இளமைக்கால இரதம்
எட்டாம் வகுப்பு வந்தால், முதல் மதிப்பெண் பெற்றால்
எத்தனை எத்தனை தகுதித் தேர்வுகள் உண்டு அதற்கு
பிடித்து வந்த கை விலக, தனியே சைக்கிளில் முதல் நாள்!
நிறுத்தத் தெரியாமல் மோதி விழுந்ததும்… விடாது தொடர்ந்து..
இரவல் கேட்டு வாங்கிய வண்டியில் குரங்கு பெடல்
தட்டித் தட்டி ஏறிய முதல் நாள் என எல்லாத் தகுதியும் அடைந்து
புத்தம் புது சைக்கிள் எனதே எனதாய்
கைப்பிடிக்கு உரை ஒன்று போட்டு
அதன் தூரிகளில் உள்ளங் கை பதித்து
கிரிங் கிரிங் என மணியோசை எழுப்பி
இராஜ கம்பீரத்தோடே வீதியில் செல்லும்
பெடலுக்கும் கவர், வீலுக்கு தூரிகை குஞ்சம்
குஷன் வைத்த இருக்கை, விளக்கும் டைனமாவும்
வேண்டாம் என கழற்றி எடுத்த கண்ணாடிகள்
ஆயுத பூஜை இங்கே இரதோர்ச்சவம்
கைப்பிடிக்கு தூரிகை கட்ட உருவி எடுத்த டெப்ரெக்காடர் நாடா
ஸ்போக்ஸ் கம்பி ஒவ்வொன்றுக்கும் ஒட்டிய முக்கோண வண்ண காகிதம்
பலூன் கட்டி, வத்திப்பொட்டி அட்டை கட்டி புட் புட் என சத்தம் வரவைத்து
டைனமோ விளக்கில் கலர் பாலிதீன் ஒட்டி வண்ண விளக்காக்கி
சாத்து பொட்டு சந்தன பொட்டும் அழகாய் வைத்து
ஓவர் ஆயில், புத்தம் புது உறை, மட் கார்ட் என இணைப்புகள் இணைத்து
ஆயுத பூஜையின் அலங்கார நாயகன் இராஜ கம்பீர இளவரசனாய்.
சந்தோஷிடம் மட்டும் இருந்த நேர் கோட்டு
ஹேண்டில் பார் கொண்ட ரேஜ்ஜர் சைக்கிள்
வேகமாக வண்டி ஓட்டி முன் சக்கரத்தை
அலேக்காக உயர்த்திய ஓரிரு நிமிடங்கள்
ஒத்தக் கை, இரண்டு கைவிட்டு, எகிரி குதித்து மேலேரி
எத்தனை எத்தனை சின்னச் சின்ன சாகசங்கள்
பெண்மை தவழும் Bsc SLR, Lady Bird சைக்கிள் மீதான காதல்
பலராமனின் பால் வண்டி, பசும்பாலும், எறுமைப்பால், சீம்பால் என
முன்னும் பின்னும் கேன்கள் சேர்ந்து புது அவதாரம் எடுத்திருக்கும்
கோணிகட்டிய அட்டை பெட்டியோடு பழைய பேப்பர், இரும்பு வாங்க
பாய்… பாய்… பாவாடை… பாவாடை… என பொதி சுமந்த வண்டிகள்
முன்னால் கேரியர் மாட்டி குழந்தை அமர ஓர் அழகு
கேரியரோடு இணைந்த டப்பா, முன்னே கேரியர் வைத்த வண்டி
எத்தனை எத்தனை வகை வகையாய் சைக்கிள் அவதாரங்கள்
ஓட்டத் தெரியாமல் உருட்டிச்சொல்லும் குமார் மாமா.
எனக்கு டபுள்ஸ் வராது என ஒத்தையில் செல்லும் பானு அக்கா
வால்டியூப் மாற்றி காற்றடித்துக் கொடுத்து வாங்கிய நல்ல பெயர்
வாடகை சைக்கிள், இரவல் சைக்கிள், சொந்த சைக்கிள்
எதுவானாலும் அது ஓர் அனுபவம், ஞாபகத்தின் அடுக்குகளில்
நீங்கா இடம் உண்டு சைக்கிளுக்கு என்று எனென்றும்.
குரு
3.15.2020



Leave a comment