Categories
Uncategorized

மனம்

அமெரிக்க முச்சந்திகளின் சாலையில் வாகனங்கள் பச்சை சமிஞ்ஞைக்காய் காத்திருக்கும் இடங்களில் கையில் ஓர் பதாகையுடன் எவரேனும் ஒருவர் நிற்பது இயல்பான காட்சி. கடுங்குளிரில் இதுபோல நிற்பதை பார்க்கும் போது மனம் இறங்கும். “இத்தனை வளர்ந்த இந்நாட்டில் கடுங்குளிரில் ஒருவர் இப்படி சாலையில் பிச்சை எடுப்பது ஏனோ?” என்ற கேள்விக்கு “அரசு இவர்களுக்கு அத்தனை வசதிகளையும் செய்துள்ளது, இவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் இவர்களுக்கு உதவக்கூடாது” என வாதிடுபவர்களும் உண்டு. பெரும்பாலும் தன்னந்தனியாக ஆணோ பொண்ணோ இப்படி சாலை சந்திப்புகளில் நிற்பதை பார்த்திருக்கிறேன். இன்னும் நகர்புற பகுதிகளில் சாலையோரமோ, மேம்பாலத்தின் அடியிலோ கொட்டகைபோட்டு, பெரும் மளிகைக்கடைகளில் உள்ள தள்ளுவண்டிகளில் ஒன்றை கையகப்படுத்தி தன் உடமைகளை வைத்துக்கொண்டு வாழ்பவர்களும் உண்டு. அமெரிக்காவின் ஆடம்பரமான நகரில் இது போன்ற பகுதிகளும் உண்டு என்பதை இங்கு வந்தபிறகே அறிந்தேன்! பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

இவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். இது பற்றி பேஸ்புக்கில் ஆதங்கத்தை பதிவிட்டேன். Seattle Homeless Outreach என்ற அமைப்பு அவர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைக்கிறது என அறிந்தேன். வாரம் ஒரு முறை முகாம் அமைத்து அவர்களுக்கு அண்ணம், தேவையான உதவிகள் வழங்குவதாக அறிந்து, நானும் என் மனைவியும் சென்றோம். நூற்றுக்காணக்கானவர்கள் வரிசையில் வந்து உணவு, உதவிகளை பெற்றுக்கொண்டு இருந்தனர். நாங்கள் சுய அறிமுகம் செய்து நாங்கள் கொண்டு வந்த உணவை வழங்கினோம். பின் ஒருங்கிணைக்கும் பெண்மணி எங்களை பல் துளக்கும் பேஸ்ட், பிரஷ் நிறைந்த கூடையை கொடுத்து அதை கேட்பவர்களுக்கு கொடுக்குமாறு கொடுத்து சென்றார். கூட்டம், உணவு, பரஸ்பர பரிகாசங்கள், பேச்சு, மகிழ்ச்சி என இருந்தது. எங்களுக்குத்தான் அந்த இடத்தில் நின்று பணி புரிய மிகவும் தயக்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது. ஆஜானுபாகுவாக இருக்கும் வெள்ளை அமெரிக்க பிச்சைகாரர்கள், கரகரத்த குரலில் பேசும் கருப்பினத்தவர்கள் என புதிய மனிதர்களாக தெரிந்தனர். உதவி செய்து கொண்டு இருப்பது ஓர் அச்ச உணர்வையே தந்தது. அவர்களின் மொழி, அவர்களின் எள்ளல் நகைச்சுவைகள் எங்களுக்கு விளங்கவில்லை. உணவு இடத்தின் வாசம் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அச்ச உணர்வை தந்தது. ஒரு வழியாக இரண்டு மணி நேரம் ‘நான் கடவுள்’ படம் பார்ப்பதைப்போல, விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் கழித்தோம். அதன் பின் அந்த வேவையை செய்ய மனம் துணியவில்லை.

எப்போதாவது என்னிடமும் பணமாக காசு இருந்து, என் மனதுக்கு சரியெனப்பட்ட போது கொடுத்திருக்கிறேன். பல நேரங்களில் என் எண்ண ஓட்டங்கள் ஓடி முடிவெடுப்பதற்கு முன் பச்சை விளக்கு என்னை நகர்த்திவிடும். நேற்று அப்னா பஜார் என்ற இந்திய கடை இருக்கும் வணிக வளாகத்தில் ஓர் இந்திய சாயல் பெண் கையில் பதாகையுடன் நின்று கொண்டிருந்தார். இப்படி ஓர் ஆசிய மனிதர் வீதியில் நின்று யாசகம் செய்வதை இங்கு இதுவரை பார்த்ததில்லை. இந்த கொரோனா காலத்தில் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் இல்லை என்ற ஒரு தகவல் பலகையோடு நின்று இருந்த அவரை கடந்து சென்றேன். அவரை அப்படி ஓர் அட்டை பதாகையுடன் பார்த்தது மனதை என்னவோ செய்தது. தூரலும் குளிரும் இருந்த அந்நாளில், என் தாயை ஒத்த வயது பெண் இப்படி சாலையோரம் நின்றதை பார்த்து பரிதவித்தேன். நான் காரை திருப்பி என்னிடம் இருந்த இருபது டாலர் பணத்தை அவருக்கு கொடுத்தேன். அருகில் வந்து பெற்றுக்கொண்ட அந்த பெண் நகங்களில் அழகான வண்ணப்பூச்சு இருந்ததை கண்ட பின் என் மனம் ஏனோ ‘இவரு பெரிய வல்லளு? கையில இருக்கிறது அள்ளி கொடுக்கிறாரு? அந்த அம்ம சொகுசா நல்லாத்தான் இருக்கு’ என மனக்குரங்கு கேள்வி கேட்க ஆரம்பித்தது. ஏனோ இந்த நிகழ்விலிருந்து மீள எனக்கு பல நிமிடங்கள் ஆனது.இரண்டு வேறுபட்ட உணர்வுகளை ஒரே மனம் தான் வழங்குகிறது. பிச்சைக்காரர்களின் கூட்டத்துக்கு சென்ற அதே மனம் ஒரு மணி நேரத்துக்கு மேல் தயங்கியது. பரிதவித்த மனம் நகங்களின் வண்ணங்களை பார்த்தும் திசைமாறியது.

குரு Dec 5 2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s