சச்சிதானந்தம்

சத்வ , தாமஸ, ரஜோ குணங்கள் தான் மனிதனை வெவ்வேறு வகையில் செயல்படுபவர்களாக மாற்றுகிறது என்கிறது கீதை. இந்த மூன்று குணங்களின் கலவை எப்படி அமைந்திருக்கிறது என்பதைச் சிலரிடம் மிக எளிதில் கண்டு விட முடியும். காஞ்சிப்பெரியவர், வேதாத்திரி மகரிஷி, ரமணர் என சில மனிதர்களை நினைக்கையிலேயே ஒரு அமைதி மனதில் குடிகொள்ளும். சத்வ குணம் மேலோங்கிய மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் சில மணி நேரங்கள் உரையாட நேரம் கிடைப்பதும் வரம். அப்படியான அனுபவத்தின் வெளிப்பாடு இந்த கட்டுரை.

சிரித்த முகத்துடன் மிகவும் குறைந்த ஓசையிலேயே அவர் பேசினார். அதுவே அவரை கூர்ந்து கவனிக்க வைத்தது. பேச்சும் மெல்ல நகரும் சலனமற்ற நீரோடை போல ஒரு ஒழுங்கு. சிலர் தான் பேசும் வாக்கியங்களைக்கூட ஓவியமாக்கும் வல்லமையை வளர்த்துக்கொண்டு விடுகிறார்கள், பொருளைக்கூட தேடாமல் காதுகளும் கண்களும் கவனிக்கத் தொடங்கிவிடுகின்றன. வார்த்தைகளிலோ அதன் பொருள்களிலோ உள்ள வசீகரம் நம்மை அடையும் முன் அந்த ஓசையே மகுடி ஊதுவது போல நம் தலையும் சிந்தையும் அதன் அலைவரிசையில் திருப்பி விடுகிறது.

தன் மகளை அம்மா என்றழைப்பதில் மலரை ஸ்பரிசிக்கும் மென்மை இருப்பதை ஒவ்வொரு அழைப்பிலும் உணர முடிந்தது. மகளைப் பற்றிய சிலாகிப்பு, தன் பேரன் பேத்தியின் மீதான பூரிப்பு, மருமகன் மீதான பெரும் மதிப்பையும் ஒவ்வொரு வார்த்தையிலும் தன் உடல்மொழியிலும் வெளிப்படுத்துவதும். தன் வாழ்வின் மீதான நிறைவு, மகிழ்வு அதனைத் தேன் சேர்த்த பண்டமாய்ப் பேரின்ப வெளிப்பாடாய் மாற்றிவிடுகிறது. நிறைவை விடப் பெருமகிழ்வேது.

ஆத்மா அழிவற்றது உடல் என்பது நான் அல்ல. நம் மனம் எண்ணங்களும் நாமல்ல. ஆன்மாவை ‘நான் யார்?’ என்ற ஒற்றை கேள்வியைத் தொடர்ந்து கேட்பதில் கண்டடையலாம் என்பதை ரமணர் காட்டினார். சில நேரங்களில் சிலருடன் பழகியதும் அவரின் உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றமோ, வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை என்ற உடை மட்டும் அடையாளமாய் நிற்பது இல்லை. அதையும் தாண்டி அவர்களின் கனிவும் அவர்களின் உடல் வழி கசிந்த அந்த ஆத்மார்த்த உணர்வும் தான் அவர் என உணர வைத்து விடுகிறது. புகைப்படங்கள் மீட்டு தராத நினைவை அவரை பற்றிய சிந்தனையே பக்கத்து அடுப்பில் நெருப்பு எரிய கேஸை ஆண் செய்தால் பக்கெனப் பற்றிக்கொள்ளுதல் போல் நினைத்த மாத்திரத்தில் நம் மனதில் இது போன்ற சாத்வீக மனிதர்கள் நம் மனங்களில் சட்டென வந்து தங்கி விடுகிறார்கள். சின்ன தூபக் குச்சிகள் அறைமுழுதும் சுகந்தம் பரப்புவதைப் போல மனம் முழுதும் வியாபித்து விடுகிறார்கள்.

ஏதோ ஆசிரமத்தில் அமர்ந்து ஞானக் கூறுகளை, முக்தி மோட்ச வழிகளைத் தேடும் சம்பாஷனைகளை இவர்கள் செய்வதில்லை. காலையில் குடித்த காப்பியையும் மாலையில் உண்ட பாவ் பஜ்ஜியையும் பற்றித் தான் பேசுகிறார்கள். சதா சர்வகாலம் லேப்டாப், ஃபோனை கதி என்ற ஆதங்கங்களைத் தான் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசும் விதம் பழகும் விதம் அதை ஓர் ஆன்மிக தரிசனம் போல மாற்றி விடுகிறார்கள். சில மருத்துவர்கள் குழந்தைக்கும் மருந்தைக் கூட விருந்தை போல வழங்குவதில்லையா? தன் வாழ்வில் ஒழுங்கை, அமைதியை, நிறைவைக் கொண்டு அன்பை தான் செல்லும் இடமெல்லாம் தூவிச் செல்லும் இன்சொல் வேந்தர்கள் நம்மைச் சுற்றியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் த்வைதமாகவோ அத்வைத்மாகவோ, விசிஷ்டாத்வைதமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அந்த ஸத் புருஷனின் கூறுகளாக சில மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஆன்மா கொஞ்சம் அதிகம் சார்ஜ் ஏற்றுக் கொண்டுவிடுகிறது என்பது உண்மை. நம் சித்தம் ஆனந்தமாகிறது என்பது சத்தியம்.

Design a site like this with WordPress.com
Get started