக்கு இறைவன் உடலையும் புத்தியையும் கொடுத்திருக்கிறான், அதனை பயன்படுத்துங்கள் என்றார்.

கர்மா உண்மையில் திரும்பி வருமா? அப்படியானால், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதையும், ஊழல்வாதிகள் பலம் பெறுவதையும் பார்க்கிறோமே என்ற கேள்விக்கு உங்கள் மீது கவனம் செலுத்துங்கள், பிறர் மீதான கர்மா பற்றி நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். கர்மா அதன் வழியில் நிச்சயம் செயல்படும்.  உடல் எப்படி ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் பாதிக்குமோ அது போலத்தான் கர்மா, ஒரு கணியில் ஒவ்வொரு செயலும் பதியப்படுவதுபோல் நம்முடைய செயல்கள் எண்ணங்கள் எல்லாம் கண்காணிக்கப்படுகிறது என்பதை மறக்கவேண்டாம் என்றார்.

வாழ்க்கையில் ஒரு பெரிய குறிக்கோளைப் பின்தொடர்வதில், தற்போதைய தருணத்தை நான் அனுபவிக்க அஞ்சுகிறோம்? எனது எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்காலத்தில் உண்மையாக வாழ வழி உள்ளதா?

என்ற கேள்விக்கு ஒரு இலக்கு என்பது அவசியம், சேவையை குறிக்கோளாககொள்ளுங்கள், செய்யும் ஒவ்வொரு செயலும் இறை சேவையாக நினைத்து செயல்படுங்கள் என்றார்.

அயல்நாட்டு பண்பாட்டு சூழலில் வளருபவர்கள், தனது குடும்ப கலாச்சாரம் மற்றும் மரபுகளை எப்படி தொடர்ந்து பின்பற்றுவது? குடும்ப மரபுகளை பின்பற்றினால் வாழும் சமூகத்தில் ஒட்டாமல் போகிவிடுகிறோம் இதற்கு வழிதான் என்ன என்ற கேள்விக்கு, இரண்டையும் கடைபிடிக்கவேண்டும் என்று பதிலலித்தார், இது ஏனோ எனக்கு ஒரு முழுமையற்ற, கேள்வியை சரியாக உள்வாங்காத பதிலாக தெரிந்தது.

நமது தர்மத்தைப் பின்பற்ற முயலும்போது, எது சரியானது என்று நமக்கு எப்படித் தெரியும்? நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? என்ற கேள்விக்கு தர்மம் பல நிலைகளை கொண்டது முதலில் உங்களுக்கு நல்லவனாக இருங்கள், அடுத்து குடும்பத்திற்குள், சமூகத்தில், இந்த உலகிற்கு மேலும் கடவுளுக்கு.  இப்படி ஒவ்வொரு வட்டத்தின் விதிகளை கடைபிடிப்பதே தர்மமாகும், நீங்கள் அதிலிருந்து விலகும்போது அதன் பலனை அனுபவிப்பீர்கள் என்றார்.

ஒரு நபரின் வாழ்க்கையில் ஆன்மீகத்தின் பங்கு என்ன? இந்த நவீன யுகத்தில் ஆன்மிகத்தால் ஏதேனும் நன்மைகள் உண்டா? என்ற கேள்விக்கு நாம் உடல் சார்ந்தே இயங்குகிறோம், ஆன்மாவை நோக்கி செல்லவேண்டும், அதற்கு ஆன்மீகம் தேவை என்றார்.

நீங்கள் ஏன் சன்னியாசியானீர் என்ற கேள்விக்கு பட்டும்படாமல் சிலர் ஆசிரியர்கள் ஆகிறார்கள், சிலர் ஓட்டுநர்கள் ஆகிறார்கள், நான் ஆச்சாரியன் ஆனேன் என முடித்துக்கொண்டார்.

ஏன் கோளாடு சுற்றுகிறீர்கள் என்ற கேள்விக்கு இது விசிஷ்டாத்வைத மரபு என்றும். இதில் மூன்று கோல்கள் உள்ளன. ஒன்று இந்த உலகம் (prakṛti) உண்மை மாயை அல்ல என்கிறது. இரண்டு ஒவ்வொரு ஜீவனிலும் உள்ள ஆன்மா உண்மை என்கிறது. மூன்று இந்த இரண்டையும் இயக்கும் பிரம்மன் ஒன்றே அது உண்மை என்கிறது என்றார்.

இந்த கேள்வி பதிலில் குழந்தைகள் இயல்பாக அவர்கேட்ட கேள்விகளுக்கு எந்த சுனக்கமும் இன்றி பதில் கூரியதும், ஜியரின் கருத்துக்கள் குழந்தைகளிடம் முழுமையாக சென்றதும் ஆச்சர்யமாக இருந்தது. ஜீயர் இயல்பாக குழந்தைகளின் அன்பை மதிப்பை பெற்றதுபோல தெரிந்தது.

பெல்வியூ மேயர், சுனோஹாமிஸ் மேயர், இசாகுவா மேயர், லேக் வாஷிங்டன் பள்ளிக் கல்வி உறுப்பினர், செனட்டர் மங்கா திங்கரா என பலர் தங்களின் வாழ்த்துகளை ஆதரவை இந்நிகழ்சிக்கு வழங்கி மேடையில் பேசினர். வாஷிங்டன் மாநில காங்கிரஸ் உறுப்பினர் பிரமிளா ஜெயபாலன் (Pramila Jayapal) தன்னுடைய காணொளி உரையை வழங்கியிருந்தார். வாஷிங்டன் ஆளுநர் ஜே இன்ஸ்லி (Jay inslee) ஜீயரின் வருகையை பாராட்டி ஜூலை 28, 2023யை Day of equality என்று அழைத்து அவருக்கு பட்டையம் வழங்கி கௌரவித்தார்.

பல்வேறு உள்ளூர் சமூக ஆர்வல இந்திய அமைப்புத்தலைவர்களுக்கு ஜீயர் ஆசிவழங்கி பரிசு வழங்கினார். இருபதுக்கும் மேற்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு ஒரு மேடையில் கண்டது மிகுந்த ஆனந்தம் வழங்கியது. இத்தனை மனிதர்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்து, சேவையை அவர்களின் உள்ளங்களில் வாழ்ஊக்கமாக விதைத்து நற்பணியாற்றும் சின்ன ஜீயர் மேலும் மேலும் தன்னுடைய பங்களிப்பை வழங்கி, சகோதரத்துவமும், ஒற்றுமையும், எல்லோரும் சமம் என்ற எண்ணங்கள் மக்களிடம் வேறுன்ற ஆரோக்கியத்துடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

ஆச்சாரியாள் என்றால் விழுந்து சேவித்து, மந்திரம் சொல்லி, ஆசிர்வாதம் வாங்கி நகர்வது என்றில்லாமல் ஆரோக்கியமான கலந்துரையாடல், சேவா பக்தி, இனம் மொழி, நாடு கடந்து அனைவரையும் ஒண்றினைக்கும் பணி என சின்ன ஜீயர் காலத்திற்கு ஏற்ப புதுமைகள் செய்கிறார்.

ஜெய் ஶ்ரீமன் நாராயண

நன்றி! குரு
ஜூலை 30, 2023

அரேபிய உணவு

துபாயில் ஏழுவருடம் வேலை செய்தவர் சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு இது. அரேபிய ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்துகொண்டு, அத்தனை மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பர் என்றார். வீட்டு வேலைக்காரி உட்பட அனைவரும் ஒரே காரில் பயணிப்பர் என்றார். முதன்மையான, பிரியமான மனைவி முன்னிருக்கையில் பயணிப்பாராம். பணக்கார நாடாக இருந்தபோதிலும், இந்த காலத்திற்கு சற்றும் ஒட்டாத பழமைவாத நாடாக அரேபியா இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் பெண்கள் வாகனம் ஓட்டவே அனுமதி கிடைத்திருக்கிறது. பெண்கள் ஆணின் துணையுடன்தான் எங்கேயும் செல்ல முடியுமாம், அரசரை எந்த விமர்சனமும் செய்ய முடியாதாம். தண்டனையாகக் கையை இழந்தவர்கள், காலை இழந்தவர்களை சர்வ சாதாரணமாகக் காணமுடியும். இந்த அதிர்ச்சி தகவல்களைத்தாண்டி அவருடைய அந்த அனுபவம் இன்னும் சுவாரஸ்யமானது.

ஏழுவருடமாக அவர் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி பலமுறை இவரை வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தும் இவர் அதைத் தவிர்த்திருக்கிறார். சுத்த சைவரான இவர் அரேபிய வீட்டு உணவை எப்படிச் சகித்துக்கொள்வது என்ற பயம், அவர் முதலாளி என்பதால் இதை முகத்துக்கு நேராகவும் சொல்ல முடியாமல் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லித் தவிர்த்துவந்துள்ளார்.

நாளுக்கு மூன்று முறை தொழுகை, தொழுகை நேரத்தில் சாலையில் வீணாகத் திரிந்தால் கேள்விகேட்கப்படும். வார விடுமுறை ஞாயிறு அல்ல வெள்ளிக்கிழமை. வாரத்தின் ஆறு நாளும் வேலை எனப் பல பல விதிகள். சரி விஷயத்திற்கு வருவோம்.

இவர் அரேபியாவிலிருந்து முழுவதுமாக இந்திய திரும்பும் நேரம் வந்தபோது அந்த முதலாளி விடாப்பிடியாக இவரை வீட்டிற்கு அழைத்துள்ளார், இந்த முறை எந்த நொண்டி சாக்கும் சொல்லாமல், இவர் சம்மதித்துவிட்டார். உள்ளூர பயம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நாளும் வந்தது, இவர் அந்த அரேபிய முதலாளியின் மாளிகையில் சென்ற பின்தான் தெரிந்தது முதலாளியின் மனைவி ஒரு இந்தியர், மும்பைக்காரர் என்று, அந்தப்பெண் இவருக்காகச் செய்திருந்த அந்த சிறப்பு உணவு என்ன தெரியுமா உப்புமா! கடைசியில் இந்த உப்புமாவுக்கா இத்தனை வருடம் பயந்திருந்தேன் என்று நகைத்து, அவரின் வீட்டை விட்டும் அரேபியாவை விட்டும் நடையைகட்டியுள்ளார்.

Enter Key to ஹாலோவீன்

Translation of Sundari Sridharan article in English

ஹாலோவீனுக்கு முன் வாரத்தில் தான்! புடவைகட்டிகிட்டு, கோலமிடு, சுண்டல் சாப்பிடு, தீபாவளி பட்சனம் வினியோகிச்சி, பட்டாசு வெடிச்சி, விருந்துக்கு கூப்பிட்டு, விருந்துக்கு சென்று, போட்டோக்கு போஸ் கொடுத்து, ஈன்னு பள்ளிளிச்சு… (வருஷஷா வருஷம் செய்யர கூத்துதான்… உங்களுக்கு தெரியாததா?) இந்த கூத்து முடிஞ்சி இனிமே இந்த வருஷம் முடியர வரை தூங்கலாம்னு போன போது. என் டீன் ஏஜ் மகன் சூர்யா மயக்கத்தில் இருந்து விழித்து, ஹாலோவீனுக்காக ஏதாவது சுவாரஸ்யமா செய்யனும்னு ஞானதிரிஷ்டியோட வந்தான்! “ஹாலோவீன் நம்ம கலாச்சாரம் இல்ல” என்றேன். அம்மா, மகனுக்கு இடையே ஒரு வலுவான உள்நாட்டு சண்டை! “இந்த சின்னபிள்ளதனத்திலிருந்து வெளிய வாடா” என்ற பிரம்மாஸ்திரத்துக்கும் பலனின்றி அவன் தான் வெற்றிகொண்டான்!

ஹாலோவீனுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மந்தநிலையிலிருந்து திங்கள் மேஜிக் மேனியா வரை குடும்பத்தை மகிழ்ச்சியுடன் திகைக்கவைக்க தயாரானேன்! எனது கணவர் ஸ்ரீதரிக்குதான் முதல் அதிர்ச்சி வைத்தியம், நவராத்திரி விளக்கை பேய் மாளிகை (உண்மையில் ஒரு பேய் பால்கனி) மாயாஜால விளக்காக மாற்ற ஆணை பிரப்பித்தேன். ஹாலோவீன் அலங்காரத்தில் ஒரே இரவில் மார்தா ஸ்டீவர்ட்டாக மாற, கூகுள் தேடல் மற்றும் யூடியூப் கவனிப்பு என கடமையே கண்ணானேன்! அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை ஹாலோவீன் கடவுள்கள் (இந்த விஷயத்தில்.. பேய்களா?) என் அதியுக்கிர திட்டமிடலைப் பார்த்து சிரித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்!

அரை மனதாக நான் முடித்திருந்த என் ஹாலோவீன் பயனத்தின் மிச்ச மீதியை ஸ்வீகரிக்க தயாரானேன். ஆமாம் நான் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் குழுவில் ஹாலோவீன் பயமுறுத்தலை உருவாக்கிய அனுபவம் (காதித கத்தரிப்பு / ஓரிகாமி), என்னுடைய அலுவலகத்தில் ஹாலோவீன் அதிபயங்கர அலங்கரம் அமைத்தது, மருமகளாக ஹாலோவீன் பற்றி அறியாத என் அப்பாவி மாமனார் (MIL), மாமியாருடன் (DIL) வீட்டில் செய்த ஹாலோவீன் அமர்களங்கள் என ஹாலோவீன் அதிமேதாவி என்ற பெருமிதத்தோடு என் பையனின் கனவுலகை படைக்க பிரம்மனாக முழுமையாக மாறி இருந்தேன்.

நான் எதிர்பார்த்தது போலவே வேலையை இழுத்து போட்டுவிட்டு, அந்த பத்தாம் வகுப்பு மாணவன் “எனக்கு வகுப்புகள் உள்ளன, வீட்டுப்பாடம் செய்ய வேண்டும்” என்று ஜெகா வாங்கினான். எந்த இந்தியப் பெற்றோரும் வீட்டுப்பாடம் என்னும் அஸ்திரத்திற்கு எதிர் பாணம் விட்டதில்லேயே! அதுவே நானும் பின்வாங்குவதற்கான முதல் சமிக்ஞையாகும், ஆனால் நான் என் மகனின் விருப்பத்தை விரைவேற்ற ஹாலோவீன் ஜோதியை ஏந்தி முன் செல்ல முடிவு செய்தேன்! பையன் வைவிடும்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக இருக்கும் கனவரின் உதவியை நாடினேன். WFHயில் இருந்தவரை எளிதில் வலைபோட்டு பிடித்தேன். அந்த பேய் பால்கனி லைட் எஃபெக்ட்களை மாலை 6 மணிக்குள் அமைத்திட வேண்டும் என்று வரம் வாங்கினேன். மகிழ்ச்சியுடன், ‘சபாஷ் சுந்தரி!’ என்று சொல்லி, எனது கலையுலக ராஜ்ஜியத்தின் கற்பனை சிறகுகளில் அனைத்து அலங்காரங்களும் நிஜமாகி ஜொலித்துக்கொண்டிருந்தது!

நான் மார்த்தா ஸ்டீவர்ட் அல்ல, மாயவரம் மாதுபோனு(டில்) என்ற உண்மையை ஏற்கத் தயாராக இருந்த நேரத்தில் எனது கலையுலகில் பல்பு பியூஸ் ஆனது. இல்லை அகில உலக ஹவுஸ் ஓயிபுகும் சகல மொழிகளிலிலும் பிடிக்காத அந்த செய்தி எனக்கு எட்டியது, ‘இன்று வேலைக்காரி விடுமுறை எடுக்கிறாள்!’ என்பதுதான் அது. என்னுடைய சாகச பயனத்திற்கு சோதனை, மனம் தளர்வேனா நான்? ஆம் கொஞ்சம் தளர்ந்துதான் போனேன். தெனாலி (தமிழ்) திரைப்படத்தின் உரையாடலைப் போலவே, எனது அலங்கார யோசனைகள் சர்வதேச மட்டத்தில் தொடங்கி, தேசியத்திற்கு நகர்ந்து, பின்னர் பிராந்தியத்திற்கு என்று நகர்ந்து தர லோகலாக மாறியது.

அடுத்து ஆயிரம் ஐடியாக்களோடு இருக்கும் அபூர்வ சிகாமனி என் மாமனாரை (FIL) இந்த மெகா பிராஜக்டில் சேர்த்துக்கொண்டார்; ஹாலோவீனில் தேர்ந்த பயிற்சி பெற்ற அமெரிக்க பலமுறை சென்று திரும்பிய தாத்தா அல்லவா அவர், அவர் பூசணிக்காயை செதுக்க ‘நான் ரெடி! நீங்க ரெடியா?’ என கத்தி கபடா என்று தயாரானார்! இது பூச்சாண்டி லைட் தீம் ஹாலோவீன் இதில் பூசணிக்காய் எல்லாம் இல்லை என்று சொன்னதும், நாங்கள் முழு பூசணியை சேற்றில் மறைக்கிறோம் என்று ஊம்மென மூஞ்சை தூக்கிவைத்துக்கொண்டு. முழு பூசணிக்காய் கிடைக்கும் கடைகளை பரிந்துரைத்தார். நல்ல வேலை பையன் ஜகாவாங்கிய பின் இதை சொல்லியிருந்தார். இப்போது என்னுள் இருப்பது அடிபட்ட மார்த்தா! இதுவே நான் முன்னிருந்த உக்கிர நிலையில் சொல்லியிருந்தால், முத்துமாரியம்மன் கழுத்தில் தொங்கும் எலுமிச்சைப்போல வீடு முழுக்க பரங்கிக்காயை (இந்திய பூசணிக்காய்) நிரப்பி, அடுத்த வார மெனுவை “பரங்கிக்காய் வாரம்” என்று அறிவித்திருப்பேன்!

மாலை 6 மணி நெருங்கிவிட்டது, விஷயங்கள் சூடுபிடித்தன, இருட்டிவிட்டது! ஸ்ரீதரின் லைட்டிங் மேஜிக்கைப் பார்த்து என்னை உற்சாகப்படுத்தக்கொண்டேன். முன்கூடம் மின்கம்பிகள், ஜங்ஷன் பாக்ஸ் சூழ கட்டுப்பாட்டு அறையாக மாறியது, நடுநாயகமாக ஸ்ரீதர் தனது மடிக்கணினியுடன் அமர்ந்து அருள்பாளிக்க, அந்த சுவர்கபுரி உதயமாக ஆயத்தமானது! இந்த நேரத்தில்தான் நான் மூச்சை மெல்ல இழுத்து விடும் தியானப் பயிற்சியை மேற்கொண்டு இருக்க வேண்டும். வாழ்வின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் அமைதி, அமைதி என்ற வேள்விகளை நடத்தி இருக்க வேண்டும், ஆனால் அதற்கு நேர் மாறாக, ருத்ர தாண்டம் எடுத்தேன். அந்த நவராத்திரி நாளைப்போல் இரவு 2 மணி வரைக்கும் எல்லாம் ஆகக்கூடாது, இந்த அலங்காரம் ஒரு நாள் கூத்து ஆகட்டும் காரியங்கள் அசுர வேகத்தில் என்று நான் சாமியாடி பொழுதில் அத்தனைக்கும் காரணமான அந்த உருவம் தன்னுடைய வீட்டுப்பாடங்களை முடித்து வெளியே தலைகாட்டியது, என்னுடைய காளிபார்வை டிராகன் கண்களாக அவன் கண்டிருக்க வேண்டும். ஆன் செய்த கிரைண்டர் போல அவனும் களத்தில் சுற்ற ஆரம்பித்தான்.

மூவரும் வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தபோது, ​​என் மாமனார் (FIL) இருண்ட அறையில் உட்கார வைக்கப்பட்டார், ஏனென்றால் ஒரு பயமுறுத்தும் பால்கனிக்கு அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு இருண்ட அறை தேவை என்பதை நாங்கள் இப்போது தான் உணர்தோம்! இருட்டு அறையில் இருந்த அவருக்கு திடீரென வந்தது அந்த யோசனை, அவர் தொலைபேசியிலிருந்து சத்தமாக நாதஸ்வர இசையை ஒலிக்கவிட்டார். ஹாலோவின் பேய்கள் குழம்பிதவித்தன. அந்த சரியான தருணத்தில் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தாள் எங்கள் முதல் ஹாலோவின் விருந்தாளி. வேஷ்டியில் ஒரு தாத்தா இருட்டு அரையில் மொபைல் வெளிச்சத்தில் முகம் மட்டும் தெரிகிறது. இன்னுமொரு வேஷ்டிமாமா, இருட்டில் லேப்டாப் ஒளியில், என் மகனோ பிரிண்டரின் கேபிள்கள் பிடுங்கபட்டதென பெருத்த குரலில் ஓலமிட, நானோ ஒரு நீண்ட தொடப்ப குச்சியோடு ஓட (நம்புங்கள் அந்த குச்சியில் ஒரு சோலக்காட்டு பொம்மை செய்லாம் என்று தான் எடுத்து வந்தேன்). ஒரு நிமிடம் நின்று, இந்த காட்சியை உங்கள் கற்பனைக்கு கொண்டுவாருங்கள். அந்தப் பெண் ஹாலோவின் பேயரைந்தார்போல நின்றாள்.

பயந்து அந்தப் பெண் ஓடிப்போகத் தீர்மானித்தபோது, ​​நான் அவளைக் கூப்பிட்டு, அவளை அமைதிப்படுத்த சாக்லேட்டுகளை தாராளமாக தந்தேன் (இந்த வீடு குழந்தைகள் வருவதற்குமானதுதான் என்பதை நான் பேசித்தான் புரியவைக்க வேண்டி இருந்தது). ஒரு வழியாக அவள் பயந்து அழாமல் சென்றுவிட்டாள் என்று திரும்பியபோது, இந்தனை கலேபரமும் இந்த ஒரு பெண்ணின் வரவுக்காகத்தானா என மாமனார் மூக்கால் அழுதார், இன்னும் அதிகமான குழந்தைகள் வருவார்கள் என்ற வாக்குறுதியுடன் நாங்கள் அவரை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

இறுதியாக எங்கள் மாபெரும் முயற்சி உயிர்பெற்றது. ஸ்ரீதர் தனது நவராத்திரி தொழில்நுட்ப அறிவை நீட்டிக்க முடிவுசெய்து, ஒரு ப்ளூடூத் கீபேடை வெளியே ஒரு நாற்காலியில் வைக்க முடிவு செய்தார்; குழந்தைகள் அதை ஒரு விருந்தாக எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக நாற்காலியில் டேப் செய்யுங்கள் என ஐடியா கொடுத்தேன்! சூர்யா “உங்களுக்கு தைரியம் இருந்தால் Enter Keyஐ அழுத்தவும்” என அச்சிட்டு நாற்காலியில் ஒட்டினான்! ஒரு சிறிய ஹாலோவீன் தீம் கொண்ட தானியங்கு ஒளிக் காட்சிக்காக, குழந்தைகள் கீபேடில் Enter Keyஐ அழுத்துவதே திட்டம்! அந்த பெருமையான தருணத்தில், இந்த Enter Key மூலம் நாங்கள் நுழையும் குழந்தையின் உலகம் எப்பேர்பட்டது என்பதை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். சூர்யா தனது சாக்லேட் வேட்டைக்காக இருட்டில் நழுவிச் சென்றுவிட்டான். ‘Trick or Treaters’ கோஷ்டிகளை ​நாங்களே கையாள வேண்டியதானது.

செட்டப் முடிந்த உடன் வருகை தந்த முதல் சிறுவனை முழு குடும்பமும் மிகப்பெரிய ஆரவாரத்தில் வரவேற்றது (எனது ஆர்வமுள்ள FIL உட்பட)! அவன் வீரம் மிக்க நேதாஜி உடையில் இருந்தும் எங்களின் அதிஉற்சாகமான வரவேற்பால் அவன் சற்று அதிர்ச்சியடைந்தான். ஸ்ரீதர் ஒரு நிமிட நீள ஒளிக்காட்சிக்கு Enter Keyஐ அழுத்துவதற்கு பெருமையுடன் வழிகாட்டி, ஆர்வமாய் பார்த்தார், நாங்கள் எங்கள் முதல் வாடிக்கையாளர் கருத்துக்காக ஆவலுடன் காத்திருந்தோம். எங்கள் show முடிந்ததும் அவன் திரும்பி சாவகாசமாகச் சொன்னான்.

‘எனக்கு பிடிச்சிரும் நிறைய விளக்கு மாறி மாறி எரிவதால் காட்சிகள் சரியா தெரியலை’ என்றான். என்னது விளக்கு சரியா எரியலையா, இந்த கருத்தை உள்வாங்க சில நிமிடங்கள் ஆனது, ​​​​இது ஒரு ஒலி, ஒளி நிகழ்ச்சி என்று அந்த பையன் புரிந்து கொண்டானா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ​​​​அவன் தனது அடுத்த கேள்வியைத் தொடுத்தான், “இது எப்படி வேலை செய்கிறது?”

ஸ்ரீதர் ஆர்வமானார், வயர்லெஸ் புளூடூத் என்று அவர் பாடமெடுக்க. குழந்தை மற்றொரு குறுக்குக் கேள்வியை எழுப்பியது, அண்ணே இது எப்படின்னே எரியும் என்ற செந்திலைப்போல அந்த “லெப்டாப்பிலிருந்து இந்த கீபோர்டை மட்டும் எப்படி உடைத்து வெளியே எடுத்தீங்க?”

டிஜிடல் யுகப்புதல்வனிடமிருந்து இப்படிப்பட்ட அப்பாவிதனமான கேள்வியா என அப்படியே ஷாக் ஆனோம், ​​ஸ்ரீதர் அந்த குழந்தையை தமிழ் பையன் என்று அடையாளம் கண்டுகொண்டார். அவனை தமிழில் பேசுமாறு கேட்டு திசை திருப்பினார்; சிறுவன் கீபேட் மேட்டரை கிடப்பில் போட்டுவிட்டு சாக்லேட்டை குடுங்க கிளம்பரேன் என காரியத்தில் கண்வைத்தான்! அவன் சின்னப்பையன், நம்ம ஒலி, ஒளி விஷயமெல்லாம் அவனுக்கு விளங்கவில்லை என்று நாங்கள் எங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டோம், இருந்தாலும் அவன் ரியாக்ஷன் கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. இருந்தும் ஸ்ரீதரை சற்று சமாதானம் செய்து வைத்தேன்.

எங்கள் அடுத்த பார்வையாளர்கள் இளம் டீன் ஏஜ் பெண்கள்; அவர்களே அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்; நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் உண்மையான உற்சாகத்தைக் காட்டி எங்கள் முயற்சியைப் பாராட்டினார்கள்; ஒரு பெண் கேட்டாள்: “விளக்குகளையும் இசையையும் எப்படி ஒருங்கிணைத்தீர்கள்?”

ஆழ்ந்த தொழில்நுட்பக் கேள்வியால் ஈர்க்கப்பட்ட நான், அது நிரல்ரீதியாகக் (program) கட்டுப்படுத்தப்படுகிறது என்று பதிலளித்தேன்; அவள் பதிலை உள்வாங்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டாள், எங்களை ஏற இறங்க பார்த்து ஒரு பட்டையம் வழங்கியனாள்

“அப்படியானால் நீங்கள் இருவரும் கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள்! அப்படித்தானே”

நான் சிரித்து முடித்துக்கொள்ள திட்டமிட்டிருந்தபோது, ஸ்ரீதர் ​​பொறியாளர் என்பது வேறு, தொழில்நுட்ப வல்லுநர் என்பவர்கள் வேறு என்று (engineers and technicians) வித்தியாசத்தை சிறுமிகளுக்குக் புரியவைக்க முனைந்தார்; பெண்கள் ஏன்டா இவரிடம் பேசினோம், சாக்லேட்டை குடுங்க சட்டுபுட்டுன்னு இடத்த காலி பண்றோம் என்ற ரீதியில் ஏக்கத்துடன் இயந்திரத்தனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர்; சரி, குழந்தைகள் அவர் போக்கில் இதை இரசிக்கட்டும் என்று விரைவில் நாங்கள் வீட்டிற்குள் செல்ல முடிவு செய்தோம், குழந்தைகள் நிகழ்ச்சியை தாங்களாகவே ரசிக்கட்டும், அதன் பின் மணியை அடிக்கும் போது சாக்லேட் கொடுக்கலாம் என்று நினைத்தோம்.

எங்கள் நடு கூடத்தில் இருளில் ஒளிந்துகொண்டு, ஆவலுடன் குழந்தைகளின் அனுபவங்களை காண வழிமீது விழி வைத்து காத்திருந்தோம். நிறைய குழந்தைகள் எங்கள் நெறிமுறைகளை சந்தமிட்டு படிக்கும் குரல் கேட்டது.

“உங்களுக்கு தைரியம் இருந்தால் Enter Keyஐ அழுத்தவும்”

குழந்தைகள் வழிமுறைகளை முழுமையாக படித்து; விசைப்பலகையில் Enter Key கண்டுபிடித்து, அவர்கள் தங்களுக்குள் தைரியமானவனை தேர்ந்தேடுத்து அழுத்த முனைந்தனர். அவர்கள் அனைவரும் நாற்காலியைச் சூழ்ந்துகொண்டு, Enter Keyயை யார் அதிகமாக அமுக்க முடியும் என்று தங்களுக்குள் காரசாரமாக போட்டிபோட்டனர். இவர்களது சண்டைக்கு இடையே அனாதையாக ஒளிக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அறிவுறுத்தல்களுக்கான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்ததற்காக என் மகனை நான் சபித்துக் கொண்டிருந்தபோது, ​​ஸ்ரீதர் கீபேட் படும் அவஸ்தையை சகித்துக்கொள்ள முடியாமல் அதைக் காப்பாற்ற ஓடினார்; அந்த கதவு திறப்பும் சாக்லேட் வரவும் அவர்களின் அந்த போர் குணத்திலிருந்து திசைதிருப்பியது; ஒரு கீபேடும், ஒரு அறிவுறுத்தல் வாசகமும் அந்த அழகிய இசையுடன் கூடிய ஒலி ஒளி நிகழ்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது;

நிலைமை கைமீறி சென்றுகொண்டிருந்தது; நான் எப்பொழுதும் கடுப்பாவேன் என்றும், ஸ்ரீதர் நிதானமானவர் பெயர் பெற்று இருந்தோம்; ஆனால் இந்த பெரும் குழந்தை பட்டாளம் அவரைப் பிடிக்காமல் கடுப்பேற்றியதை ரகசியமாக ரசித்தேன்! ஸ்ரீதர் பதற்றமடைந்தார். அலிபாபா கதையைப் போல நான் கவலைப்பட்டேன், குழந்தைகள் மற்ற குழந்தைகளை எச்சரிக்க எங்கள் வீட்டிற்கு வெளியே சில அடையாளங்களைச் சேர்க்கலாம்; அதை விட மோசமான விஷயம் என்னவென்றால், ஒரு குழந்தை புகார் கூறிவிட்டு திரும்பிச் சென்றால், நாங்கள் எந்த வாட்ஸ்அப் குழுவின் எலிபாஷனமாக மாறுவிடுவோம் என்று கலவரமடைந்தேன்! (ஸ்ரீதரின் பார்லி-ஜி பட்ஜெட் சாக்லேட்டுகள் குழந்தைகளை வசீகரிக்கவும்மில்லை). விரைந்து சிந்தித்து செயல்படும் நேரம் இது என சொல்லிக்கொண்டேன்.!

இப்படி எத்தனை live production bug fix செய்திருப்போம். உடனே களத்தில் இறங்கி கீபேட் தூண்டுதலுக்குப் பதிலாக நேரத் தூண்டப்பட்ட லூப்பிங் லைட் ஷோவுக்குச் செல்ல முடிவு செய்தோம்; ஸ்ரீதர் programயை மாற்றினார், நான் கீபேட் அமைப்பை அகற்றினேன். குழந்தைகளுடன் இந்த ரோலர் கோஸ்டர் அனுபவத்தை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருந்தபோது, ​​இருட்டு அறையில் இருந்த நாதஸ்வரத்தில் இருந்து எனது மாமனாரை நல்ல வெளிச்சம் உள்ள அறையில் டிவி சீரியல் சகிதம் அனுப்பிவைத்தேன்; எல்லோருடைய நலனுக்காகவும் ஸ்ரீதரை குழந்தைகளிடமிருந்து சிறிது நேரம் ஒதுக்கி வைப்பது நல்லது என்று உணர்ந்தேன்! எனவே நான் குழந்தைகளை நிர்வகிக்கும் போது ஸ்ரீதரை மாமனாருடன் ஒரு நடை சென்று வர ஊக்கப்படுத்தினேன்; நான் இறுதியாக இருண்ட வெற்று வீட்டில் அமர்ந்தேன், ஒலி, ஒளி காட்சி பின்னணியில் மீண்டும் மீண்டும் ஒலித்து மின்னியது.

பல்வேறு வகையான trick or treaters சாக்லேட் விநியோகிக்க பழகியிருந்தேன்; முதலில், “மினி மாடல்” வகையராக்கள் இவர்கள் போஸ் கொடுத்து சாக்லேட் வாங்கி சென்றார்கள். பின்னர் “எபீஷியன்ட் ஏகாம்பரம்கள்” வந்தோமா சாக்லேட் வாங்கினோமா என்று காரியத்தில் கவனமாவர்கள். அடுத்து “Shrieky Silpis” வகையராக்கள், நின்று நிதானமாக ஆர அமர கதையாடி சென்றவர்கள். இந்த கூட்டத்தில் நான் அனைத்து கறுப்பு உடைகளுக்கு இடையே உள்ள மாறுபாட்டைக் கண்டறிவதில் எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன்! கூட்டமாக ஓவென கோஷமிட்டு மகிழ்ந்தார்கள்.

பல ஆண்டுகளாக ஹாலோவின் சாக்லேட் கொடுத்ததில், சாக்லேட்டை கண்களிலேயே எடைபோடும் குழந்தைகளின் ஏளனபார்வைக்கு பழகியிருந்தேன். அதிலும் “கூடையில இருக்கிற மொத்த சாக்கலேட்டையும் கொட்டுமா!” என்ற ரீதியில் சில குழந்தைகள் கொடுக்கும் மிரட்டலைலெல்லாம் நான் நைஸ் ஆண்டியாக இருந்த காலங்களில்லேயே ஏமாற்ந்து கடந்துவந்துவிட்டேன். அதிலும் சில விடாக்கொண்டன்கள், கதவை அதிரவிட்டு அதட்டி கேட்பதும் உண்டு. இப்படியாக பல ‘ரவுடி ரங்கன்கள்’ என்னுடைய பொருமைகக்கு சோதனை கொடுத்து சென்றார்கள். ஒரு வழியாக ‘மெல்ல மெல்ல வரும் சுந்தரர்கள்’ யேனோ தானோ என்று வந்தார்கள். இப்போது தான் அவர்கள் கண்ணில் நாங்கள் செய்த சாகசங்கள் கண்ணில் விழுந்தது, நல்லா இருக்கு இல்ல என்று சிலர் முணுமுணுப்பதை கேட்க முடிந்தது.

எல்லாம் முடிந்து களைத்துப்போன போது என்னுள் இருந்த விவேகானந்தர், இந்த குழந்தைகளுக்கு அறிவுப்பாடம் எப்படி புகுத்துவது, இத்தனை இனிப்பை தேடித்திறியும் இரண்டு முதல் இருபத்திரண்டு வயது வரையான இந்த குழந்தைகளுக்கு வெரும் பாடம் எடுப்பதைத்தான்டி என்ன செய்யலாம் என யோசனையில் ஆழ்ந்தேன். இதற்கு மாற்று வழிகள்தான் என்ன? ஏன் இந்த சாக்லேட் மோகம்.

இந்த விவேக சிந்தனையில் களைப்பில் சற்று கண்ணயர்தேன். என்னுடைய குழந்தைகள் அள்ளிவந்திருந்த சாக்லேட்டேடு என்னை எழுப்பினார்கள். எங்கள் ஒவ்வொருக்கும் பிடித்த சாக்லேட்டுகளை பங்குபோட்டுக்கொண்டோம். நடக்க சென்ற ஸ்ரீதரும், மாமனனாரும் வீட்டுக்குள் நுழைந்தனர். மாமனார் நாம சும்ம நடந்து போனதுக்கு ஒரு பை எடுத்து போயிருந்தா நானும் இத்தனை சாக்லேட் கொண்டுவந்திருக்கலாமே என்று என்று சொன்னபோது. இருபத்திரண்டை திருத்த விவேகானந்தராக துடித்துக்கொண்டிருக்கும் நான் எழுபத்தியிரண்டை எப்படி சமாளிப்போன் என்று திகைத்து நின்றேன்.

https://anotepad.com/note/read/63jr8n4q

நல்வரவு

சியாட்டில் நகரின் நடுவில், ஓங்கி உயர்ந்த கோபுரங்களாய் கட்டிடங்கள். முப்பது, நாற்பது மாடிக்கட்டிடங்கள். அதில் வாழும் ஒரு தம்பதியரை நானும் என் நண்பனும் காணச்சென்றோம். அந்தப் பெண் எங்கள் இருவரையும் வாசலிலிருந்து அழைத்துச் சென்று பெரிய கதவுகளைத் திறந்து, ஆக்சிஸ் கோடை அழுத்தி அடுத்த கதவை திறந்து, மிக நீண்ட வராண்டாவில் கொஞ்சம் ‘லாங் வாக் தான்!’ என்று சொன்னவாரே அழைத்துச் சென்றாள். எனக்கு என்ன வயதாகிவிட்டது என்னை இப்போதெல்லாம் யாரும் “அண்ணா” என்று கூறுவதே இல்லை, “அங்கிள்” என்றே அழைக்கிறார்கள் இந்த ஆதங்கத்தில் தான் என் உரையாடலைத் தொடங்கினேன்.

நாங்கள் அவர்கள் வீட்டுக்குள் சென்று அமர்ந்ததும் “நீயே டீ போடுகிறாயா? சென்ற முறை நான் போட்ட டீயை குடித்தவர், இனியொரு முறை நீ டீயே போடாதே! என்று சொல்லிச் சென்றார்’. இப்படித்தான் தொடங்கியது அவர்களின் உரையாடல். சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியில், அம்மம்மா! அத்தனை சிரமங்கள் வேண்டாம், நாங்களே கூட டீ போட்டுக் குடித்துக் கொள்கிறோம் என்று பதற்றமடைந்தோம். நான் போடுகிறேன்! என்று கணவன் முன்வந்து மனைவிக்கு உதவச் சென்றான். நீரில் டீ பொடி போடவோ? பாலில் டீ பொடி போடவோ? என முதல் கேள்வியைக் கேட்டுக் கொண்டான். ஒரு முடிவுக்கு வந்தவனாக நீரில் டீ தூள் போட்டான். டீயில் இஞ்சி போட்டால் நன்றாக இருக்கும் என்று என்னுடன் வந்தவர் சொல்லிவிட்டார். மிகப்பெரிய இஞ்சி வேரை எடுத்து ஆயத்தமானான். அவ்வளவு பெரிய இஞ்சியை பார்த்ததும் அதிர்சியில் நான் உடனே எழுந்து சென்று சின்ன துண்டை பொடியாய் நருக்கிக்கொடுத்தேன். டீ கொதித்து விட்டது, கடைசி நேரத்தில் இஞ்சியும் சேர்த்தாகிவிட்டது, பால் கலந்து அடுத்த கொதிக்காய் காத்திருந்தான். கணவனும் மனைவியும் டீயில் ஒரு கண் வைத்து எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் டீ பொங்கி வழிந்தது. ‘நீ அல்லவோ பார்த்துக் கொள்வாய் என்று நினைத்தேன்!’ என்று கேட்டு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். கொஞ்சம் அசடையும் அடுப்பையும் துடைத்துவிட்டு, சிரித்தவாறு சூடான டீயை குவளையில் ஊற்றி எங்களுக்கு நீட்டினார்கள்.

கொஞ்சம் பாஸ்தா சாப்பிடுங்கள் என்று அழகிய தட்டில் எங்கள் இருவருக்கும் உண்ண வழங்கினார்கள். நான் சிரித்த வகையில் கேட்டேன் ‘இதை யார் செய்தது?’ என்று. ‘இது நிச்சயம் சுவையாக இருக்கும் மிகச்சிறந்த காணொளியை நானே கண்டுபிடித்து அவளுக்குக் கொடுத்தேன் அவள் அதை அப்படியே பின்பற்றிச் சமைத்து இருக்கிறாள்’ என்றான் கணவன் அன்பு பொழிய. மீன்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அந்த உதிரி பாஸ்தா இன்னும் கொஞ்சம் சுவையாக தெரிந்தது.

கொஞ்சம் சப்பாத்தியும் தாளும் செய்து இருக்கிறேன் அதையும் உண்ணுங்கள் என்றாள். மூன்று மாதங்கள் மாமியார் இருந்து சமையல் வேலை எல்லாம் பார்த்துக் கொண்டதில் எனக்குச் சமைக்கவே மறந்துவிட்டது என்றாள்! ஆவக்காய் ஊறுகாய் இருக்கிறது அந்த பருப்பு அத்தனை சுவையாக இருக்குமா என்று தெரியவில்லை. உங்களுக்குக் காரம் அதிகம் தேவைப்பட்டால் ஆவக்காய் ஊறுகாய் தந்து விடுகிறேன்! என்று பயந்தே சொன்னாள். என்னடா இது சோதனை விருந்தாக இருக்கும் போல இருக்கிறதே என்று அச்சத்தில் தான் நான் உண்ணத் தொடங்கினேன். அந்த நல்ல மாமியார் இருந்தபோதே நாங்கள் வந்திருந்திருக்கலாம் என்று தோன்றியது. மீன்டும், ஆச்சர்யம், உணவு ருசியாகத் தான் இருந்தது. கனவனும் மனைவியும் மீன்டும் ஒருமுறை சிரித்துக்கொண்டார்கள். மென்மையான சப்பாத்தி நல்ல சுவையான பருப்பு ஆனாலும் இந்த இளம் ஜோடிகளின் உணவு குறித்த முன்மொழிகள் தான் பயத்தைத் தந்து கொண்டே இருந்தது.

புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! விருந்தினர்கள் இங்கே அரிதுதானுங்க என இளம் தளிர்களாக இரு உள்ளங்கள் எங்களைக் கவனித்து நன்கு அளவலாவி புது சூழலை இனிமையை உருவாக்கினார்கள். நான் புது தலைமுறையினரைக் கண்டதாக உணர்ந்தேன். இது புதுவித வரவேற்பு உபசரிப்பு.

இனி இந்த உலகம் என்னை அங்கிள் என்று அழைப்பதை குறித்து நான் அலுத்துக்கொள்ளப்போவதில்லை.

-குரு
டிசம்பர் 11, 2022

Design a site like this with WordPress.com
Get started