இட்லி சாம்பாரை மிஞ்ச இந்த பூலோகத்தில் வேறு உணவு இல்லை. அதுவும் விரல்கள் பட்டவுடன் பூ போல உடையும் வெள்ளை இட்லி கிடைத்துவிட்டால் போதும். அப்படியான நாள் இன்று. இட்லியை ஒரு துண்டு எடுத்து, முருங்கைக்காய் சாம்பாரில் முக்கி எடுத்து, சுவாகா செய்யும் போது மனம் பூலோக சொர்க்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. சாம்பாரின் உப்பு, காரச் சுவையும், இட்லியின் மிருதுவும் நாக்கை கடந்து தொண்டைக்குள் இறங்க இறங்க, மொத்த உடலும் தியான நிலைக்குத் தன்னைத் தானே நகர்த்திவிட்டது. ஆவி பரக்கும் சாம்பாரின் சுவை நாசியில் நுழைந்து பரவசத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது. முதல் ஈட்டில் எனக்கு வைத்த மூன்று இட்லியும் பரமபத சொர்க்கம் அடைந்திருந்தது.

அடுத்த ஈடு இட்லி வைக்கும் போது இட்லிப் பொடி கிடைத்தது. இட்லிப் பொடி, அதில் கொஞ்சமாய் எள்ளு, இருந்தும் இல்லாமல் இருக்குமளவுக்கு வெல்லம் என ஏகாந்த சுவை தரும் பொடி அது. ஒற்றை விரலால் குழி தோண்டி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை விட்டுக் கலக்கினேன். பொடி நினையாமல் போகவும் கூடாது, எண்ணெய் வழிந்து ஓடவும் கூடாது, அப்படியொரு பக்குவமாய் கலந்தேன். வாமனாவதாரம் கால் வைத்தது போல் மொத்த பொடியையும் ஒற்றைத் துண்டு இட்லியில் அள்ளி எடுக்க எத்தனித்து அழுத்தி எடுத்தேன். இப்போது இட்லி உதட்டுக்கு அருகில் செல்லும் போதே நாவில் எச்சில் ஊரியது. எண்ணெயும் இட்லிப் பொடியும் நாவின் கோடான கோடி சுவை நரம்புகளில் எல்லாம் சென்று சேர்ந்து நர்த்தனம் ஆடியது. அடுத்த கவளத்திற்கு கை பரபரத்தது. இட்லிப் பொடி எல்லாம் வழித்து வழித்து எடுத்தபின், இட்லிக்குப் பொடியைத் தொட்டுக்கொண்டேனா, பொடிக்கு இட்லியைத் தொட்டுக்கொண்டேனா என்பதே தெரியவில்லை. நாக்கின் மேல் அன்னத்தை இறுக்க அழுத்தி சுப்பு கொட்டி முத்தம் கொடுத்து மகிழ்ந்தது. நாவில் எச்சில் ஊறி வழிந்து நின்றது.

அடுத்த ஈடு இட்லித் தட்டில் விழுவதற்குள் மீதமிருந்த முருங்கைக்காய் சாம்பார் பொன்னிற மேனியோடு தகதகவென இருக்க, முழுவதுமாக குடித்து, முருங்கைக்காயை பல்லுப் பட வழித்துத் தின்று முடித்திருந்தேன். அடுத்து ஈடு இட்லி ஆவி பரக்கத் தட்டில் வீழ்ந்தது. சிவப்பு நிற வெங்காயச் சட்னி, சிலுக்கு சட்டை மின்னுவதைப்போல் அங்கங்கே மின்னும் மிளகாய் துளிகளோடு தட்டில் இருந்தது. பஞ்சு இட்லிக்குச் சிவப்பு கம்பளம் சார்த்தி வாயில் இட்டபோது அதிருசியை அனுபவித்தேன். சர்வலோகத்திலும் இப்படி ஒரு சுவையான சட்னியை சுவைத்திருக்க முடியாது என்றே தோன்றியது. சட்னியின் பச்சை மிளகாய் காரம் தூக்க, இட்லியின் அன்பு செய்வது போல இதம் தர, இரண்டிற்கும் ஜூகல்பந்தி ஆஹா ஆஹா, பேஷ் பேஷ் என்றது அந்தராத்மா.

இப்போது வயிறு “போதும், நிறுத்து” என்று கூவியது. தேங்காய் சட்னியில் முடிப்பதே ஐதீகம். வாய் தேங்காய் வருந்தக்கூடாது என்றது. தட்டு முழுவதும் அமைதியின் சின்னமாய் வெள்ளை தேங்காய் சட்னியும் இன்னும் இரண்டு வெள்ளை இட்லியுமாய் சிரித்தபடி இருந்தது. இட்லி துண்டுக்கு இடையில் தேங்காய் சட்னியை லாவகமாய் எடுத்துச் சிந்தாமல், சிதறாமல் ருசி பார்க்க அனுப்பினேன். தேங்காய்த் துருவலை நாவும் மேலன்னமும் முத்தமிட்டு இழுத்து உள்ளே அனுப்பியது. அட, இப்போதுதான் முழு திருப்தி என இருந்தது. தேங்காய் இனிக்க, பல் இளிக்க, இட்லியும் தேங்காய் சட்னியும் முடிக்கும் போது, ஒரு ஏப்பம் இரயில்வே கேட்டை கடக்கும் கூட்ஸ் வண்டியைப் போல கூவிச் சென்றது.

சுடச்சுடக் கொஞ்சம் ஃபில்டர் காப்பி மணம் மணக்கக் காத்திருந்தது. மெல்ல மெல்ல, சொட்டு சொட்டாக நாவின் பாதையில் அடிப்பிரதக்ஷணம் செய்து உடலை பரிசுத்த ஆத்மாவாக்கியது. என் சொர்கலோக சஞ்சாரத்தை முடித்து பூலோகம் திரும்ப வெகு நேரமானது.


Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

I’m Guru

Welcome to my blog, where I share experiences, insights, and curated learnings!

நிம்மதி அடைந்தேன், உலகம் மறந்தேன், ஆனந்தம் தான் அடைந்தேன்

Buy at Amazone

Meditate with Kolam Art: Learn the basics of the traditional south Indian floor art

Buy at Amazone

கொஞ்சு தமிழ் புத்தகம் அறிமுகம்

Telugu, Kannada, Hindi, Marati translations of Konju Tamil book

Buy at Amazone

Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Design a site like this with WordPress.com
Get started