திருமணம்

திருமணம் என்பது சிறை! இவனுக்கு இவள், இவளுக்கு இவன் என எழுதப்பட்டுவிட்டது. முடிச்சாகிப் போனது. ‘கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்’ என்பது எல்லாம் பழங்கதை. படாதபாடு பட்டுக்கொண்டு, கொடுமைகளுக்கு ஆளாகி, வாழ்ந்த பெண்களின் வாழ்வை நேரடியாகவே கண்ட தலைமுறை நாம்.

திருமணம் என்பது சிறையல்ல. அது நமக்கு நாமே வைத்துக்கொண்ட வேலி என உணர்ந்து, அதைத் தேவையெனில் தூக்கி எறியும் தைரியம் இன்று வளர்ந்துவிட்டது. இது ஆரோக்கியமான முன்னேற்றம். ஆனால், வாழ்க்கை என்பது அந்த வேலிக்கு உள் இருக்கும் பெரும் மைதானத்தில் விளையாடுவதிலும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலும் தான் இருக்கிறது. வேலி ஓரத்தில் நின்று கொண்டு நிற்கவா, போய்விடவா என சதா சர்வகாலமும் மதில்மேல் பூனையாய் வாழ்வதில் அர்த்தம் இல்லை. திருமணம் என்ற பந்தத்தில் இருக்கவேண்டும், இல்லையேல் அதை உடைத்து எறிந்துவிட்டு மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டும். உள்ளே இருந்துகொண்டு புலம்புவதில் என்ன பயன்?

இந்தத் தலைமுறை திருமணங்களில் வேலியை உடைத்தெறியும் காரணங்கள் பல நேரங்களில் அற்பமானவையாகவும், திட்டமிட்ட ஏமாற்று வேலையாகவும் அமைவதைக் காணமுடிகிறது.

ஒரு முறை திருமணம்! வத்தலோ, தொத்தலோ! குறையோ, குடைச்சலோ கட்டிக்கொண்டு அழவேண்டியதுதான், என ஆணும், பெண்ணும் வாழ்வது ஒரு துருவம் என்றால், சுயநலத்திற்காக கணவனையோ, மனைவியையோ ஏமாற்றி தூக்கி எறிய நினைப்பது அடுத்த துருவம். இந்த இரண்டு துருவமும் ஆபத்து. முன்னது இயலாமையின் வெளிப்பாடு, பின்னது இளமையின் களியாட்டம். இது திருமணத்திற்கு முன்னே முறையான மனப்பொருத்தம், தீர விசாரித்து தராதரம் பார்த்து திருமணம் முடிப்பதில் கொஞ்சமேனும் தவிர்க்கலாம்.

மூன்றாவது துருவம் ஒன்றும் உண்டு. திருமணத்தை விதியே என ஏற்கவும் மாட்டார்கள், விடுதலை பெற்று வெளியேறவும் மாட்டார்கள். காலத்திற்கும் புலம்பல்! மனைவி வாயைத் திறந்ததாலே கணவனைக் குறை கூறியும், கேலி என்ற பெயரில் மனைவியை மட்டம் தட்டுவதும் தான் என வாழ்வது. இது வேலிக்கு உள்ளேயே வேலிவைத்து; சுகங்களை, மகிழ்வுகளை கொண்டாடாமல் வாழும் பரிதாப வாழ்வு அது.

“வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்” என்பார்கள். கணவன், மனைவியே என்றாலும் அவர், அவர் வாழ்கையை முழுமையாய் வாழ்ந்து, நிறைவான வாழ்வை வாழ்வது இனிமையானது என நினைக்கிறேன். அவர் அவர்களுக்குப் பிடித்த வாழ்வை வாழ்ந்து அதன் பின் விளைவுகளையும் ஏற்று முழுமையாக வாழவேண்டும். இங்கு உடைக்க முடியாத சுவர்கள் என்று ஏதும் இல்லை, சூழ்நிலைக்கது என்பதெல்லாம் மனம் சொல்லும் வாதம். குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக என முகமூடிகள் வைத்துக்கொண்டு புழுங்குவது அர்த்தமற்றதாகவே எனக்குத் தோன்றுகிறது. வாழ்வை மகிழ்வு நிறைந்ததாக மாற்றிக்கொள்ளுவது அவர் அவர்கள் கையில்தான் இருக்கிறது.

குரு

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started