ஊசியிலைகளுடன் உதிர்ந்து கிடக்கும் பைன் கோன்களுமாக ஓங்கி நிற்கும் பைன் மரங்கள் சூழ இருக்கும் அழகிய பூங்கா. கூடைப்பந்து உண்டு, கூடி மகிழும் கூடாரம் உண்டு, ஆடி மகிழக் குழந்தைகளுக்கு வசதிகளுண்டு, நெடுஞ்சாணாய் ஏறி விளையாட சுவர், கால்பந்தாட்ட மைதானம் என எல்லாம் நிறைந்த பூங்கா. எங்கோ கேட்கும் பறவைகளின் சத்தம், அலையடிக்கும் பைன் ஏரியின் நீரோசை என மிகரம்மியமான சூழல். இந்த பூங்கா பைன் மர உச்சிகளைப் அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும். சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு… சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு… என்பது இந்த மரத்திற்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன். உயர்ந்துகொண்டே இருக்கும் மரம் இது.
சில குழந்தைகள் விளையாட, சில பெரியவர்கள் தம்பதி சமேதராய் நடந்துகொண்டிருந்தார்கள். பதின்வயது பிள்ளைகள், தங்கள் நீச்சல் உடைகளில் உரக்க சிரித்து சம்பாஷித்து சென்று கொண்டிருந்தார்கள்.
பூங்காக்கள் மக்கள் வரும்போதுதான் ஜீவனைப் பெருகிறது. மெல்லிய காற்று வீசிக்கொண்டு இருந்தது, மெல்ல நடந்து அலைகளின் முன் நின்றேன். விலாசமான ஏறி, கண்ணுக்கு எட்டிய வரை நீர், மெல்ல மூச்சுவாங்கிக்கொண்டிருந்தது, அலைகள் மெல்ல மெல்லக் கரையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது.
வழக்கமாக மிதந்துகொண்டிருக்கும் ஒன்றிரண்டு ஓடங்களும் இன்று இல்லை. ஏரியில் இருந்த நடைமேடையில் சிலர் தன் வயதான பெற்றோர்களுடன் அமைதியாய் நின்று இருந்தனர். இந்த நடைமேடை மிதக்கிறதோ என்று எண்ணத்தோன்றும் வகையில் அலைகளுக்கிடையில் இருந்தது. இது இடது, வலது என இருண்டு புறமும் இறக்கைவிறிக்கும் பறவைபோல் நீண்டு இருந்தது. வலது புறம் மீன் பிடிப்பவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தது, கரைக்கும், நடைமேடைக்கும் இடைப்பட்ட பெரும் பகுதி குழந்தைகள் நீந்துவதற்கென்று இருந்தது,
பெரும் அமைதி, குழந்தைகள் விளையாடும் சத்தம் சன்னமாக எங்கோ கேட்டது, பறவைகளின் ஒலி எங்கோ எப்போதோ ஒருமுறைகேட்டது. இயற்கை தரும் அமைதி தாலாட்டைவிட இனிமையானது. மனம் மெல்ல அமைதியானது. அங்கே சில நிமிடங்கள் ஏதுவுமின்றி நின்றுவிடவே மனம் நினைத்தது. ஆனால் மெல்ல நடந்தேன். கண்கள் ஏரியின் அழகை திகட்ட திகட்ட தின்றுகொண்டிருந்தது.
இரண்டு பெரியவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள். தூண்டிலை அவர்கள் எறிய அந்த சன்ன கயறு நெடுந்தொலைவு செல்லும் அழகு ஆர்வத்தைத் தூண்டியது. வீசிவிட்டு காத்துகிடக்கிறார். அருகில் முன்னமே தூண்டில் வீசிவிட்டு காத்திருந்த அடுத்தவருக்கு மீன் கிட்டிவிட்டதுபோலும், தன்னுடைய தூண்டில் நூலை வேகவேகமாய் சுழற்றினார். நானும் ஆர்வமாய் நின்றிருந்தேன் என்னதான் வருகிறதென்று பார்க்க. அரை முழம் நீலத்திற்கு ஒரு பெரிய மீன். நீரைவிட்டு அது தூண்டிலில் மாட்டி துடிதுடித்துக்கொண்டு இருந்தது, தன்னுடைய உடலை அது ஆட்டிய வேகத்தில் அவரால் அதைப் பிடிக்க முடியவில்லை, திமிறிக்கொண்டு தன்னுடைய உயிரைவிடுவதற்குமுன் அது போராடியதைக் காண முடியவில்லை, அதில்தான் எத்தனை வேகம், எத்தனை பலம்.
இத்தனை இரம்யமான இயற்கை சூழலை, காட்சிகளை, நல்லோசையை கேட்டு இதமாக இருந்த தெளிந்த மனதில், யாரோ கல்லெறிந்ததுபோல ஆனது. ஓர் உயிர் பலியின் சாட்சியாக நான் நின்றிருந்தேன். தன்னை விட்டுவிடச்சொல்லி அது என்னிடம் பரிந்துரை கேட்கிறதோ என்று என் காதுகள் கூசியது. அவர் எந்த சலனுமும் இன்றி அந்த ஆத்மாவை விடுதலை செய்து, அதன் தேகத்தை தன்னுடைய பைகளில் திணித்தார். அடுத்து தூண்டிலை எறிய ஆயத்தமானார். திரும்ப நடந்தேன், இப்போது அந்த ஏரி துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருப்பதாய் அனுமானித்து.
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
.குரு



Leave a comment