அன்புற்று அமர்ந்த வழக்கு…

ஒரு பதினைந்து பதினெட்டு வயது இருக்கும் அந்த பையனுக்கு, அந்த அம்மாவிற்கு ஒரு ஐம்பது அறுபது வயது இருக்கும், அவனை கைப்பிடித்து அழைத்து எதிர்பக்கம் வந்துகொண்டிருந்தார். நான் முதலில் தபால் நிலையம் நுழைந்து என் பின் வந்த அவர்களுக்காக கதவை இருத்திவைத்தேன். அந்த பையன் கோணி கோணி நடந்து வந்தான். தலையை ஒருபக்கமாக சாய்த்து பார்கிறான். மூளை வளர்ச்சி இல்லாதவனைப் போல இருந்தான்.

அது என்னவோ தெரியவில்லை நான் தபால் நிலையம் செல்லும்போது எல்லாம் நெடிய வரிசை இருக்கிறது. இந்த டிஜிடல் உலகில் FedEx, DHL என இத்தனை வந்தப்பின்னும் USPSக்கு கூட்டம் வரத்தான் செய்கிறது. பையனை வரிசையில் விட்டுவிட்டு அந்த அம்மா அங்கு இருந்த தபால் உறைகளைத் தேடி சென்றார். அந்தப்பையன் கால்களை நகர்த்தாமல் தன்னுடைய உடலையும் தலையையும் ஆட்டிக்கொண்டு வாயில் விரல்சூப்பிக்கொண்டு நின்றான். வாயோரம் கொஞ்சம் எச்சில் தேங்கி இருந்தது.

என்பின்னால் ஒரு வயதானப் பெரியவர் வந்து சேர்ந்தார். இந்தப்பையன் என்னைக் கடந்து ஆபா..அப்பா என்று ஆடி ஆடி அவரிடம் சென்றான். அந்த விளிச் சொல் எனக்கு ஆர்வத்தை அளித்தது, சற்று தயக்கமாக இருந்தாலும் அவரிடம் கேட்டுவிட்டேன். “அவன் உங்களை அப்பா என்றா அழைத்தான்?” என்றேன், “ஆம்” என்ற அவர், “அவன் அம்மா கொரியன்” என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் மொழியிலும் அப்பா என்ற சொல்லுண்டு என்றேன். அந்தப்பையன் இன்னும் இரண்டுமுறை ஆபா.. அப்பா என்று சொல்லி எங்கோ பார்த்து தலையை ஆட்டி, கைகளை கங்காருவைப்போல வைத்துக்கொண்டு உடலை அசைத்துவிட்டு மீண்டும் அசைந்துகொண்டே விரல்சூப்ப ஆரம்பித்துவிட்டான். எனக்கு அவனைப்பார்க்க பாவமாக இருந்தது, ஆனால் அவன் ஆபா என்று சொன்னது ஒரு நெருக்கத்தை கொடுத்தது. நான் அவரை பார்த்து மீண்டும் புண்ணகைத்தேன். அவர் என்ன நினைத்தாரோ “நீங்கள் ஐரிஷ்காரரா?” என்றார். “இல்லை” என்றேன், அவர் எதைவைத்து இப்படிக்கேட்டார் என்று எனக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. நான் புன்னகைத்தேன். “நீங்கள் ஐரிஷ்காரரா?” என்றேன், “ஆம்” என்றார்.

அந்தப்பையன் இப்போது “மிலிட்டரி” என்று சொல்லி சலூட் வைத்து ஆசைந்தான். நான் திகைத்தேன்! நானும் அந்த பையனுக்கு சலூட் அடித்தபடி, “நீங்கள் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவரா?” என்றேன், அவர் “ஆம்” என்றார். எப்படி கொரியன் கற்றீர்கள் என்றேன், தான் கொரியாவில் இருந்ததாக கூறினார். அதற்குள் அந்த பெண்மணியும் வந்துவிட்டார். எங்கள் வரிசையும் நகர்ந்தது, இப்போது அவர் கொரியன் பெண்மனியாக தெரிந்தார், இதற்கு முன் அப்படித் தோன்றவில்லை ஆனால் இந்த சம்பாஷனைக்குப்பின் வேறு எப்படியும் நினைக்க தோன்றிவில்லை. அவரும் அனுக்கமாய் புண்ணகைப்பதாய் உணர்ந்தேன்.

என்னுடைய பணியை முடித்து நகர்கையில் திரும்பி புண்ணகை செய்தேன், அந்தப்பையன் நா..நா.. என்று ஆடிக்கொண்டு இருந்தான். எனக்கு அவன் அண்ணா… அண்ணா என்று அழைப்பதுபோலவே இருந்தது. வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது, ஐரிஷ்காரரை அமெரிக்க இராணுவ வீரனாக்கி, கொரியப்பெண்னோடு, ஒரு அதிக அக்கறை வேண்டிய குழந்தையை வளர்க்கும் வாழ்வை வாழ வைக்கிறது.

நான் வீடு வரும்வரை அந்த பையனின் முகம் என் கண்ணிலேயே இருந்தது. அந்த கீழண்ட மாடவீதி ராஜாவை, கலெக்டர் PA மகன் நீலமேகத்தை, வசந்தியை என எத்தனையோ பேரை நினைவில் வரவைத்துவிட்டது. குறிப்பாக அவர்களை வளர்த்த அந்த பாட்டியை, அந்த அம்மாவை ஞாபகப்படுத்தியது.

செய்தே ஆகவேண்டியவற்றை, அன்பால் நிறைத்து இயல்பாக வாழ்வை எதிர்கொள்ளும் அவர்கள் வாழும் உலகத்தில் எதற்காகவும் அலுத்துக்கொள்ள எனக்கு அதிகாரம் இல்லை என்று நினைக்கத்தோன்றியது.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

-குரு. 1/29/202

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started