அதிகாலை 5 மணிக்கு தயாராகி, ஆறு மணிக்கு இசாக்குவா Park & Rideல் இருந்து நால்வரும் கிளம்பினோம். அறிமுகங்கள் கடந்து திருமந்திரத்தில் தொடங்கிய பேச்சு, அக்கால சிலம்பம் ஆசிரியர் பற்றி திரும்பியது. Tin தொழிற்சாலையில் தகரங்களோட வேலை செய்பவர், கர்ம சித்தையுடன் இரவு ஒன்பது மணிக்கு வண்டி டயரில் தீமூட்டி தனக்கு வகுப்பு எடுத்தார் என கணேசன் நினைவு கூர்ந்தார். அன்றைய ஆசிரியர்கள் திறமை நிறைந்தவர்களாகவும், முழுமையான பயிற்சி செய்பவர்களாகவும் இருந்து நமக்கு ஓர் முன்மாதிரியாய் இருந்தனர், இன்று அதுபோன்ற ஆசிரியர்கள் இல்லை, இருந்தாலும் ஆர்வமுடன் படிக்கும் மாணவர்கள் இல்லை. இன்று சென்னையில் கலரி கற்க மாணவர்களை தேடும் ஆசிரியரை குறித்து பேசி கார்த்திக் அங்கலாய்த்தார்.
கணேஷ் அவரின் ஊரில் நடக்கும் புலி நடனம் பற்றி சொன்னார். புலி வேடமிட்டு நடனம் ஆடுபவர் கடுமையான பயிற்சி செய்ய வேண்டியிருக்கும், அப்போதுதான் அவர் ஊர் மக்கள் அனைவருடனும் அவர் நின்று ஆட முடியும். சாதாரணமாக காட்சி தரும் நபரும், களத்தில் இறங்கி கொம்பு சுற்றுவதும், குத்தாட்டம் போடுவதும், புலியோடு போட்டி போட்டு நடனம் ஆடுவதும், இயல்பான நிகழ்வாக இருக்கும். இன்று நம்மை சோம்பேரித்தனம் சூழ்ந்துகொண்டு விட்டது. அதுவும் இன்றைய குழந்தைகள் சுகவாசிகளாக மாறிவிட்டனர். தேக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் அறியா குழந்தைகளாக வளர்கிறார்கள் என சொல்லி முடித்தார்.
குரு காஞ்சிபுரத்தில் பொம்மைக்காரத்தெருவில் நடக்கும் வழு மரம் ஏறுதலை நினைவு கூர்ந்தார். ஓங்கி உயர்ந்து நிற்கும் நெடுஞ்சாண் கம்பத்தில் வழுக்கு பொருட்கள் தடவி இருக்க அதன் மேல் மனித கோபுரமாய் ஒருவர் மீது ஒருவர் ஏறி அதன் உச்சியில் உள்ள பரிசை எடுப்பதுதான் விளையட்டு, மக்கள் சுற்றி நிற்க சில அண்டாவில் மஞ்சள் தண்ணீர் நிறைத்து சிலர் அவர்கள் மீது அதை வாரி இறைக்க வழுக்கி விழுந்து, விழுந்து, மீண்டும் மீண்டும் முயற்சித்து அதனை எட்டிப்பிடிக்கையில் கூட்டத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஆனந்தம் பிறக்கும், புது நம்பிக்கை பிறக்கும். இப்படி எத்தனை எத்தனை விளையாட்டுக்கள், வீரத்தின் விளை நிலம் அல்லவா நம் பூமி.

இது தான் பாதை, இதுதான் பயணம்
இதோ வந்தே விட்டது பிராங்ளின் அருவியின் தொடக்கப் பாதை. இருள் சூழ்ந்த இடத்தில் நெடுஞ்சாலையின் அதிவேக வாகன சத்தம், காற்று மெல்ல செல்கின்ற சில் ஒலி, கடுங் குளிர் என புதுதாய் இருந்தது அவ்விடம், இத்தனை அதிகாலையிலும் எங்களுக்கு முன்னால் ஓர் வண்டி நின்றிருந்தது. அருவியின் உட்சாலை வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தார்ச்சாலையில் நடக்கத்தொடங்கினோம். இருமருங்கிலும் ஒதுங்கி குவியலாய் நின்றது பனி, மலைப்பாதையின் பக்கச் சுவர் போல காட்சி தந்தது. அந்தச் சாலையில் எங்களைத் தவிர யாரும் இல்லை. சற்று நடக்க நடக்க வெளிச்சம் எட்டிப்பார்த்தது, குளிர் கொஞ்சம் பழகிப்போனது, அடர்ந்த உடையில் சிலவற்றை தளர்த்த மனம் வந்தது. சற்று நேரம் நடந்ததில் சாலைகள் எங்கும் பனி கொட்டிக்கிடக்கும் இடத்தை அடைந்தோம், அதனை தாண்டி வழி நெடுகிலும் இப்படித்தான் பனி மூடிய பாதைகளாய் இருந்தது. இரண்டு அடி உயர பனியில் நடப்பது புதிய அனுபவமாக இருந்தது.

பனி மூடிய பாதை
அதிகாலைக் காற்று, மெல்லிய வெளிச்சம், வெள்ளைப்பனி மலை ஆனந்த சுகானுபவம்
உறுதியான பனியில் நடப்பது எளிதாக இருந்தது, ஆனால் கரைந்து ஒழுகி நீராய் பரவி உரைந்த தரை வழுக்கியது, காலணிகளில் பிடிப்பு கம்பிகளை (Traction Cleats) ஒட்டிக்கொண்டோம் கூடவே கொண்டுவந்திருந்த தாங்குக் குச்சிகளும் அவசியமானது. இயற்கையும் அதிமுக அமைச்சர்களின் உறவினர்கள் போலும் அடர்த்தியான தெர்மாக்கோல் போர்த்திக் கொண்டிருந்தது. ஆம் அந்த இரண்டு, மூன்று அடி உயர பனிப்படர்வுகள் பார்ப்பதற்கு தெர்மாக்கோல் போலத் தெரிந்தன. வளைந்து நெளிந்து மெல்ல மெல்ல மேல் நோக்கி இருந்தது பாதை, சல சலவென அருகில் ஓடும் நீரோடை, சீரிய வெளிச்சம், தெளிவான பாதை, சின்னச் சின்னப் பாலங்கள், பாலங்கள் நிறைந்த பனி, திட்டுத்திட்டாய் பனிக் கூட்டம், பேச்சுத் துணைக்கு நண்பர்கள் என அழகாக அமைந்தது எங்கள் பயணம்.

பனி சூழ்ந்த நீரோடை
ஓவென்ற ஓசையோடு கண்முன் விரிந்து ஓங்கி நின்றது அழகிய அருவி, ஆக்ரோஷமாய் பாய்ந்து விழும் நீர், பக்கத்திலேயே உறைந்து படர்ந்திருக்கும் நிலைத்துப்போன நீர்த்துளிகள், பட்டுச்சிதறும் நீர்த்துளிகள், கண்கள் ஆனந்தத்தை அள்ளிப்பருகியது. நெஞ்சுக்குள் மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது. அருவியின் அருகில் சென்று பிரம்மாண்டத்தின் விஸ்வரூப தரிசனம் கண்டோம். அருவியின் நீர்ச்சாரல் அனுபவம் வார்த்தைகளில் வடிக்க இயலாத சுகம். புகைப்படம் எடுப்பதற்காய் கையுரைகளை விலக்கி சில படங்களை எடுத்தோம். அதற்குள் கை உறைந்து விட்டது, அருவியின் அருகில் இருந்த குளிர் எங்களை அங்கிருந்து விறட்டி அனுப்பியது. அதிகாலை எழுந்து இத்தனை தூரம் நடந்ததும் இந்த ஆனந்ததத்தை அள்ளிப்பருகுவதற்கே! பிராங்கிளின் அருவி எங்களுக்கு முழுமையான மகிழ்வளித்து விடைகொடுத்தது.

பிராங்க்ளின் அருவி
வெளிச்சம் நிறைந்திருக்க தெரிந்த பாதையில் விரைந்து நடக்கலானோம், ஜெயமேகனின் குறுநாவல் கதையை குரு சொல்ல கேட்டபடி நடந்தோம், கூடவே கொண்டுவந்திருந்த மூக்குக்கடலை சுண்டல், இனிப்பு, பழங்கள் என சில ஆகாரங்களை உண்டோம். இபோதுதான் சில மக்கள் எதிர்பட ஆரம்பித்தனர். “எத்தனை தூரம்?”, “எப்படி இருக்கிறது அருவி?” என்ற கேள்விகளுக்கு விடையளித்தவண்ணம் விடைபெற்று வந்தோம். அரசியல், சினிமா, ஆன்மீகம் என பலதளங்களின் நிகழ்கால செய்திகளை விவாதித்தபடி முடிந்தது எங்கள் பயணம்.

நால்வர் அணி
மலையேற்றம் நல்ல உடற்பயிற்சி என்பதினும் மனமகிழ்வளிக்கும் செயல் அதனினும் நல்ல நண்பர்களோடான பயணம், மகிழ்வளிக்கும் இனிய அனுபவம்.
நன்றி!