புலம் பெயர்ந்தவர்கள் Thanksgiving கொண்டாடுவதை Friendsgiving என்று அழைக்கிறார்கள். அப்படியாக நாங்களும் sleepover என்ற நடைமுறையை பல ஆண்டுகளுக்குப்பின் கடைபிடித்தோம். சும்மா இருப்பதே சுகம் என்று, நன்கு சமைத்து நாளுவேளையும் மூக்குபிடிக்க உண்டு, உரையாடி, நவீன வகை சூதாட்டங்களை பணயம் இன்றி விளையாடினோம்.

எல்லோரும் சேர்ந்து சமைத்தல் (என்னைப்போன்ற சிலர் உதவி என்ற பெயரில் செய்யும் உபத்திரமும் சேர்த்துத்தான்) சுவாரஸ்யமானது. சரி விஷயத்துக்கு நேராக வந்துவிடுகிறேன். எங்கள் வீட்டில் LG தூள் பெருங்காயம்தான் நண்பர் வீட்டில் இருந்தது கட்டிப் பெருங்காயம். பெருங்காயத்தின் கதையை பேசினோம். அது ஒரு செடியில் கிடைக்கும் பிசின், அதை மைதா, கோதுமையில் சேர்த்து வருத்து பொடியாக்குவார்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் அறிதேன்.
இணையத்தில் தேடிப்பார்த்ததில் இந்தியாவின் மொத்த பெருங்காயமும் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களில் இருந்து இறக்குமதிதான் செய்கிறார்கள்.

நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.
துருக்கிய கிராமத்தவர் ஒருவர் பெருங்காயம் விளைத்து அருவடை செய்வதை காணலாம். ருசியாய் இருக்கும் இரசத்துக்கு பின்னால் ஏதோ ஒரு துருக்கிய வெய்யிலான குளிரில் வாடும் உழவனின் உழைப்பும், 5 வருட காத்திருப்பும் இருக்கிறது என்பது மலைக்க வைத்தது. பூமிக்கு கீழ் விளையும் வெங்காயம் பூண்டு சேர்க்காதவர்கள் வேரிலிருந்து முளைவிடும் இந்த இங்கை சமையலில் சுவைக்காக சேர்த்துக்கொள்கிறார்கள்.
- சுத்தமான பெருங்காயம் தண்ணீரில் கரைந்து பால் போல் ஆகும். கற்பூரம் போல முழுவதும் எரியக்கூடியதாம்.
- இந்தியாவிலே விளையா இதைப்பற்றி பாவப் பிரகாசர் முனிவர் பாடினார், ஸும்ருத சம்ஹிதை பாடி இருக்கிறது என்று ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி பேராசிரியர் எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகிறார் (பெருங்காயம் என்றால் என்ன – கட்டுரை).
- மகாபாரத காலத்தில் கூட பெருங்காயம் இருந்திருக்கிறதாம்
ஐந்து வருடங்களுக்கு முன்தான் ஹிமாச்சல் பிரதேசத்தின் லஹௌல் பள்ளத்தாக்கில் (Kwaring village, Lahaul valley, Himachal pradesh) CSIR IHBT (Council of Scientific & Industrial Research – Institute of Himalayan Bioresource Technology) இயக்குநர் டாக்டர் சஞ்சய் குமார் முதல் ஹீங் நாற்றை நட்டிருக்கிறார். அது இப்போது பூத்து முதல் அறுவடையும் கிடைத்திருக்கிறது.
இதற்கு விசித்திரமான பெயர்களும் உண்டு Devil tongue, Stinking gum, Devil shit. நம்ம ஊரிலும் சும்மாவிடுவார்களா செடிகளுக்கான பூச்சிக்கொல்லியாக வைக்க ஐடியா கொடுப்பவர்களும் உண்டு.
எது எப்படியோ, இப்படியே பேசி நல்ல ருசியான விதவிதமான சாப்பாட்டை பாத்திகட்டி வேளா வேளைக்கு கட்டுகட்டியும் இங்கு புண்ணியத்தில் ஜம்மென்று ஜீரணமாகிவிட்டது.



Leave a comment