தலைமுறைக்கு தலைமுறை வாழ்க்கைமுறை மாறுகிறது. என் சிறுவயதில் தினம் தினம் வீதியில் வரும் விந்தை மனிதர்களை இன்று எளிதில் காண முடிவதில்லை.
நாங்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலங்களில் (90களில்) விதவிதமான மனிதர்களைக் கண்டுள்ளேன். கிளி ஜோதிடம் என கிளியை பெட்டியில் வைத்து வருபவர், குறி சொல்கிறேன் எனக் கூறி கூடை கொண்டுவரும் பெண்மணிகள் என நாளாரு மனிதர்கள். வாசலில் வரும் இவர்களுக்கென்று எங்கள் வீட்டில் ஒரு டப்பாவில் காசு இருக்கும். பொதுவாக எங்கள் அம்மா இவர்களுக்கு அரிசி கொடுத்து அனுப்புவார். பலர் மாதந்தோறுமோ வாரம் தோறுமோ வரும் வாடிக்கை மனிதர்கள். பல முறை இவர்கள் உரிமையோடு, பழைய துணிகளை கேட்பார்கள். இன்றும் ஞாபகம் இருக்கிறது—மாரியாத்தாவுக்கு கூழ் ஊற்றுகிறோம் எனச் சொல்லி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வரும் பெண்மணி எங்கள் அம்மாவின் சேலையை உடுத்தி வந்தது.

“மாரியாத்தா கூழ் ஊற்றுகிறோம்!”, வீடு வீடாய் அரிசி வேண்டிப் பொங்கல் வைப்பதாக வேண்டுதல் என விதவிதமான கதை சொல்லி வருபவர்கள் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களில் வாடிக்கை மனிதர்களும் உண்டு.
மாதம் ஒருமுறை ஏதாவது பெண்மணி வந்து, “அம்மா நாலு வீட்டுல பிச்சை எடுத்து திருப்பதி போகணும்னு வேண்டி இருக்கேன்” என்று சொந்தம்பந்தம் போல பேசி பிச்சை எடுப்பார்கள். அம்மா அன்றைக்கு அவர் இருக்கும் மனநிலைக்கு ஏற்ப அவர்களை விரட்டி விடுவார் அல்லது கொஞ்சம் காசு கொடுத்து அனுப்பி வைப்பார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாய்பாபா படத்தை வண்டியில் வைத்து, பாடல்கள் ஒலித்துக்கொண்டு வீதிவலம் வந்து காணிக்கை கேட்பார்கள். அவர்கள் மறக்காமல் விபூதி பிரசாதம் வழங்கிச் செல்வார்கள்.
இதில் எங்கள் ஊரில் ஒருவர் வீதியில் “கோவிந்தா கோவிந்தா” எனச் சாலையில் உருண்டே வருவார். அவர் எழுந்து நடந்து நான் பார்த்ததில்லை. இடுப்பில் கட்டிய கீழ்ப்பாய்ச்சியைத் தவிர வேறு எந்தத் துணியும் உடலில் இல்லை. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மாடவீதிகளில் தரையில் உருண்டு “கோவிந்தோ! கோவிந்தோ!” என உண்டியல் ஏந்தி உருளுவார். ஒருமுறை ஒரு ஐயங்கார் பெரியவர் “எழுந்து வா, வந்து பணம் பெற்றுக்கொள், இப்படி உருள வேண்டாம்” என்று வேண்டினார். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. சற்று நேரம் தரையில் படுத்தபடி இருந்தவர் மீண்டும் “கோவிந்தோ கோவிந்தோ” எனச் சொல்லிக்கொண்டு உருளத் தொடங்கிவிட்டார். நானும் சில முறை அவர் உண்டியலில் காசு போட்டிருக்கிறேன். அவரின் முகம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. மேடுபள்ளங்களாக இருக்கும் சாலை, சுள்ளென அடிக்கும் வெயில், சுடும் சாலை, சாலையில் சிதறிக் கிடக்கும் கற்கள் என இருக்க, இந்த மனிதர் தன்னை இப்படி வருத்தி பிச்சை எடுப்பது எதனால் என்பது யார் அறிவார். அந்தத் தீர்க்கமான “கோவிந்தோ கோவிந்தோ” குரல் இன்றும் என் காதுகளில் கேட்கிறது. மனதை என்னமோ செய்கிறது.
நரிக்குறவர்கள் ஊசி மணி, பாசி மணி விற்பதற்கு மட்டுமில்லை, சில நாட்களில் இவர்கள் “இராப்பிச்சயம்மா” என குரல் எழுப்பி வருவதுண்டு. பல நேரங்களில் இவர்களுக்கே உரித்தான தமிழில் இவர்கள் தேன் விற்கும் லாவகம் ரசிக்கும்படியாக இருக்கும். அந்தத் தூக்குச் சட்டிகள் இன்றும் நினைவில் இருக்கின்றன.

பூம்பூம் மாட்டுக்காரர்கள் மிகவும் ரசனையானவர்கள். பல நேரங்களில் ஒரு நாயனத்தோடு வரும் இவர்கள், அரிசி, பணம் மற்றும் உடை என எல்லாவற்றையும் கேட்பார்கள். மாதம் ஒருமுறை வரும் வாடிக்கை மனிதர்கள் இவர்கள். சில நேரங்களில் அம்மா இவர்களை நேர்காணல் செய்வார். இவர்களின் கதைகளைக் கேட்ட பின் இன்னும் கொஞ்சம் காசும், பழைய துணியும் கொடுத்து அனுப்புவார்.

குடுகுடுப்பைக்காரன்: “நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது” என எதிர்காலம் சொல்லும் இவர்களின் வார்த்தை ஜாலங்கள் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். “ஜக்கம்மா வந்திருக்கா” என கத்தை மீசையுடன் குறி சொல்லி, அரிசி, காசு, துணி என எப்படியோ பேசி வாங்கிவிடுவார்.

சில நேரங்களில் அம்மா பேச்சுக்கொடுப்பதுண்டு. அவர் ஏதோ குறி சொல்ல, அம்மா ஏதோ கோர்த்து வாங்க, அவன் இன்னும் அதிகமாகத் தன் குறி சொல்லிச் செல்வான். ஒரு முறை அவர்களின் ஊர், வாழ்விடம், வாழ்க்கை என அம்மா விசாரிக்கத் தன்னுடைய சுக துக்கங்களையெல்லாம் சொல்லி, மோர் வாங்கி குடித்துச் சென்றது ஞாபகத்தில் இருக்கிறது.

“பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், ஊருக்குப் போகக் காசில்லை” என விதவிதமான கதைகளுடன் வாசல் தட்டும் மாந்தர்கள் இருந்தார்கள். இது போக, பல வியாபாரிகள் வாழ்வில் பங்காற்றினர். இன்றோ அனைத்தும் மால்களில் மூழ்கிப் போய்விட்டன. இந்த மால் சுனாமியில் மறைந்து போனவர்கள் பலர். தினம் தினம் நம் சாலைகளில் சந்தித்த வியாபாரிகள்: பூக்காரர், குடை ரிப்பேர், அம்மி கொத்துபவர்கள், வளையல் வண்டிக்காரர், பழைய பேப்பர், பாய் வியாபாரி, பாத்திர வியாபாரி, புளி வியாபாரி, மிளகாய் வியாபாரி, காய்கறி வண்டிக்காரர், பஞ்சுமிட்டாய் வண்டி, குல்பி வண்டி, பொரி உருண்டை, இடியாப்பக்காரர், துணி வியாபாரி.

சில மாதங்களுக்கு ஒருமுறை மூன்று பிராமணர்கள் வருவார்கள்—அப்பா, இரண்டு மகன்கள். வேதம் ஓதுவார்கள். எங்கள் அம்மா அவர்களை வீட்டிற்கு அழைத்து வேஷ்டி துணி கொடுத்து கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்புவார். என் அண்ணன் அம்மாவிடம் கோபிப்பான், “அவர்கள் உன்னை ஏமாற்றுகிறார்கள், அது தெரியாமல் அவர்களுக்கு நீ தானம் தருகிறாய்” என்று. “கொடுத்த புண்ணியம் எனக்கு, செய்த பாவம் அவர்களுக்கு” என அம்மா கடந்து போவார். இப்படி வேதத்தை யாசக யுக்தியாக வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்ற மனிதர்களை இன்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
தலைமுறைக்கு தலைமுறை வாழ்கைமுறை மாறுகிறது. என் குழந்தை பருவத்தில் தினம் தினம் விதியில் வரும் விந்தை மனிதர்கள் இன்று எளிதில் காண முடிவதில்லை. அவர்களின் பிள்ளைகள் இன்று கல்விபெற்று அவர்களின் வாழ்வும் மாறி இருக்கவேண்டும். வழக்கொழிந்து போன இதுபோன்ற யாசகங்கள் சமூக முன்னேற்றத்தையே காட்டுகிறது!
வாழ்வின் விளிம்புக்குத்தள்ளப்பட்டவர்களுக்கு இதுபோல ஏதாவது ஒரு வாய்ப்பு, யாசம் செய்து வாழ்ந்துவிடமுடிந்தது அந்நாளில், ஆனால் இன்று அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் சாலையோர யாசகங்கள் காண்கையில், இன்னும் இந்த மனித சமூகம் முன்னேற வேண்டும் என்றே தோன்ற வைக்கிறது.




Leave a comment